/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சித்தம் தெளிய சித்தர் கோயிலுக்கு வாங்க!
/
சித்தம் தெளிய சித்தர் கோயிலுக்கு வாங்க!
ADDED : ஏப் 22, 2013 12:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலங்களும்,யுகங்களும் மாறியதால் மனிதநேயம் குறைந்து விட்டது. சரியான வாழ்க்கை பாதை தெரியாமல் மக்கள் தவிக்கும் சூழ்நிலை உள்ளது. ஆனால், காலத்தை கடந்த சித்த புருஷர்கள் அவ்வப்போது அவதாரம் செய்யத்தான் செய்கின்றனர். இவர்கள் மக்களை நல்வழிப்படுத்தி வாழ்க்கைப்பாதையை செம்மையாக்குகின்றனர். இந்த சித்தர்களை ஒரு சேர தரிசிக்க சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மாடம்பாக்கம் ஸ்ரீ சக்ர மகாமேரு பதினெட்டு சித்தர்கள் பிருந்தாவன சக்தி பீடத்திற்கு சென்று வரலாம்.
தல வரலாறு:
சேஷாத்திரி சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்ட ஜோதிடர் கே.வி.எல்.என். சர்மாவின் ஆலோசனைப்படி இக்கோயில் எழுப்பப்பட்டது. இங்கு ஸ்ரீ சக்ரநாயகி லலிதா பரமேஸ்வரி அம்பாள் பிரதானமாக இருக்கிறாள். எனவே இதை லலிதா பரமேஸ்வரி கோயில் என்றும் கூறுகின்றனர்.
சிறப்பம்சம்:
கோயில்களில் குறிப்பிட்ட ஒரு சித்தரை மட்டும் வேண்டுமானால் தரிசிக்கலாம். ஆனால், இங்கு பாம்பாட்டி சித்தர், கருவூரார், வள்ளலார், குதம்பை சித்தர், கபிலர் சித்தர், சென்னிமலை சித்தர், கஞ்சமலை சித்தர், கடுவெளி சித்தர், பட்டினத்தடிகள், இடைக்காடர், அழுகணி சித்தர், அகப்பேய் சித்தர், கைலாய கம்பளிச்சட்டைமுனி சித்தர், சிவவாக்கியர், சட்டைமுனி, புலிப்பாணி, காகபுஜண்டர், போகர் ஆகிய பதினெட்டு சித்தர்களையும் ஒரு சேர தரிசிக்கலாம். எல்லா சித்தர்களுக்கும் அற்புதமான சிலை உண்டு. இவர்களைத் தரிசித்தால், வாழ்க்கை என்றால் இன்னது தான் என்று நம் சித்தம் (மனம்) தெளிவடையும்.
பிற சந்நிதிகள்:
இங்கு ஒரே பச்சைக்கல்லில் உருவான மகாமேரு அம்பிகை சந்நிதி உள்ளது. சேஷாத்திரி சுவாமிகள், குருவாயூரப்பன், சக்தி பீட கணபதி, வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், ஆஞ்சநேயர், கோதண்டராமர், நாகராஜர், முனீஸ்வரர், பச்சைக்கல் ராஜ காளியம்மன், தட்சிணாமூர்த்தி, காமதேனு, நால்வர், நந்திகேஸ்வரர், மகாவிஷ்ணு, பிருந்தா சந்நிதிகள் அமையப் பெற்றுள்ளது. நவக்கிரகங்களுக்கு சந்நிதி கிடையாது. 18 சித்தர்களும் கிரக தோஷங்களை நீக்கி, நவக்கிரகங்களின் சக்திகளையும், செயல்பாடுகளையும் ஏற்று அருள்பாலித்து வருவதால் இவ்வாறு செய்துள்ளனர். இங்கு பசுமடம் உள்ளது. தினமும் அன்னதானம் உண்டு. இலவச மருத்துவமுகாம், முதியோர்களுக்கு ஆடைதானம் போன்ற சமூக நல திட்டங்களும் நடக்கிறது. திருவிழா மற்றும் சிறப்பு பூஜை காலங்களில் பெண்களே யாகம் நடத்துகின்றனர். அவர்களே நேரிடையாக பூஜையும் செய்யலாம். வரும் 25ம் தேதி இங்கு பெண்கள் நடத்தும் அகண்ட சித்தர் யாகம் நடக்கிறது. பக்தர்கள் பங்கேற்கலாம்.
இருப்பிடம்:
தாம்பரம் ராஜகீழ்ப்பாக்கத்தில் இருந்து பிரியும் ரோட்டில் 3 கி.மீ. . மாம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில் அருகில்.
போன்:
98840 57317, 044 2493 8734.