தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/செய்யும் தொழிலே தெய்வம்! (12)

செய்யும் தொழிலே தெய்வம்! (12)

செய்யும் தொழிலே தெய்வம்! (12)


ADDED : செப் 03, 2013 02:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2013 02:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தொழில் நேர்மை, நேர்த்தி.. அதன் பின் மனஒருமை பற்றிச் சொன்னேன். அதுபோல 'சீர்மை' என்றொரு வார்த்தையும் உண்டு. செய்யும் தொழிலைச் சீராகச் செய்வது சீர்மை. இது நேர்த்தியின் உடன்பிறப்பு அல்லது ஒன்று விட்ட உறவுமுறை என்று கூட நகைச்சுவையாகச் சொல்லலாம். சீர்மைக்கு உதாரணம் சொல்லட்டுமா?

சில பேச்சாளர்கள் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டால் அதில் முன்னுரை, வரிசையான சிந்தனை அடுக்குகள், இடை இடையே கேட்பவர்கள் களைப்படையாதபடி அளவான நகைச்சுவை, குரல் ஏற்ற இறக்கம், தக்க இடத்தில் மவுனமாகி மக்களை நிசப்தத்தில் ஆழ்த்தி சிந்திக்க வைக்கும் திறன், என்று தொடுத்துக் கொண்டே போய், இன்னும் பேசமாட்டாரா என்று ஏங்கும் சமயத்தில். சட்டென்று முடித்து அலாதியான அனுபவத்தைக் கேட்பவருக்கு ஏற்படுத்துவார்கள்.

சிலரோ ஒரு கருத்தை ஆரம்பித்து அதற்குள்வேறு கருத்தில் பிரவேசித்து மாநகராட்சி குப்பைத் தொட்டியில் நாய் அளைவது மாதிரி கடித்துக்குதறி கேட்பவர்களை விரைவில் களைப்படையச் செய்வார்கள். இது சீர்மையற்ற செயல்.

சின்ன விஷயம் தான்.. என்றாலும் துவைத்த துணியை மடித்து வைக்கும் போது எல்லோரும் ஒரே மாதிரியாகவா மடிக்கிறார்கள்? சிலர் மடிப்பதே ஒரு கலை மாதிரி இருக்கும். வாசலில் வந்து துணி இஸ்திரி போடும் நண்பர்களைக் கவனியுங்கள்! ஒரு சிலர் வேட்டியின் நான்கு முனைகளும் நேராக இருக்கும்படி இஸ்திரி போட்டுத் தருவார்கள். ஒருசிலர் கொஞ்சம் ஏற்ற இறக்கத்துடன் துருத்திக் கொண்டிருக்கும்படி ஏனோ தானோ என்று மடித்துத் தேய்த்து கடனே என்று கையில் கொடுத்து காசு வாங்குவதிலே மட்டும் குறியாக இருப்பார்கள். ஒருவருக்குச் சரியான தையல்காரர் கிடைப்பது என்பது கூட இன்று பூர்வ ஜன்ம புண்ணியத்தால்தான் கிடைக்க வேண்டும் போலிருக்கிறது!

திருப்பூரில் பல பனியன் கம்பெனிகள் வீழ்ச்சியடைந்த காரணங்களில் ஒரு முக்கிய காரணம் சீர்மை இன்மை. அளவு குறைபாடு, தாறுமாறாகத் தைத்த முறையில் குளறுபடி, சாயத்தின் தரத்தில் சமரசம் என்று ஏதோ ஒரு குறையுடன் வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் சில முதலாளிகள். அதனால் எல்லாமே திருப்பி அனுப்பப்பட்டுவிடும். 'கொஞ்சம் முன்னபின்ன இருந்தா என்ன கெட்டுப் போச்சு' என்கிற இந்தியச் சிந்தனைப் போக்கு வெளிநாடுகளில் நாம் அவமானப்பட மூல காரணமாகிறது.

இப்போது இந்திய பாஸ்போர்ட்டில் உள்ள எழுத்துக்கள் நன்றாகத் தெரியும்படி பளிச்சென்று உள்ளன. ஆனால், இருபதாண்டு

களுக்குமுன் கையால் இங்க்கில் எழுதி, மேலே கண்ணாடி பேப்பர் ஒட்டிய பாஸ்போர்ட்கள் இந்திய அரசால் வழங்கப்பட்டன. அதில் எழுத்துக்கள் நாளடைவில் மங்கிவிடும். என் பயணத்தின் போது ஒரு வெளிநாட்டின் குடியமர்வு அலுவலர், அந்தப் பாஸ்போர்ட்டை அலட்சியமாகச் சிரித்தபடி, செத்த எலி மாதிரி தூக்கிப் பிடித்து, ''இதில் எந்த எழுத்தாவது படிக்க முடிகிறதா பார்.. உங்கள் அரசு ஏன் இத்தனை தரித்திரத்துடன் பின் தங்கியதாக இருக்கிறது?'' என்று கேட்டபோது, நான் அவமானப்பட்டேன். நாம் எதையும் சீராகச்சரியாகச் செய்வதில் அதிக அக்கறை காட்டுவதில்லை.

பத்து வருடமாகச் சிலர் சப்பாத்தி போட்டு இருப்பார்கள். ஆனால், வட்டமாகவோ, சதுரமாகவோ, முக்கோணமாகவோ ஏதோ

ஓர் ஒழுங்கில் வராது. எலி கத்தரித்துப் போட்டது மாதிரி சப்பாத்தி போடுவார்கள். நல்ல வடிவத்தில் போடக்கூடாதா என்றால், ''ஏன் இப்படி இருந்தா.. தொண்டைக் குழியில இறங்காதா?'' என்று கோபம் வேறு கொள்வார்கள். கோயிலில் சாமி சிலைகள் அழகாக இருக்க வேண்டும். பூஜை முறையாக நடக்க வேண்டும் என்பதுபோல செய்யும் தொழிலிலும் எல்லாமே சரியாக இருக்கவேண்டும்.

ஒருமுறை என் மலேசியப் பயணத்தின் போது, எங்கள் குடும்பமும், பிரபல தமிழ்த்திரைநட்சத்திரம் எம்.என். ராஜம் குடும்பமும் ஒன்றாகப் பயணித்தோம். மிக அழகாகத் தெளிவாகத் தமிழ் உச்சரித்துப் பேசும் நட்சத்திரம் என்பதால், அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. அந்தக்காலத் திரை உலக அனுபவங்களை அன்புடன் பகிர்ந்து கொண்ட ராஜம், நடிகவேள் எம்.ஆர். ராதா நடிப்புத் தொழில் மீது வைத்திருந்த அளவற்ற பக்தியை வியந்து வியந்து குறிப்பிட்டார்கள்.

புகழ் பெற்ற ரத்தக் கண்ணீர் திரைப்படத்தில் தொழு நோயாளியாகி வேடமிட்டு ராதா, 'அடியே காந்தா' என்கிற போது கொட்டகையே அதிரும். அதில் காந்தா என்கிற வில்லியாக நடித்தவர் ராஜம். அவரைத் தேடி நடிகவேள் தொழுநோயுடன் வரும் போது, விலகி ஓடும் காட்சி... படிகளில் ஏறியபடி தன்னைத் துரத்தி வரும் ராதாவை காலால் எட்டி உதைக்கும் காட்சி படமாக வேண்டிய நேரம். மிகப் பெரிய கலை மேதை, அவர் என்பதால், ராதா அண்ணனைக் காலால் உதைக்கும் காட்சியை

எம்.என். ராஜம் தவிர்க்க விரும்பினார்.

''நோ.. படத்துக்கு அதுதான் உயிரான காட்சி.. என் முகத்தில் நீ உதை' என்கிறார் நடிகவேள். ''சரி.. உதைப்பது போல் கால் நீட்டுகிறேன்.. அதைத் தனியாகப் படமாக்கி விட்டு ராதா அண்ணன் உதைபட்டது போல் முகத்தைத் திருப்புவதைத் தனியாகப் படமாக்கிக் கொள்ளலாம்,''' என்று எம்.என். ராஜம் சொல்லி இருக்கிறார்.

'நோ.. நீ நேரா என் முஞ்சிமேல உதை.. அப்பத்தான் அந்தக் காட்சி நல்லா வரும்,'' என்று பிடிவாதம் பிடித்திருக்கிறார் ராதா.. ''எப்படி அண்ணே உங்களை உதைக்க மனசுவரும்.. நான் மாட்டேன்,'' என்று ராஜம் மறுத்தபோது, ''கை நீட்டி நாம்ப காசு வாங்கறோம் இல்ல.. நான் உதைபடணும்.. நீ உதைக்கணும்.. படம் பிரமாதமா வர்றதுதான் முக்கியம்,'' என்று வாதாடியிருக்கிறார் எம்.ஆர். ராதா.

வேறு வழியின்றி மென்மையாக உதைப்பது போல நடித்த போதெல்லாம், ''நோ.. பாக்கறவனுக்கு இதுபத்தாது.. மூஞ்சிமேல நல்லா எட்டி உதை,'' என்று காட்சி தத்ரூபமாக அமையும் வரை முகத்தில் உதைக்க வைத்தார்.

கலைமீது எம்.ஆர்.ராதா காட்டிய அர்ப்பணிப்பு.. தொழில் ஈடுபாடு.. சீர்மையில் அவருக்கிருந்த அக்கறை பற்றி கண்களில் ஆச்சர்யம் பொங்கச் சொல்லிக் கொண்டே வந்தார் எம்.என். ராஜம்.

இன்று நாட்டில் நிலைமை எப்படி இருக்கிறது.. கொஞ்சம் யோசியுங்கள். பிறப்பு சிறப்பு ஜாதிச் சான்றிதழ்கள், ரேஷன் மற்றும் அரசு அடையாள அட்டைகள் தரும்போது பெயர், வயது, இன்ஷியல் இவற்றில் எத்தனை குளறுபடிகள் இருக்கின்றன தெரியுமா? சரி செய்ய வேண்டாமா? அடையாள அட்டைகளில் ஆண், பெண் என்பதில் குளறுபடி இருந்து விட்டால் அதனை மாற்ற

ஒவ்வொருவரும் என்ன பாடுபட வேண்டி இருக்கிறது? மக்களின் அவஸ்தைகளை அரசு அலுவலர்கள் புரிந்து கொள்வார்களா?

'செய்வன திருந்தச் செய்' என்ற நாட்டில் 'செய்வன வருந்தச் செய்' என்கிற நடைமுறை புகுந்திருக்கிறது என்பதை நாம் சரி செய்ய வேண்டாமா? எந்த வேலையையும் ஓரளவு சரியாகச் செய்தால் போதுமானது என்ற எண்ணம் நமக்கு வந்து விட்டது. இது பிழையானது. உதாரணத்திற்கு, ஒரு மருத்துவர் முக்கியமான அறுவை சிகிச்சையை ஓரளவு சரியாகச் செய்வார் என்று சொன்னால் யாராவது அவர் அறுவை சிகிச்சை மேஜையில் படுப்பார்களா? ஒரு மடத்தின் சந்நியாசியை இவர் ஓரளவு பிரம்மச்சாரி என்றால் அவர் மீது யாருக்காவது மரியாதை பிறக்குமா?

விமானத்தில் ஏறும் போது இந்த விமானம் ஓரளவு சரியாகப் பறக்க வாய்ப்புண்டு என்றால் எவனாவது ஏறுவானா? எனவே, ஓரளவு சரியாகச் செய்தால் போதுமானது என்கிற அணுகுமுறையிலிருந்து இந்தியர்கள் மாற வேண்டும். நூறு சதவீத சீர்மை இன்றைய அவசியம். ஒரு மிகப்பெரிய கப்பலை மூழ்கடிக்க ஒரு சின்ன ஓட்டையே போதுமானதல்லவா?

- மேலும் பேசுவோம்

சுகி சிவம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us