/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
குழந்தை இல்லையா! 'உய்யால' நடத்துங்க!
/
குழந்தை இல்லையா! 'உய்யால' நடத்துங்க!
ADDED : ஏப் 25, 2016 12:58 PM

கிருஷ்ணா மாவட்டம் வேதாத்ரி நரசிம்மர் கோவிலில் ஐந்து நரசிம்மர்கள் அருள்பாலிக்கின்றனர். இங்கு குழந்தைப் பேறுக்காக நடத்தும் 'உய்யால' வழிபாடு சிறப்பு மிக்கது.
தல வரலாறு: சோமாக்சுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் வேதங்களைத் திருடிக் கொண்டு கடலுக்குள் மறைந்தான். பிரம்மா நாராயணரிடம் முறையிட, அவர் மச்சாவதாரம் எடுத்து வேதங்களை மீட்டார். அந்த வேதங்கள் மனித வடிவெடுத்து நாராயணருக்கு நன்றி தெரிவித்தன. தாங்கள் இருக்கும் இடத்தில் பெருமாளும் தங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தன. இரண்யனை வதம் செய்த பின் அங்கு வருவதாக வேதங்களிடம் பெருமாள் உறுதிஅளித்தார். பெருமாளின் வருகையை எதிர்பார்த்து கிருஷ்ணவேணி நதிக்கரையிலுள்ள சாளக்கிராம மலையில் வேதங்கள் தங்கின. இரண்யவதம் முடித்த பின், பெருமாள் நரசிம்மராக வேதங்களுக்கு காட்சியளித்தார். அவரது உக்கிரம் அதிகமாக இருந்தது. எனவே 'ஜ்வாலா நரசிம்மர்' என அழைக்கப்படுகிறார்.
ஐந்து நரசிம்மர்: வேதங்களை அழைத்துச் செல்ல வந்த பிரம்மா, கிருஷ்ணவேணி நதிக்கரையில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராம கல்லுடன் புறப்பட்டார். ஆனால், அந்த கல்லின் உக்கிரத்தை பிரம்மாவால் தாங்க முடியவில்லை. அதை நதிக்கரையிலேயே வைத்து விட்டு சென்று விட்டார். இந்த சாளக்கிராம நரசிம்மர் இத்தலத்தில் அருள்பாலிக்கிறார். பிற்காலத்தில் ராமரின் சகோதரி சாந்தாவின் கணவரான ரிஷ்யசிருங்கர், வேதாத்ரி மலைக்கு வந்த போது சாளக்கிரம நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்கும் விதத்தில் லட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார். இதன் பின் உக்ர நரசிம்மர் லட்சுமி நரசிம்மராக மாறினார். லட்சுமி நரசிம்மரைத் தரிசிக்க வைகுண்டத்தில் இருந்து கருடாழ்வார் வந்தார். அவர் தன் பங்கிற்கு ஒரு நரசிம்மரை இங்கு பிரதிஷ்டை செய்தார். அவருக்கு வீர நரசிம்மர் என்பது பெயர். ஜ்வாலா நரசிம்மர், சாளக்கிராம நரசிம்மர், லட்சுமி நரசிம்மர், வீர நரசிம்மர் ஆகியோருடன் மூலவராக
வீற்றிருக்கும் யோகானந்த நரசிம்மர் என பஞ்ச நரசிம்மர்கள் இங்கு வீற்றிருக்கின்றனர். அடிவாரத்தில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்று வடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சநேயருக்கு சுதை சிற்பம் உள்ளது.
உய்யால வழிபாடு: குழந்தை இல்லாதவர்கள் யோகானந்த நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். 'உய்யால' என்றால் 'தொட்டில்'. குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும், செஞ்சு லட்சுமி தாயாரையும் தொட்டிலில் இட்டு ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
இருப்பிடம்: விஜயவாடா- ஐதராபாத் சாலையில் 60 கி.மீ., தூரத்தில் சில்லுக்கல்லு. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 10 கி.மீ., தூரத்தில் வேதாத்ரி.
திறக்கும் நேரம்: காலை 6.00 - மதியம் 1.00, மாலை 3.00- இரவு 8.30 மணி
தொலைபேசி: 08678- 284 899, 284 866

