ADDED : ஜன 27, 2013 05:31 PM

* ஆறு தலை கொண்ட ஆறுமுகப்பெருமானை நம்பிச் சரணடைந்தால் வாழ்வில் ஆறுதல் என்றென்றும் நிலைத்திருக்கும்.
* குழந்தைக் கடவுளாகிய முருகன், கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளத்தையே தன் இருப்பிடமாக கொண்டு உறைந்திருக்கிறான்.
* பிறரிடம் சொல்வதால் நாம் செய்த புண்ணியமும், பாவமும் குறையத் தொடங்கிவிடும்.
* பயிருக்கு முள்வேலியிட்டு பாதுகாப்பது போல, நம்முடைய பணத்திற்கு நாம் செய்த தர்மமே வேலியாக இருக்கும்.
* உடம்பு என்னும் ஓடத்தில் ஏறி, அறவழியில் வாழ்பவர்கள் பிறவி என்னும் கடலைக் கடந்து முக்தி என்னும் கரையை அடைவார்கள்.
* வெயில் அதிகமாக இருந்தால் தான் மழை பெய்யும். அதுபோல, உலகில் அநீதி அதிகரித்துவிட்டால், மக்களை
நெறிப்படுத்த மகான்கள் அவதரிப்பார்கள்.
* நாம் துன்பப்படுவது நமக்காகவே. ஆனால், ஞானிகள் துன்பப்படுவது இந்த உலகத்திற்காக.
* கோபம் வரும் நேரத்தில் கண்ணாடியைப் பாருங்கள். உங்களுக்கே உங்களைப் பார்க்க வெட்கமாக இருக்கும். சாந்தமாகி விடுவீர்கள்.
* அது வேண்டும் இது வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இல்லையோ அவருக்கு மனக்கவலை சிறிதும் இருப்பதில்லை.
* டாம்பீகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ஆயிரமாயிரம் சிக்கலுக்குள் சிக்கிக் கொண்டு
தவிக்கிறார்கள்.
* நாற்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டால், வாழ்க்கை சுமையாகத் தோன்ற ஆரம்பித்து விடும்.
* மண்,பெண், பொன் ஆகிய மூவாசைகளில் இருந்து விடுபட்டவனே முக்தி பெறும் தகுதி பெற்றவன்.
* நல்ல நூல்களை நாள்தோறும் வாசிக்கும் பயிற்சியை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கோணலான மனமும் நேராக்குவதற்கு இப்பயிற்சி உதவும்.
* தெய்வீக நெறியில் முன்னேற விரும்பினால், ஒழுக்கம் என்னும் கட்டுப்பாடு மிகவும் அவசியம்.
* வயது முதிர்ந்தவர்கள் படும் துன்பத்தைப் பார்த்து, அவர்களுக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* பணம் சேரச் சேர சாப்பாடு, தூக்கம், ஒழுக்கம், பக்தி ஆகியவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கி விடுகிறது.
* நல்லவர்களைத் தேர்ந்தெடுத்துப் பழகுங்கள். வாழ்வில் முன்னேறுவதற்கு இது தான் சிறந்த வழி.
* வெறும் ஏட்டுக் கல்வியால் உண்டாகும் அறிவை விட அனுபவத்தால் வரும் அறிவே மேலானது.
* பக்தர்களுக்கு தொண்டு செய்தால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற்று மகிழலாம்.
* அரசர், அமைச்சர் என்று யாருக்கும் எமன் பயப்பட மாட்டான். ஆனால், முருகனின் அடியவர்களைக் கண்டால் அஞ்சி ஓடுவான்.
* உருவத்தில் மனிதனாகவும், உள்ளத்தில் மிருகமாகவும் வாழக்கூடாது. மனிதத்தன்மையில் இருந்து தெய்வத்தன்மை பெறுவதற்காகவே நாம் பிறவி எடுத்திருக்கிறோம்.
நம்பிக்கை ஊட்டுகிறார் வாரியார்