ADDED : ஜூன் 10, 2022 08:46 AM

பிரம்மச்சாரியாக முருகப்பெருமான் இருக்கும் தலம் கேரள மாநிலம், கிடங்கூர். இங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலை வாங்க தரிசிப்போம் வளம் பெறுவோம்.
இலங்கையில் இருந்து சீதையை மீட்டுக் கொண்டு வரும் வழியில், தன்னை சந்திப்பதாகச் சொல்லிச் சென்ற ராமனின் வருகைக்காக காத்திருந்தார் கவுன முனிவர். அவரைச் சந்திக்காமலேயே அயோத்தி சென்றார் ராமர். தன்னை மறந்து சென்றதற்கு அவரது இல்லற வாழ்க்கையே காரணம் என நினைத்தார் முனிவர்.
ஒரு மனைவியை உடைய ராமனே நம்மை மறந்து விட்டார், இரண்டு மனைவிகளைக் கொண்ட முருகப்பெருமான் நமது வேண்டுதலைக் கவனிப்பாரோ, மாட்டாரோ' என்று நினைத்த அவர், முருகப்பெருமானின் சிலையை பிரம்மச்சாரி கோலத்தில் செய்து கோயில் நிறுவினார். இதனால் இவரை 'பிரம்மச்சாரி முருகன்' என அழைக்கின்றனர். இவருக்கு 'சுப்பிரமணியசுவாமி', 'கிடங்கூரப்பன்' என வேறு பெயர்களும் உண்டு.
கேரளக் கோயில்களிலேயே மிகவும் உயரமான கொடி மரம், மயில் வாகனம், பலி பீடம் ஆகியவை இங்கு உள்ளன. சன்னதிக்கு வெளியே கொடி மரத்தின் அருகில் இருந்தே பெண்கள் முருகனை தரிசிக்க முடியும். கோயில் வளாகத்தில் திருமால், சாஸ்தா சன்னதிகள் உள்ளன. இங்கு
கூத்தம்பலத்தில் அருள் செய்யும் புவனஷே்வரி அம்மனுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் குருதி பூஜை நடக்கிறது. வழக்கில் வெற்றி பெறவும், தொழில் போட்டிகளைச் சமாளிக்கவும், எதிரி பயம் நீங்கவும் இதில் பங்கேற்கின்றனர். கூத்தம்பலம் மண்டபத்தில் ராமாயணக் காட்சிகளும், பரதமுனிவரின் நாட்டிய முத்திரைகள் இடம் பெற்றுள்ளன. விழாக்காலத்தில் முருகப் பெருமானைப் பற்றி நடத்தப்படும் 'பிரம்மச்சாரி கூத்து' சிறப்பானது.
எப்படி செல்வது: கோட்டயத்தில் இருந்து ஏற்றுமானுார் வழியாக 14 கி.மீ.,
விசஷே நாள்: ஆவணி திருவிழா, துர்காஷ்டமி, திருக்கார்த்திகை, தைப்பூசம்
நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 04822 - 254 478
அருகிலுள்ள தலம்: வைக்கம் மகாதேவர் கோயில் 24.கி.மீ.,
நேரம்: அதிகாலை 4:00 - 12:00 மணி; மாலை 5:00 - 8:30 மணி
தொடர்புக்கு: 04829 - 215 812
