/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கையில் பணம் தங்க கச்சனம் கிராமம் வாங்க!
/
கையில் பணம் தங்க கச்சனம் கிராமம் வாங்க!
ADDED : நவ 17, 2017 10:19 AM

கல்வியும், திறமையும் இருந்தால் போதாது. அவற்றைப் பயன்படுத்தினால், செல்வம் தங்கும் என்ற வாழ்க்கை தத்துவத்தை விளக்கும் கைச்சின்னேஸ்வரர் கோயில், திருவாரூர் மாவட்டம் கச்சனம் கிராமத்தில் உள்ளது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் சென்று வருவது நல்லது.
தல வரலாறு: கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆஸ்ரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய திட்டம் தீட்டினான். கவுதம முனிவர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கம் உடையவர். ஒருநாள் நள்ளிரவில், சேவலாக உருவெடுத்த இந்திரன் ஆஸ்ரமத்தின் அருகில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். பின் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, வீட்டுக்குள் நுழைந்தான்.
“விடியவே இல்லை, நேரம் கெட்ட நேரத்தில் சேவல் கூவியுள்ளது,”என்று சொல்லி விட்டு, அகலிகையுடன் உறவு கொண்டான். ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஆஸ்ரமத்துக்கு திரும்பினார். இந்திரனை கண்ட முனிவர் சாபமிட்டார். தன்னை ஒரு கல்லாக அகலிகை மாற்றிக் கொண்டாள்.
சாபம்பெற்ற இந்திரன் பதவியை இழந்தான். அவனது மனைவி இந்திராணி, விமோசனம் கோரி சிவனிடம் முறையிட்டாள். இந்திரன் மூலம் மணலால் லிங்கம் செய்து பூஜிக்கும்படி சொன்னார் சிவன்.
மணலால் செய்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய முடியாமல் இந்திரன் துன்பப்பட்டான். குற்றம் செய்த அவனை சிவன் மன்னிக்கவில்லை. பின்னர் அம்பாளை நினைத்து தவமிருந்தான். அதற்கும் பலனில்லை. பிறகு தான் அமைத்த லிங்கத்தைக் கட்டிப்பிடித்து, “இனி பெண் வாசனையே நுகர மாட்டேன்,” என கதறினான். பின்னர் சிவன் விமோசனம் கொடுத்தார். அவன் எழுப்பிய லிங்கத்தில் எழுந்தருளினார்.
லிங்கத்தைக் கட்டிப் பிடித்தபோது, இந்திரனின் விரல்கள் பதிந்ததால் சுவாமிக்கு, 'கைச்சின்னேஸ்வரர்' என பெயர் வந்தது. இங்குள்ள அம்பாளுக்கு 'பல்வளை நாயகி' என்று பெயர்.
விசேஷ சிலையமைப்பு: இக்கோயிலின் கோஷ்டத்தில் துர்க்கை, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி உள்ளனர். தனி சன்னதியில் மகாலட்சுமி இருக்கிறாள். மனிதன் வீரமும் கல்வியும் உடையவனாக இருந்தால் மட்டும் போதாது. அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரஸ்வதியை முதலிலும், அடுத்து ஆற்றலுக்கு உரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) பிரதிஷ்டை செய்துள்ளனர். சோம்பலை விட்டவர்களே செல்வத்தை அடைய முடியும் என்பதற்காக இவர்களை அடுத்து மகாலட்சுமி அருள் பாலிக்கிறாள். சீனிவாசப் பெருமாளும் இருக்கிறார். இங்கு மேதா தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.
எப்படி செல்வது: திருவாரூர்- திருத்துறைப்பூண்டி சாலையில் 15 கி.மீ., துாரத்தில் கச்சனம்
விசேஷ நாட்கள்: திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 94865 33293
அருகிலுள்ள தலம்: 11 கி.மீ.,ல் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில்