ADDED : பிப் 02, 2020 10:39 AM

நாட்டின் தலைநகர் டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரா (பாலாஜி) மந்திர் என்னும் பெயரில் ஏழுமலையான் கோயில் உள்ளது. திருப்பதி போல இங்கு முடி காணிக்கை செலுத்துவது சிறப்பு.
50 ஆண்டுக்கு முன் வேலைவாய்ப்பு, குடும்பச் சூழல் காரணமாக இப்பகுதியில் குடியேறிய மக்கள் கோயிலை நிர்மாணித்து வழிபட்டனர். நீதிபதி ராஜகோபால அய்யங்காரின் தலைமையில் ராஜ கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஸ்ரீவெங்கடஸ்வரா மந்திர் சொசைட்டியினர் நிர்வகிக்கின்றனர்.
ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது. கருவறையில் சீனிவாசப்பெருமாள் மூலவராகவும், அலர்மேல்மங்கை தாயார் தனி சன்னதியிலும் அருள்புரிகின்றனர். முன்புறம் 41 அடி உயர கொடிமரம் செப்புக் கவசத்துடன் உள்ளது. ஆண்டாள், அனுமன், பன்னிரு ஆழ்வார்கள், நிகமாந்த மகாதேசிகன், லட்சுமி நரசிம்மர், சுதர்சனாழ்வார், ஹயக்ரீவர், கோபாலர், ஆதிவராகர் சன்னிதிகள் பிரகாரத்தில் உள்ளன. இங்குள்ள கண்ணாடி அறை கலைநயம் மிக்கது. மூன்று ஆண்டுக்கு ஒருமுறை காய்க்கும் மாமரமே தலவிருட்சமாகும். வளாகத்தில் உள்ள நந்தவனத்திலேயே பூஜைக்குரிய பூக்கள், துளசி சேகரிக்கப்படுகின்றன. நம்மாழ்வார் சன்னதியின் மீது குடை விரித்தது போல மகிழ மரம் இருப்பது சிறப்பாகும்.
சித்ரா பவுர்ணமியன்று கஜேந்திர மோட்ச விழா சிறப்பாக நடக்கும். வசந்த மண்டபத்தின் அருகில் கஜேந்திரன் என்னும் யானையின் சிலை உள்ளது. இதன் அருகிலுள்ள தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு யானை நீராட வரும் ஐதீகம் பின்பற்றப்படும். அப்போது பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி வலம் வருவார்.
கார்த்திகை மாத உத்திரட்டாதியன்று நடக்கும் வார்ஷீக விழாவில் காலையில் அபிஷேகமும், மாலையில் வீதியுலாவும் நடக்கும். செவ்வாய்க்கிழமையில் அனுமனுக்கு அபிேஷகமும், மார்கழி மூலத்தன்று வடைமாலை சேவையும் நடக்கும்.
பக்தர்கள் விருப்பம் நிறைவேற திருப்பதி போலவே இங்கும் முடி காணிக்கை செலுத்துகின்றனர். காது குத்துதல், அங்கப் பிரதட்சணம், அட்சர அப்யாசம் போன்றவையும் நிறைவேற்றுகின்றனர். இங்குள்ள பாடசாலையில் நாலாயிர திவ்ய பிரபந்தம், ஆழ்வார்களின் வரலாறு பக்தர்களுக்கு சொல்லித் தரப்படுகிறது. தினமும் அதிகாலையில் விஸ்வரூப தரிசனத்தின் போது கோபூஜையும் நடக்கிறது.
எப்படி செல்வது: டில்லியில் இருந்து காந்தி மார்க்கம் வழியாக 22 கி.மீ.,
விசேஷ நாட்கள்: வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிவாரம், பங்குனி உத்திரம்
நேரம்: காலை 7:00 - 11:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 011 - 2610 9096
அருகிலுள்ள தலம்: லட்சுமி நாராயண் மந்திர் (மதர் தெரசா கிரஷன்ட் வழியாக 12 கி.மீ.,)