
குடம் குடமாக பானகத்தை வாயில் ஊற்றினாலும், பாதியைக் குடித்து விட்டு மீதியைக் கொப்பளித்து விடும் பானக்கால நரசிம்மர், விஜயவாடா மங்களகிரியில் கோவில் கொண்டிருக்கிறார்.
தல வரலாறு: நமுச்சி என்ற அசுரன் பிரம்மாவிடம், ஈரமான அல்லது காய்ந்த பொருட்களால் தனக்கு அழிவு ஏற்படக் கூடாது என்று வரம் பெற்றான். இதைப் பயன்படுத்தி அவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்தான். அவனை எந்தப் பொருளாலும் கொல்ல முடியவில்லை. தேவர் தலைவன் இந்திரன் விஷ்ணுவைச் சரணடையவே, அவர் சக்கரத்தை ஏவினார். அது கடலில் மூழ்கி நுரையில் புரண்டு ஈரம் போலவும், காய்ந்தது போலவும் காட்சியளித்தது. அது சீறிப் பாய்ந்து அசுரனின் தலையை அறுத்தது.
நமுச்சியை வதம் செய்த விஷ்ணு, உக்கிர சக்தி மாறாமல் நரசிம்ம வடிவத்தில் மங்களகிரியில் தங்கினார். அவரை சாந்தப்படுத்த வெல்லம், எலுமிச்சை கலந்த பானகம் அளிக்கப்பட்டு வருகிறது. குடம் குடமாக பானகம் குடிப்பவர் என்பதால், இவருக்கு 'பானக்கால நரசிம்மர்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
பாதி மாயம் மீதி பிரசாதம்: நரசிம்மரின் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. இந்த வாயில் நான்கைந்து சட்டி பானகத்தை அர்ச்சகர் ஊற்றுவார். அப்போது, 'மடக் மடக்' என்னும் மிடறல் சப்தம் கேட்கும். குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடும்.
சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவார்கள். சில சமயங்களில் நரசிம்மரின் வாயில் இருந்து குறிப்பிட்ட அளவு பானகம் வெளியேறுகிறது. கோவிலிலேயே பானகம் விற்பனைக்கு வைத்துள்ளனர். .
குகையில் ரங்கநாதர்: கோவிலின் பின்புறம் லட்சுமி தாயாருக்கு சன்னிதி உள்ளது. நரசிம்மர் சன்னிதிக்கு வெளியே குகை ஒன்றின் வாசல் உள்ளது. இங்கு விஷ்ணு சிலை இருக்கிறது. இந்த குகை 9 கி.மீ., தூரம் கொண்டது. உண்டவல்லி என்னும் இடத்திலுள்ள 25 அடி நீள ரங்கநாதர் சிலையை இந்த பாதை சென்றடைகிறது. பாதுகாப்பு கருதி குகை வாசல் மூடப்பட்டுள்ளது.
அடிவாரக்கோவில்: மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மருக்கு கோவில் உள்ளது. இங்கு 11 நிலை கொண்ட 153 அடி உயர கோபுரம் உள்ளது. இந்த நரசிம்மர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 108 சாளக்கிராம கற்களால் ஆன மாலை அணிந்திருக்கும் இவர் பட்டுபீதாம்பரதாரியாக காட்சி தருகிறார். ராஜ்யலட்சுமி தாயாரும் இங்கு அருள்கிறாள்.
இருப்பிடம்: விஜயவாடா- குண்டூர் சாலையில் 12 கி.மீ., குண்டூரில் இருந்து விஜயவாடா வழியில் 21 கி.மீ.,
திறக்கும் நேரம்: மலைக்கோவில்: காலை 6.00- மதியம் 2.00 மணி அடிவாரக் கோவில்: காலை 6 .00 - மதியம் 12.30 மணி, மாலை 4.00 - இரவு 8.00 மணி.
தொலைபேசி: மலைக்கோவில்: 08645- 233 174 அடிவாரக் கோவில்: 08645- 232 945.
கோடை கோவில் தரிசனம்: பக்தர்கள் விரும்பும் வரத்தை உடனடியாக அளிக்கும் பஞ்ச நரசிம்மர் கோவில்கள் ஆந்திராவில் இருக்கின்றன. இந்தக் கோவில்களுக்கு சென்று வந்தால் நினைத்தது நடக்கும். கோடை விடுமுறையில் இங்கு சென்று வரலாமே!

