/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பிள்ளை வரத்துக்கு புல்லாணி வாங்க!
/
பிள்ளை வரத்துக்கு புல்லாணி வாங்க!
ADDED : அக் 01, 2012 03:21 PM

குழந்தை பாக்கியத்திற்காக தவமிருக்கும் பெண்களில் சிலருக்கு அடிக்கடி கர்ப்பசிதைவும் ஏற்படுவதுண்டு. இவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் கோயிலில், பாயாச நைவேத்யம் செய்து மழலை பாக்கியம் பெறலாம். புரட்டாசி இரண்டாம் சனியான இன்று இவரது திவ்யதரிசனம் பெறுவோமா!
தல வரலாறு:
புல்லவர், கண்ணுவர், காலவர் என்ற மகரிஷிகள் மகாவிஷ்ணுவின் தரிசனம் வேண்டி யாகம் நடத்தினர். மகிழ்ந்த சுவாமி அவர்களுக்கு தாயார்களுடன் காட்சி தந்தார். அவர்களது வேண்டுகோளின்படி காட்சி தந்த இடத்தில் எழுந்தருளினார். அந்தத் தலமே திருப்புல்லாணி. உலகத்திற்கெல்லாம் தலைவர் என்பதால் மகரிஷிகள் இவருக்கு ஆதிஜெகந்நாதர் என்று
திருநாமம் சூட்டினர். தாயாருக்கு பத்மாசினி என்பது திருநாமம்.
சயனத்தில் ராமன்:
சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதி கேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப் புல் மீது சயனம் கொண்டு ஓய்வெடுத்தார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.
பாயாச நைவேத்யம்:
குழந்தை பாக்கியத்திற்காக தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் நடத்தினார். யாககுண்டத்தில் இருந்து வெளிப்பட்ட பாயாசத்தை மனைவியருக்கு கொடுத்தார். பருகிய அவர்களுக்கு ராம சகோதரர்கள் பிறந்தனர். இதன் அடிப்படையில், ராமர் வழிபட்ட இத்தலத்தில் சுவாமிகளுக்கு காலை 10.30 மணி பூஜையின்போது, பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. குழந்தைப்பேறு வேண்டுபவர்களும், அடிக்கடி கருச்சிதைவு ஏற்படுபவர்களும் இங்குள்ள சந்தான கிருஷ்ணர் சந்நிதியில் யாகம் நடத்தி,பாயாசம் படைத்து குழந்தை பிறக்க வேண்டு கிறார்கள்.
பட்டாபிராமன்:
சீதையை மீட்டு ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்த ராமர், ஆதிஜெகந்நாதரைத் தரிசித்துச் சென்றார். இவர் பட்டாபிராமன் என்ற பெயருடன் சீதை, லட்சுமணருடன் கொடி மரத்துடன் கூடிய சந்நிதியில் காட்சி தருகிறார். சித்திரை மாதத்தில்
இவருக்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
வெற்றி பெருமாள்:
இத்தலம் வந்த ராமர், சீதையை மீட்க அருளும்படி ஜெகந்நாதரிடம் வேண்டினார். சுவாமி அவருக்கு ஒரு பாணம் கொடுத்தார். ராமன், அந்த பாணத்தை பிரயோகித்து ராவணனை அழித்தார். இதன் அடிப்படையில் எச்செயலையும் துவங்கும்முன்பு, ஜெகந்நாதரை வேண்டிக்கொண்டால் அது வெற்றி பெறும் என்கிறார்கள். ராமர் வழிபட்டதால் இவர் 'பெரிய பெருமாள்' என்று பெயர் பெறுகிறார்.
சேர்த்தி தாயார்:
பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் சேர்த்தி காட்சி (இணைந்து) தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.
சேதுக்கரை:
திருப்புல்லாணியில் இருந்து 4 கி.மீ., தூரத்தில் சேதுக்கரை உள்ளது. ராமர் இங்கிருந்துதான் இலங்கை செல்ல பாலம் அமைத்தார். இங்கு ஆஞ்சநேயருக்கு கோயில் இருக்கிறது. இங்குள்ள 'ரத்னாகர தீர்த்த' கடலில் அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.
ஸ்ரீதேவி பூதேவியுடன் நரசிம்மர்:
பொதுவாக மகாலட்சுமியை மடியில் இருத்தி காட்சி தரும் நரசிம்மர், இங்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார். புராதனமான கோயில்களில் மட்டுமே காணக்கூடிய அமைப்பு இது. நரசிம்மரின் இந்த தரிசனம் விசேஷமானது. தவிர, ஜெகந் நாதர் சன்னதி கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். பக்தர்கள் இவருக்கு சந்தன காப்பிட்டு வழிபடுகிறார்கள்.
இருப்பிடம்:
ராமநாதபுரத்தில் இருந்து 9 கி.மீ.,
திறக்கும் நேரம்:
காலை 7- 12.30, மாலை 3.30- இரவு 8.30.
போன்:
04567- 254 527.