ADDED : நவ 23, 2018 03:07 PM

ஒரு பெண்ணுக்கு திருமணமானவுடன் குழந்தை பிறக்க வேண்டும். அதுதான் அந்த தம்பதிக்கு மகிழ்ச்சியையும், இருவீட்டாருக்கும் பரஸ்பர நெருக்கத்தையும் உண்டாக்கும். அப்படி நிகழாதபோது அந்த பெண்ணுக்கு வரும் அவமானம் ஏராளம். இதற்கு தீர்வாக மதுரை பழங்காநத்தம் தேவி கருமாரியம்மனை வழிபட்டு பிள்ளைக்கல்லை சுமந்தபடி ஏழு முறை வலம் வந்தால் குழந்தைபேறு உண்டாகும்.
காவிரிபூம்பட்டினத்தில் இருந்து கோவலனும், கண்ணகியும் மதுரைக்கு வந்தனர். மதுரையை ஆண்ட பாண்டியன் நெடுஞ்செழியனால் கோவலன் கள்வன் என பழி சுமத்தப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறந்தான். தன் கணவர் கள்வன் அல்ல என நீதியை நிலைநாட்ட சூளுரைத்தாள் கண்ணகி. அவள் காளியாக கருமாரியாக உருமாறிய இடம் தான் இந்தக் கோயில். இங்கு வீற்றிருக்கும் கருமாரியம்மன் சிலை ஆறரை அடி உயரத்தில் உள்ளது. ஐந்து தலைநாகம் குடைபிடிக்க, புன்சிரிப்புடன், உடுக்கை, திரிசூலம், கத்தி, பொற்கிண்ணத்துடன் காட்சியளிக்கிறாள் அம்மன். அருகில் பார்த்தால் லட்சுமியாகவும், பலிபீடத்தில் இருந்து பார்த்தால் சாந்த சரஸ்வதியாகவும், தொலைவில் இருந்து பார்த்தால் உக்கிர காளியாகவும் காட்சி தருகிறாள். கருவறையை சுற்றி முத்தாரம்மன், இசக்கி, மாசாணியம்மன், பிரத்தியங்கரா, பத்ரகாளி, வக்ரகாளி, தில்லைக்காளி ஆகியோருக்கு பலிபீடம் உள்ளது. ஈசான்ய மூலையில் காசி விஸ்வநாதர் உள்ளார். இந்த லிங்கம் இமயமலையில் கங்கை உற்பத்தியாகும் இடமான கங்கோத்ரியில் 45 நாட்கள் தவம் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. கண்ணகியின் வாழ்க்கை வரலாறு சுதை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமியன்று சிறப்பு பூஜை நடக்கிறது. அன்று குழந்தைபேறு இல்லாத பெண்கள் அம்மனை வணங்கி, இங்குள்ள பிள்ளைக்கல்லை (பிள்ளை லிங்கம்) மடியில் கட்டிக் கொண்டு, அம்மனை ஏழு முறை சுற்றி, மரத்தில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஒவ்வொரு சுற்றுக்கும் கல்லின் கனம் கூடும் அதிசயமும் நடக்கிறது. கருப்பு, வெள்ளை, பச்சை என கல்லின் நிறமும் மாறுவதாக பக்தர்கள் கூறுகின்றனர். இந்த கல், கங்கோத்ரியில் இருந்து எடுத்து வரப்பட்டதாகும். வேப்பமரத்தில் மஞ்சள் கயிறு கட்டி, ஏழு பவுர்ணமிக்கு தொடர்ந்து விளக்கேற்ற திருமணத்தடை நீங்கும். கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் நடக்க வளையல் கட்டி வழிபடுகின்றனர். இங்குள்ள கண்ணகியம்மனை வணங்கினால் நீதி கிடைக்கும்.
எப்படி செல்வது: மதுரை -- திருப்பரங்குன்றம் சாலையில் 3 கி.மீ.,ல் பழங்காநத்தம்.
விசேஷ நாட்கள்: ஆடி முதல்வெள்ளி காப்புக் கட்டுதல், ஆடி 2ம் வெள்ளி திருவிழா, பவுர்ணமி பூஜை, நவராத்திரி பூஜை
நேரம்: மாலை 5:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 97872 99966
அருகிலுள்ள தலம்: 3 கி.மீ., தொலைவில் திருப்பரங்குன்றம் முருகன் கோயில்