/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கண்ணெதிரே தோன்றுவான்! கனிமுகத்தைக் காட்டுவான்!
/
கண்ணெதிரே தோன்றுவான்! கனிமுகத்தைக் காட்டுவான்!
ADDED : ஆக 19, 2016 02:09 PM

கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் கனிமுகம் கொண்ட கனிவான குழந்தைக் கண்ணனைத் தரிசிக்க மதுரை பந்தடி தெருவிலுள்ள நவநீத கிருஷ்ணர் கோவிலுக்கு வாருங்கள்.
தல வரலாறு: 'நவநீதம்' என்றால் 'வெண்ணெய்'. தண்ணீரில் பால் கலந்தால் அதோடு ஐக்கியமாகி விடும். உயிர்களான நாமும், கடவுளால் அருளப்பட்ட இந்த பூமியை நமக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
“மனிதர்களே! நீங்கள் தண்ணீரில் கலக்கும் பால் போல் அல்லாமல், அந்த பாலில் இருந்து பிறந்து அந்த பாலிலேயே கலக்க மறுக்கும் வெண்ணெய்யைப் போல், ஒட்டுமில்லாமல் உறவுமில்லாமல் இந்த பூமியில் வாழ வேண்டும். பிருந்தாவனத்து கோபியர்கள் தங்கள் குடும்பத்தை மறந்து, எப்படி என்னை வந்தடைந்தார்களோ, அப்படியே வந்து சேருங்கள்,” என்று உணர்த்தவே அவர் பூமியில் அவதரித்தார். வெண்ணெய் திருடினார். ஆம்... உலகப்பற்று இல்லாமல், அவரையே எண்ணிக்கொண்டிருந்த மனிதர்களுக்கு அவர் மோட்சம் தந்தார். அவரை அடைய மறுத்து வெறுத்த கம்சன், சிசுபாலன், துரியோதனன், கர்ணன் போன்றவர்களையும் திருட்டும், புரட்டும் செய்து மோட்சத்திற்கு அனுப்பி 'கருணாமூர்த்தி' என பெயர் பெற்று மதுரையில் அருள்பாலிக்கிறார்.
சிறப்பம்சம்: முன் மண்டபத்தில் ராமர், சீதை, லட்சுமணர் சன்னிதி உள்ளது. இச்சன்னிதி எதிரே ஆஞ்சநேயர் வணங்கிய கோலத்தில் இருக்கிறார். கிருஷ்ண ஜெயந்தி இங்கு ஆக., 26ல் பாஞ்சராத்ர ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. மறுநாள் மாலையில் பகவத்கீதை பாராயணம், பிருந்தாவன தீபக்கேளிக்கை கோலாட்டம் ஆகியவை நடக்கிறது. மூலஸ்தானத்தில் நவநீதகிருஷ்ணன் இரண்டு கைகளிலும் வெண்ணெய்யுடன், சிரித்த முகத்துடன், குழந்தையாக நின்ற கோலத்தில் அருளுகிறார். இவரது வலது மார்பில் மகாலட்சுமியும், அருகில் உற்சவரும் இருக்கின்றனர். இவர் வீதியுலா செல்வது கிடையாது.
கிருஷ்ணர் பிறந்தது ரோகிணி நட்சத்திரம். இந்த நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது. சுவாமி சன்னிதிக்கு பின்புறம் சீனிவாசப்பெருமாள், அலர்மேலுமங்கை தாயார் ஆகியோர் இருக்கின்றனர். மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் சூரிய உதயத்தின்போது, தொடர்ந்து 3 மாதங்கள் ஸ்ரீநிவாசர் மீது சூரிய ஒளி விழுகிறது. தினமும் காலையில் கிருஷ்ணருக்கு பூஜை செய்யும்போது, 27 நட்சத்திர தீபம் மற்றும் 108 தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். இந்தக் கோவிலில் கண்டகி நதியில் கிடைத்த சாளக்கிராம கற்கள் இருக்கின்றன. சாளகிராமம் மற்றும் ஜடாரிக்கு தினமும் பாலபிஷேகம் நடக்கிறது. இந்த தரிசனம் கண்டால் வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
பரிகார தலம்: கண்ணன், காளிங்கன் என்ற நாகத்திற்கு முக்தி கொடுத்து அதன் மீது நின்று ஆடியவர் என்பதால், இங்கு ராகு, கேது கிரகங்கள் சிலை வடிவில் உள்ளன. சர்ப்ப தோஷத்தால் திருமணம், தொழில் வளர்ச்சி தடை உள்ளவர்கள் இவர்களுக்கு அர்ச்சனை செய்து நிவாரணம் பெறலாம். பிரகாரத்தில் உள்ள நாகர் சன்னிதியில் மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபடலாம். இக்கோவில் கட்டும்போது கிடைத்த மகாகணபதி, முன்மண்டபத்தில் இருக்கிறார். கோவிலுக்கு வெளியே காவல் தெய்வம் கருப்பசாமியை சாட்டை ரூபத்தில் வைத்துள்ளனர்.
இருப்பிடம்: மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து 4 கி,மீ., தூரத்திலுள்ள திருமலை நாயக்கர் மகால் அருகிலுள்ள பந்தடி ஐந்தாவது தெரு.
நேரம்: காலை 7:00 - 11:00, மாலை 5:30 - 8:00 மணி.
அலைபேசி: 92451 45226.

