ADDED : அக் 18, 2019 02:39 PM

பரிகார ராசியினர் இத்தலங்களை தரிசிக்க நன்மை உண்டாகும்.
ஆலங்குடி ஞான தட்சிணாமூர்த்தி
நவக்கிரக தலங்களில் குருவுக்குரியது திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத் சகாயேஸ்வரர் கோயில்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி, ஞானம் தருபவராக இருக்கிறார். சுந்தரர் இங்கு வந்த போது, சிவபெருமான் வெள்ளப்பெருக்கு ஏற்படச் செய்தார். ஆற்றின் மறுகரையில் நின்ற சுந்தரரிடம் ஓடக்காரர் ஒருவர், கோயிலுக்கு செல்வதாக கூறி அழைத்து வந்தார். ஆற்றின் நடுவில் ஓடம் கவிழும் நிலை ஏற்பட்டது. கலங்கிய சுந்தரருக்கு காட்சி தந்த சிவன், தானே ஓடக்காரராக வந்ததை உணர்த்தினார்.
ஞான குருவாக இருந்து உபதேசம் செய்தார். இதனால் இவருக்கு 'ஞான தட்சிணாமூர்த்தி' என்று பெயர் வந்தது. தொடர்புக்கு: 04373 - 269 407
குருவித்துறை குருபகவான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் அருள்கின்றனர்.
அசுர குரு சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் பற்றி அறிந்திருந்தார். அதை அறிய விரும்பிய தேவர்கள், தேவகுருவின் மகன் கசன் என்பவனை அனுப்பினர். சுக்கிராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு கொண்டவன் போல நடித்தான். அவள் மூலமாக சுக்கிராச்சாரியாரின் அன்பை பெற்ற கசன், மந்திரத்தைக் கற்றான். இதை அறிந்த அசுரர்கள், கசனை எரித்து சாம்பலாக்கினர். கசனை காணாத தேவயானி, தந்தையின் உதவியுடன் உயிர்பெற செய்தாள். இந்த சமயத்தில் தேவகுரு, தன் மகன் கசனை காத்தருளும்படி பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அவர் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டுக் கொடுத்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள் இக்கோயிலில் எழுந்தருளினார்.
தொடர்புக்கு: 04543 - 258 303
ராஜயோக வாழ்வு தருபவர்
தஞ்சாவூரில் இருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலில், குருபகவான் அருள்பாலிக்கிறார்.
பிரளய காலத்தில் உலகம் அழிந்தபோது, இங்கிருந்த ஒரு மேடான பகுதியில் சிவன், சுயம்புலிங்கமாக தோன்றினார். திட்டை என்றால் 'மேடு'. இங்குள்ள உலகாம்பிகை சன்னதிக்கு வலதுபுறத்தில் குருபகவானுக்கு சன்னதி உள்ளது. இவர், ராஜ யோகம் தருபவர் என்பதால் 'ராஜகுரு' எனப்படுகிறார். கிரகங்களில் குருபகவானே திருமண, புத்திர பாக்கியம், செல்வம் தருபவராக இருக்கிறார். எனவே தடைபட்ட திருமணம் நடக்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க இங்கு வழிபடுகின்றனர்.
தொடர்புக்கு: 04362 - 252 858
மேற்கு நோக்கிய குருபகவான்
சென்னை பாடியில் (திருவலிதாயம்) உள்ள வலிதாயநாதர் கோயிலில் குருபகவான் மேற்கு (வழக்கமாக வடக்கு) நோக்கி உள்ளார்.
தான் செய்த தவறுக்காக, சகோதரனின் மனைவியான மேனகையிடம் சாபம் பெற்றார் குரு. அதில் இருந்து விடுபட, இங்குள்ள சிவனை வணங்கி விமோசனம் பெற்றார். தோஷம் உள்ளவர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள்.
ஞான சம்பந்தர், அருணகிரிநாதர், வள்ளலார், பாம்பன் சுவாமிகளால் பாடல் பெற்ற இத்தலத்தை சுற்றி 11 தேவார தலங்கள் உள்ளன.
தொடர்புக்கு: 044 - 2654 0706
கடற்கரையோர குருதலம்
குரு கோயில்கள் என ஒருபுறம் இருக்க, குரு வழிபட்ட கோயில்களும் தமிழகத்தில் உள்ளன. அவர் முருகனை வழிபட்ட கடற்கரை தலம் துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார். பத்மாசுரனை அழித்து தேவர்களை காக்க முருகப்பெருமான் இங்கு வந்தார். அப்போது அசுரர்களின் குணம் பற்றி, தேவ குருவான பிரகஸ்பதி, முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால் இது குரு தலமாக கருதப்படுகிறது.
இங்கு மேதா தட்சிணாமூர்த்தி என்ற பெயரில் ஆமை, எட்டு நாகங்கள், எட்டு யானைகளுடன் கூடிய பீடத்தில் அமர்ந்திருக்கிறார். இவருக்கு பின்புறம் கல்லால மரத்தில், ரிக், யஜுர், சாமம், அதர்வணம் ஆகிய வேதங்கள் கிளி வடிவில் உள்ளன.
தொடர்புக்கு: 04369 - 242 270
ஏழு குருக்கள் ஒரே தலத்தில்!
குருமார்கள் ஏழு பேர் உள்ளனர். அவர்கள் தேவகுரு பிரகஸ்பதி, அசுரகுரு சுக்கிராச்சாரியார், ஞான குரு சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு பிரம்மா, விஷ்ணு குரு வரதராஜர், சக்தி குரு சவுந்தர்யநாயகி, சிவகுரு தட்சிணாமூர்த்தி. இவர்கள் அனைவரையும், திருச்சி அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமான இங்கு பிரம்மாவிற்கும் சன்னதி உள்ளது. குருபகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபட்டவருக்கு குருதோஷம் நீங்கும். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தம் தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
தொடர்புக்கு: 0431 - 259 1466
வடக்கு பார்த்த தட்சிணாமூர்த்தி
தெற்கு நோக்கி காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு அருகிலுள்ள தனி கோயிலில், வடக்கு பார்த்த நிலையில் இருக்கிறார். தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்னும் நான்கு முனிவர் மட்டுமே இருப்பர். ஆனால் இங்கு 18 முனிவர்கள் உள்ளனர். குருதோஷ பரிகாரமாக இவரது சன்னதியில் நெய் தீபம் ஏற்றுகின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் இனிப்புகள் படைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தொடர்புக்கு : 044 - 2573 3703