
மாமனான மகாவிஷ்ணு மருமகன் முருகனை வரவேற்ற தலம் கேரள மாநிலம் ஆலப்புழை அருகில் ஹரிப்பாடு.
தைப்பூச நாளில் சிறுவனான முருகனைத் தரிசிப்போமே.
பிரம்மாவை நோக்கி தவமிருந்தான் சூரபத்மன். தன்னைக் கொல்ல சிவபெருமானின் அருள் பெற்ற ஏழு மாத குழந்தையால் மட்டுமே முடியும் என வரம் பெற்றான். வரம் கிடைத்ததும் தேவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான். தங்களைக் காப்பாற்றும்படி அவர்கள் சிவனிடம் ஓடினர். மனமிரங்கிய சிவன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வரவழைக்க, அவை குழந்தையாக உருவானது. பேரழகு மிக்க குழந்தைக்கு முருகன் எனப் பெயரிட்டு பார்வதி வளர்த்தாள். இந்த சமயத்தில் ஏழுமாத குழந்தையான முருகனைப் பற்றி கேள்விப்பட சூரபத்மன் அவரைக் கொல்ல வந்தான். குழந்தையோ விஸ்வரூபம் எடுத்து சூரபத்மனை அழித்தது.
பின்னர் அக்குழந்தை பல திருவிளையாடல்களை நிகழ்த்தியது. தந்தைக்கே மந்திரம் உபதேசம் செய்தது, பிரம்மாவின் படைக்கும் தொழிலை தானே செய்தது. பின்னர் பல தலங்களுக்கும் யாத்திரை புறப்பட்டது. பரசுராமர் உருவாக்கிய மலைநாட்டிற்கு வந்த போது வாழ்த்து பாடி மருமகன் முருகனை வரவேற்றார் மகாவிஷ்ணு. அவர் பாடிய பாடல்கள் 'ஹரிப்பாடல்கள்' எனப்பட்டன. அவர் பாடிய இடம் 'ஹரிப்பாடு' எனப்பட்டது. மகாவிஷ்ணு கேட்டுக் கொண்டதன்படி முருகன் இங்கு தங்கினார்.
இந்த வரலாற்றின் அடிப்படையில் இங்கு கோயில் உருவானது. ராஜ கோபுரத்தின் கீழே முருகனின் காலடி சுவடுகள் உள்ளன. இவர் எப்போதும் திருநீறு அல்லது சந்தனக்காப்பில் இருப்பார். இங்குள்ள 70 அடி உயர கொடிமரத்தில் திருவிழா சமயத்தில் மாலையில் தான் கொடியேற்றுவர். சிறுவனான முருகனின் தலம் என்பதால் வள்ளி, தெய்வானைக்கு சன்னதி இல்லை.
கணபதி, தட்சிணாமூர்த்தி, கிருஷ்ணர், தர்மசாஸ்தா சன்னதிகள் உள்ளன. திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறக்க இங்கு வழிபடுகின்றனர். அபிஷேகம், வஸ்திரம் அணிவித்து சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
எப்படி செல்வது: ஆலப்புழையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் சாலையில் 22 கி.மீ.,
விசஷே நாள்: சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம்
நேரம்: அதிகாலை 4:00 - 11:30 மணி; மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0479 - 2410 690
அருகிலுள்ள தலம்: மண்ணாற சாலையில் நாகராஜா கோயில் (1 கி.மீ.,)
நேரம்: அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 5:30 - 8:30 மணி