/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கோபப்படும் கணவரைத் திருத்த வாருங்க நரசிம்மர் தலத்துக்கு!
/
கோபப்படும் கணவரைத் திருத்த வாருங்க நரசிம்மர் தலத்துக்கு!
கோபப்படும் கணவரைத் திருத்த வாருங்க நரசிம்மர் தலத்துக்கு!
கோபப்படும் கணவரைத் திருத்த வாருங்க நரசிம்மர் தலத்துக்கு!
ADDED : பிப் 05, 2013 01:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணவர் அடிக்கடி கோபப்படுகிறரா? பிரச்னைக்கு தீர்வு காண பிரதோஷம் மற்றும் சுவாதி நட்சத்திர நாட்களில் மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் கோயிலுக்கு வாருங்கள்.
தல வரலாறு :
அகத்தியரின் சீடர் ரோமச முனிவர். இவர் தனக்கு புத்திர பாக்கியம் வேண்டி இத்தலத்துக்கு வந்தார். சக்கர தீர்த்தத்தில் நீராடி யாகத்தை தொடங்கினார். அப்போது நரசிம்ம மூர்த்தி அவரது அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ, அதே போல் தரிசிக்க ஆசைப்பட்டார். இவரது ஆசையை நிறைவேற்ற பெருமாள் உக்கிர நரசிம்மராக காட்சி தந்தார். உக்கிர கோல வெப்பத்தால் உலகே தத்தளித்தது. தேவர்களும், முனிவர்களும் பயந்து நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க வர வேண்டுமென பிரகலாதனிடம் கேட்டுக் கொண்டனர். பிரகலாதனும் இங்கு வந்தான். அப்போது, நரசிம்மரின் உக்கிரம் குறைந்ததே தவிர முற்றிலுமாக நீங்கவில்லை. எனவே மகாலட்சுமியிடம் விஷயத்தை கூறினர் தேவர்கள். உலகைக் காக்கும் அந்தத் தாயார் வந்த பின், உக்கிர நரசிம்மரின் கோபம் தணிந்தது. பின், தான் காட்சியளித்த கோலத்தில் யோகநரசிம்மராக இத்தலத்தில் அமர்ந்தார்.
தல சிறப்பு:
யானைமலை அடிவாரத்தில் கோயில் உள்ளது. மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்துள்ளார். நரசிங்கவல்லி தாயார் தனி சந்நிதியில் பிரம்மாண்ட வடிவில் அருள்பாலிக்கிறாள். இந்த கோயிலில் கொடி மரம் கிடையாது. கொடிமரம் என்பது, கருவறைக்கு மேலுள்ள விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்து அமையும். இத் தலத்தில் கருவறைக்குமேல் யானைமலை மிகவும் உயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கவில்லை என்கின்றனர். இது ஒரு குடவறைக்கோயில். கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர் (ராமானுஜர்), நம்மாழ்வார் ஆகியோர் காட்சி தரும் அர்த்த மண்டபமும் குடவறை அமைப்பு தான். நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயில். நரசிம்மர் எதிரே பிரம்மாண்ட வடிவில் கருடாழ்வார் உள்ளார். உற்சவர் சிலையும் வனப்பு மிக்கது.
திருவிழா:
கோயிலை ஒட்டி அமைந்துள்ள சக்கர தீர்த்தத்தில் மாசிப்பவுர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி. திருவண்ணாமலை போலவே இங்கும் பவுர்ணமி கிரிவலம் சிறப்பு. சிவன் கோயில்களைப்போலவே இங்கும் பிரதோஷ வழிபாடும், சுவாதி நட்சத்திரங்களில் சிறப்பு பூஜையும் உண்டு.
பிரார்த்தனை :
நரசிம்மர் அவதாரம் எடுத்தது தேய்பிறை சதுர்த்தசி பிரதோஷ காலத்தில். எனவே, அந்த நேரத்தில் யோகநரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தியாகும். எதிரிபயம் இருக்காது. மரணபயம் நீங்கும். தாயார் நரசிங்கவல்லியை இந்நேரத்தில் வேண்டினால் திருமணத் தடை நீங்கும். கோபக்கார கணவன் இங்கு வழிபட்டால், மனைவியை நெஞ்சில் தாங்கும் சாந்த சொரூபியாகிவிடுவார்.
இந்த பிரார்த்தனைக்கு வருபவர்கள்,
'யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து
பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம்
ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம்
லட்சுமி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே''
என்ற ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
இருப்பிடம்:
மதுரைமாட்டுத்தாவணியில் இருந்து திருச்சி ரோட்டில் 8 கி.மீ., தூரத்தில் ஒத்தக்கடை. இங்கிருந்து மேற்கே பிரியும் ரோட்டில் 2 கி.மீ., தூரத்தில் நரசிங்கம் கிராமம்.
திறக்கும் நேரம்:
காலை 6 -11, மாலை 5 -இரவு 8 .
போன் :
98420 24866.