ADDED : செப் 03, 2013 02:11 PM

விநாயகர் முன்பும், சிவன் முன்பும் கைதட்டி வழிபாடு செய்யும் வழக்கம் மகாராஷ்டிர மாநிலம் தேவூர் சிந்தாமணி விநாயகர் கோயிலில் உள்ளது.
தலவரலாறு: அபிஜித் என்ற மன்னனுக்கும், அரசி குணவதிக்கும் 'கணா' என்ற மகன் பிறந்தான். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த இந்த தம்பதியர் வைசம்பாயன முனிவரின் ஆலோசனைப்படி இந்தக் குழந்தையை பெற்றனர். கணாவை மக்கள் கணராஜா என்றனர்.
கணராஜா வீரமுள்ளவனாக வளர்ந்தான். ஒருமுறை காட்டிற்கு வேட்டைக்கு சென்ற அவன், ஓய்வுக்காக கபிலரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தான். கபில முனிவர் கணராஜாவுக்கும், அவனது படைக்கும் மதிய உணவளித்தார். இந்திரன் கபில முனிவருக்கு, சிந்தாமணி என்ற நகையைக் கொடுத்திருந்தான். அதன் மகிமையை அறிந்த கணராஜா, தனக்கு அந்த நகை வேண்டும் என கேட்டான். கபில முனிவர் மறுத்துவிட்டார். கணராஜா தன் படைகளின் உதவியோடு சிந்தாமணியை எடுத்து சென்றுவிட்டான்.
வருத்தமடைந்த முனிவர், துர்க்காதேவியிடம் இழந்த பொருளை மீட்டுத் தர வேண்டினார். துர்க்கை ரிஷியிடம், 'நீர் கணபதியை தினமும் பூஜித்தால் இழந்த நகையை திரும்ப பெறலாம்,'' என்றாள்.
துர்க்கையின் ஆலோசனைப்படி முனிவர் கணபதியை வணங்கி வந்தார். கணபதி, கணராஜாவுடன் போர் செய்து நகையை மீட்டார். அந்த சிந்தாமணியை கணபதிக்கே கொடுத்தார் கபில முனிவர். அது அவரது உடலை அலங்கரித்தது. அன்று முதல் இந்த விநாயகருக்கு 'சிந்தாமணி விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டது.
சிறப்பம்சம்: 'சிந்தா' என்ற சொல்லுக்கு 'கவலை' என பொருளும் உள்ளது என்கின்றனர் இப்பகுதியினர். கவலையை போக்கி அருள் செய்பவர் சிந்தாமணி விநாயகர். பிரகாரத்தை சுற்றி வரும் வழியில் சிவபெருமானுக்கு மிகச்சிறிய லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கத்திற்கு பக்தர்களே அபிஷேகம், பூஜை செய்யலாம். இது சுயம்புவாக இருந்த விநாயகர் ஆகும். இங்குள்ள மணி, மகாராஷ்டிர மாநில விநாயகர் கோயில் மணிகளிலேயே மிகப் பெரியது.
கைத்தட்டும் வழிபாடு: நம்மூர் கோயில்களில் சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கைதட்டி வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளதல்லவா! மகாராஷ்டிராவில் நந்தி சிலை முன்பு நின்று, சிவனை நோக்கியும், விநாயகரை நோக்கியும் கை தட்டி வழிபடுகின்றனர். பார்வதி தேவியின் வித்தியாசமான சிலை சிவலிங்க சந்நிதிக்குள் உள்ளது. இவளை 'மம்மாதேவி' என்கின்றனர்.
இருப்பிடம்: பூனாவில் இருந்து சோலாப்பூர் ரோட்டில் 22 கி.மீ சென்று கடப்சார் வழியாக லோனி என்ற இடத்திற்கு செல்ல வேண்டும். அங்குள்ள விலக்கில் திரும்பி 3 கி.மீ., சென்றால் தேவூர். பூனாவிலிருந்து 25 கி.மீ., பஸ் உண்டு.
