/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
குருவாயூருக்கு வாருங்கள்! ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்
/
குருவாயூருக்கு வாருங்கள்! ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்! ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்
குருவாயூருக்கு வாருங்கள்! ஒரு குழந்தை சிரிப்பதை பாருங்கள்
ADDED : ஆக 19, 2016 02:11 PM

கேரளாவிலுள்ள குருவாயூரில் கிருஷ்ணர் உன்னி கிருஷ்ணன் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். பேச்சு வழக்கில் குருவாயூரப்பன் என்று இவரை அழைக்கின்றனர். கிருஷ்ணரால் தனக்கு தானே உருவாக்கிய விக்ரகம் இங்கு மூலவராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தல வரலாறு : துவாரகையில் வாழ்ந்த தன் பக்தரான உத்தவருக்கு, கிருஷ்ணர் தன் கையாலேயே செய்த தனது விக்ரகம் ஒன்றை பரிசாக அளித்தார். அவரிடம், “வருங்காலத்தில் துவாரகை நகரம் கடலில் மூழ்கும். அப்போது இச்சிலை கடலில் மிதக்கும். அதை பிரகஸ்பதியான குரு பகவான் தான் விரும்பும் இடத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுவார்' என்று கிருஷ்ணர் தெரிவித்திருந்தார். அதன்படியே வாயு பகவான் புயலை வீச, எங்கும் பெருமழை கொட்டியது. துவாரகை நகரம் மூழ்கியது.
சிலை நீரில் மிதந்தது. அதை குருபகவானே பூலோக சொர்க்கமான குருவாயூரில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். குரு, வாயு இருவரின் பங்களிப்பால் உண்டான தலம் என்பதால் இத்தலம் 'குருவாயூர்' என பெயர் பெற்றது. மூலவருக்கு மலையாளத்தில் 'உன்னி கிருஷ்ணன்' என்ற பெயர் வந்தது. இதற்கு 'சின்ன கண்ணன்' என்று பொருள். இந்த விக்ரகம், 'பாதாள அஞ்சனம்' என்னும் மையால் உருவாக்கப்பட்டுள்ளது. குருவாயூரப்பன் குழந்தை வடிவில் தலையில் மயிற்பீலி அசைந்தாட, நான்கு கைகளிலும் சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் தாங்கி நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அதிகாலை பூஜை: இங்கு தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. முதல் நாள் அணிந்த மாலை மற்றும் அலங்காரத்துடன் சுவாமிக்கு நிர்மால்ய பூஜை நடத்தப்படும். பின் அபிஷேகம் நடக்கும். தொடர்ந்து 12 கால பூஜைகள் பகல் முழுவதும் நடத்தப்படும்.
விருச்சிக ஏகாதசி: இங்கு நடக்கும் விழாக்களில் விருச்சிக ஏகாதசி சிறப்பானது. கார்த்திகை மாத ஏகாதசிக்கு 18 நாள் முன்னதாக இந்த விழா தொடங்கும். அப்போது கோவில் யானை சன்னிதியை திறந்து வைக்கும். விழா காலங்களில் சுவாமியை யானை சுமந்து வரும். இந்தக் கோவிலில் பல யானைகள் உண்டு, சுவாமியை சுமக்கும் பாக்கியம் பெறுவதற்காக யானைகளுக்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்படும். வெற்றி பெறும் யானையே சுவாமியை சுமக்கும் வாய்ப்பைப் பெறும்.
கை நிறைய காசு: இங்கு சித்திரை முதல் நாளில் சுவாமியை தரிசிப்பது விசேஷமானதாக கருதப்படுகிறது. அன்று வரும் பக்தர்களுக்கு 'கை நீட்டம்' வழங்கப்படும். ஆளுக்கு ஒரு ரூபாயை மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) வழங்குவார். குருவாயூரப்பனின் அருளால் ஆண்டு முழுவதும் பணப்புழக்கம் தட்டுப்பாடில்லாமல் இருக்கும் என்பதே கைநீட்டத்தின் தத்துவம்.
சோறூட்டும் தலம்: குருவாயூரப்பன் அருளால் திருமணம் கைகூடப் பெற்றவர்கள் இத்தலத்திலேயே திருமண வைபவத்தை நடத்துகின்றனர். இதன் மூலம், மணமக்களுக்கு நீண்ட வாழ்நாளும், மணமகளுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் அமையும் என்று நம்புகின்றனர். குழந்தை வரம் பெற்றவர்கள் துலாபாரம் நடத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தைக்கு முதன் முதலில் இத்தலத்தில் சோறூட்டுவது சிறப்பானது.
இருப்பிடம் : திருச்சூரில் இருந்து 20 கி.மீ.,
நேரம் : காலை 3:00 - 12:30, மாலை 4:30 - 9:15 மணி.
தொலைபேசி: 0487 - 255 6335.

