
பிரம்மச்சாரி கோலத்தில் முருகனை தரிசிக்க கேரள மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள கிடங்கூருக்கு செல்லுங்கள்.
வனமாக இருந்த இப்பகுதியில் கவுனமகரிஷி தவமிருந்து வந்தார். ராவண வதத்திற்காக இலங்கை சென்ற ராமர், அயோத்தி திரும்பும் போது மகரிஷியை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் சந்திக்கவில்லை. குடும்பஸ்தனான ராமர் மனைவியுடன் இருந்த காரணத்தால் தன்னை மறந்தார் என மகரிஷி வருந்தினார். இதன்பின் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி தவமிருக்க தொடங்கினார். அவரும் குடும்பஸ்தர் என்பதால் தன்னை ஏற்பாரோ என பிரம்மச்சாரி கோலத்தில் முருகப்பெருமானை வழிபட்டார். மகரிஷி பிரதிஷ்டை செய்த முருகன் சிலையே இங்கு மூலவராக உள்ளது.
சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தின் மீது மயில் வாகனம் உள்ளது. மருத்துவ குணம் கொண்ட குறுந்தொட்டி என்னும் மரத்தால் உருவாக்கப்பட்ட கூத்தம்பலம் இங்குள்ளது. ராமாயண, மகாபாரத காட்சிகளும், பரத முனிவரின் நடன முத்திரைகள் இங்கு வரையப்பட்டுள்ளன. திருவிழா காலத்தில் கூத்துகள் நடத்தப்படுகிறது. முருகனைக் குறித்த 'பிரம்மச்சாரி கூத்து' இதில் பிரசித்தி பெற்றது. வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும், எதிரிகளை அடக்கவும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலில் உள்ள புவனேஸ்வரி அம்மனுக்கு குருதி பூஜை நடக்கிறது.
பிரம்மச்சாரி கோலத்தில் முருகன் இருப்பதால் சன்னதிக்குள் பெண்களுக்கு அனுமதியில்லை. கொடிமரத்தின் அருகே நின்று மட்டும் தரிசிக்கலாம். குழந்தைப்பேறு பெற 'பிரம்மச்சாரி கூத்து' நிகழ்ச்சியை நேர்த்திக்கடனாக பக்தர்கள் நடத்துகின்றனர். நோய் தீர பஞ்சாமிர்த அபிஷேகம், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனை செய்கின்றனர். நினைத்தது நிறைவேற துலாபாரம் அளித்தும், காவடி சுமந்தும், சுட்டு விளக்கு ஏற்றியும் வழிபடுகின்றனர். இங்கு பெருமாள், பகவதி, ஐயப்பன் சன்னதிகள் உள்ளன.
எப்படி செல்வது: கோட்டயம் - பாலா சாலையில் 21 கி.மீ.,
விசேஷ நாள்: திருக்கார்த்திகை, தைப்பூசம், மாசி பிரம்மோற்ஸவம்
நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04822 - 254 478, 257 978
அருகிலுள்ள தலம்: வைக்கம் மகாதேவர் கோயில் 35 கி.மீ.,