
அறிவியலில் ஒரு தத்துவம் உண்டு. ஒரு பொருளை புவிஈர்ப்பு சக்தியை விட வேகமாக எறிந்தால் மட்டுமே வானத்தை நோக்கி போகும். அந்த சக்தி புவிஈர்ப்பு சக்தியை விட குறையும் போது மீண்டும் கீழே திரும்பும்.
நாமும் இயற்கைக்கு உட்பட்டவர்கள் தானே?
நம்மிடம் சத்வம், ரஜோ, தமோ என மூன்று குணங்கள் உள்ளன. எது சக்தி வாய்ந்ததோ அது நம்மிடம் மேலோங்கும். தமோ குணத்தை வெல்வது கடினம். இதில் சிக்கியவர்கள் திறமையை நடைமுறைப்படுத்த முடியாது. ரஜோ குணமான சுறுசுறுப்பு வர, தமோ குணமான சோம்பலை வெல்ல வேண்டும்.
அதற்குத் தேவை 'நான் இப்படி ஏன் செயல்படுகிறேன்? இதைச் செய்யத் துாண்டுவது எது, என்ற புரிதல் வேண்டும். இதுவே முதல் படி. செயல்களும், அதைச் செய்யத் துாண்டும் குணமும் வாழ்வை எப்படி பாதிக்கிறது என்ற தெளிவு வேண்டும். இது இரண்டாவது படி. நம் செயலை எந்த குணம் துாண்டுகிறதோ அதை மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இது மூன்றாவது படி. முதல் இரண்டு படிகளில் ஊன்றாமல் மூன்றாவது படியில் கால் வைக்க முடியாது. மற்றவர்களுக்கு பயந்தோ, வீம்பாகவோ செய்யும் மாற்றங்கள் வெறும் புறத்தோற்றத்தை மட்டுமே உருவாக்கும்
உதாரணமாக சோம்பல், அதிக நேர துாக்கம் எல்லாம் தமோ குணத்தின் வெளிப்பாடு. இந்த குணத்தில் இருந்து வெளியே வராமல் துாக்கம், சோம்பலை வெல்ல முடியாது. 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது தமோ குணத்திற்கும் பொருந்தும்.
ஒரு கதை நினைவுக்கு வருகிறது.
ஒரு ஆசிரமத்தில் குருநாதருக்கு மற்றவர் விருப்பங்களை நிறைவேற்றும் சக்தி இருந்தது.
ஒருநாள் எலி ஒன்று அவர் முன் தயங்கிபடி வந்தது. 'என்ன வேண்டும் உனக்கு?' எனக் கேட்டார். ''தரிசிக்க வருவோரின் குறைகளை தீர்த்து வரம் தருகிறீர்களே...ஆசிரமத்தில் உள்ள பூனை கொன்று விடுமோ என பயமாக உள்ளது. எனவே என்னை பூனையாக மாற்றுங்கள்'' என கெஞ்சியது. அவரும் பூனையாக மாற்றினார். சில நாள் கழிந்ததும் அந்த பூனை தலைதெறிக்க ஓடி வந்தது. காரணம் கேட்டார் குருநாதர். தன்னை ஆசிரமத்திலுள்ள நாய் துரத்துகிறது, எனவே நாயாக மாற்றும்படி வேண்டியது. அதையும் நிறைவேற்றினார்.
சில நாட்கள் கடந்தன. அந்த நாய் குருவிடம், '' காளை மாடு ஒன்று குத்த வருகிறது. என்னைக் காளையாக மாற்றுங்கள்'' என்றது. குரு மறுக்கவே காலில் விழுந்து கதறியது. பாவம் தப்பித்துப் போ என்று சொல்லி காளையாகவும் மாற்றினார். அது காட்டிற்குள் மேயச் சென்ற வேகத்தில் திரும்பியது. ''புலி ஒன்று கொல்ல துரத்துகிறது. என்னை புலியாக மாற்றி உயிர் பிச்சை கொடுங்கள்'' எனக் கெஞ்சியது. புலியாகவும் மாற்றி விட்டார்.
கதை இத்துடன் முடியவில்லை. அடுத்த வாரத்தில் மீண்டும் வந்தது. '' காட்டிலுள்ள வேடர்கள் துப்பாக்கியோடு மிரட்டுகின்றனர். பயமாக உள்ளது''என்றது. பொறுமை இழந்த குருநாதர், ''எலியாக இருந்த உன்னை எப்படி மாற்றியும் பிரச்னை தீர வில்லை. ஏனெனில் உருவத்தால் மாறிய நீ உள்ளத்தால் மாறவில்லையே. எனவே உடலாலும் எலியாக இரு'' என்று மீண்டும் எலியாக்கினார்.
இந்தக் கதை சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது. நாமும் எலி போல செயலால் மட்டும் மாற விரும்புகிறோம். மனதார மாறாவிட்டால் பலன் கிடைக்காது. எனவே தமோ குணத்தை கைவிட்டால் செயல்கள் தானாக மாறும். தமோ குணத்திலிருந்து விடுபடும் வழிகள் இதோ...
* உணவைப் பொறுத்து குணம் அமையும். எளிதில் ஜீரணம் ஆகாத, கடின, பதப்படுத்தப்பட்ட, ரசாயனம் கலந்த உணவுகள், காபி, போதைப் பொருட்கள் தமோ குணத்தை வளர்க்கும். இவற்றை தவிர்க்க வேண்டும். நம் முன்னோர்கள் அன்று சமைத்த உணவை மட்டுமே சாப்பிட்டனர். ஆனால் இன்று? உணவில் ஒழுக்கம், கட்டுப்பாடு தேவை.
* நண்பர்களின் குணம், பழக்கம் ஒருவரைத் தொற்றும். குடித்து, கும்மாளமிடும் நண்பர்களுடன் பழகினால் தமோ குணம் ஆட்கொள்ளும். அவர்களின் நட்பை துண்டிப்பது அவசியம்.
* புத்தகங்கள், நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி தொடர்கள் குணத்தை உருவாக்கும். சின்னத்திரையில் வரும் தொடர்களின் மூலக்கதைகளைப் பாருங்கள். தமோ குணத்தை, தீய எண்ணங்களை வளர்ப்பதாக உள்ளன. அவற்றை புறக்கணியுங்கள்.
* உழைத்து முன்னேற வேண்டும் என சபதம் எடுங்கள். உங்களின் குறிக்கோள் உழைக்கத் துாண்டுவதாக இருக்க வேண்டும். சோம்பலில் இருந்து விடுபட்டு ரஜோ குணம் காட்டும் வெற்றிப்பாதையில் மனம் செல்லத் தொடங்கும்.
* 'நான் கடுமையாக உழைப்பேன்; வெற்றி பெறுவேன்' என்ற வார்த்தைகள் மனதில் ஒலிக்கட்டும். இதனால் தமோ குணம் மறையும். கீழே உள்ள வாசகத்தை அடிக்கடி படியுங்கள்
'நான் இப்போதே செயல்படுவேன்' என சொல்லிக் கொண்டே இருப்பேன். தோல்விகள் நடக்கப் பயப்படும் பாதையில் நான் நடந்து காட்டுவேன்.
தோல்விகள் ஓய்வெடுக்கும் போது நான் மட்டும் உழைப்பேன். இன்றைய தினம் என்னுடையது.
நாளை சோம்பேறிகள் தினம். நான் சோம்பேறி அல்ல. நான் இப்போதே செயல்படுவேன். வெற்றி காத்திருக்காது. காலம் தாழ்த்தினால் வெற்றி மற்றவர்களை சென்றடையும். வெற்றியடைய இதுவே தருணம். நான் தான் வெற்றியடையப் போகிறேன்'.
தொடரும்
அலைபேசி: 73396 77870
திருவள்ளூர் என்.சி. ஸ்ரீதரன்