/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
கிழமைகளில் வேண்டாம் ஏற்றத்தாழ்வு! செவ்வாய்கிழமை இனிய நாளே...
/
கிழமைகளில் வேண்டாம் ஏற்றத்தாழ்வு! செவ்வாய்கிழமை இனிய நாளே...
கிழமைகளில் வேண்டாம் ஏற்றத்தாழ்வு! செவ்வாய்கிழமை இனிய நாளே...
கிழமைகளில் வேண்டாம் ஏற்றத்தாழ்வு! செவ்வாய்கிழமை இனிய நாளே...
ADDED : மார் 25, 2013 03:23 PM

செவ்வாய்கிழமைகளில் நீங்கள் அம்மன் கோயிலுக்குப் போகிறீர்கள்!
முருகனுக்கு உகந்த நாளாகச் சொல்கிறீர்கள். ஆனால், கடைக்குப் போய் அந்தநாளில் ஏதாவது வாங்க வேண்டுமென்றால், ஏனோ யோசிக்கிறீர்கள்! அது தேவையே இல்லை! செவ்வாயும், சனியும் இனிய நாளே என்கிறார் ஜோதிட சாம்ராட் காழியூர் நாராயணன்.
இவர் கடந்த 40 வருடகாலமாக ஜோதிடக்கலையில் ஈடுபட்டிருப்பவர். ஊடகங்களில் அதிகம் இடம்பிடிப்பவர். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர். ஜோதிடர்களில் முற்போக்கு சிந்தனை உடையவர். இவரை சந்தித்த போது பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவரிடம் பேசியதில் இருந்து...
மனித சுபாவத்தில் நல்ல விஷயங்களை விட தீய விஷயங்கள் ஆழமாக உடனே பதிந்துவிடும். ஒரு விஷயம் ஆகாது என்று
எல்லோரும் சொல்லிவிட்டால், ஆகக்கூடிய விஷயம் கூட ஆகாமல் போய்விடும். இதனாலேயே செவ்வாய்கிழமை, சனிக்கிழமை, எட்டாம் எண், பதிமூன்றாம் எண் ஆகியவை நமக்கு ஆகாமல் போய்விட்டது. அந்த நாட்களில் திருமணம் உள்ளிட்ட சுப
காரியங்களை செய்வதில்லை. அதே போல அஷ்டமி, நவமி போன்ற நேரங்களிலும் எதையும் செய்வதில்லை.
உண்மையில் ஜோதிட ரீதியாக 'செவ்வாய்' என்றால் 'மங்களம்' என்றே பொருள். செவ்வாய்தோஷம் கொண்டவர்கள் பாக்கியம் கொண்டவர்களே. எல்லாமே எண்ணத்தில்தான் உள்ளது. நல்ல எண்ணங்களை விட நேர்மறை எண்ணங்களே மனிதர்களை ஆட்டிப்படைக்கிறது. நண்பர் வீட்டிற்கு சென்றால் 'முருகன் இல்லையா?' என்றுதான் கேட்கிறோம். 'முருகன் இருக்கிறாரா? என்று கேட்பது அபூர்வம்.
செவ்வாய் கிழமையை வெகு விசேஷமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறார்கள். வடஇந்தியா, மங்கோலியா, சீனா மற்றும் மெசபடோமியா நாடுகளில் செவ்வாய் கிழமைகளில்தான் விரும்பி திருமணம் செய்வார்கள்.செவ்வாய்க்கு 'பிருத்வி' என்றும் 'பூமி' என்றும் பெயர் உண்டு. பிருத்வி பெயரில் தான் வெற்றிகரமாக ராக்கெட்டே விடப்பட்டது.
நல்ல ரத்தஒட்டத்தையும், ஆரோக்கியத்தையும், வீரியத்தையும், வலிமையையும் கொடுப்பது செவ்வாய் கிரகம் தான். அதே போல அஷ்டமி ஆகாது என்றால் அஷ்டமியில் ஜனித்த பகவான் கிருஷ்ணன் நமக்கு எப்படி நல்லவர் ஆவார்? நவமி ஆகாது என்றால் நவமியில் ஜனித்த ராமர் மட்டும் நமக்கு நல்லவராவாரா? இதே போல், வியாழனும், வெள்ளியும் போல செவ்வாயும் நல்ல நாள் தான்!
செவ்வாய் கிழமையை வெறுப்பவர்கள் வாழ்க்கையில் ஏழில் ஒரு பங்கை இழந்தவர்களாகிறார்கள். எட்டு ஆகாது என்பவர்கள் அஷ்டலட்சுமியின் கடாட்சத்தை இழந்தவர்களாகிறார்கள். எட்டு போட்டால்தான் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வண்டியோட்ட லைசென்சே தருவார்கள். செவ்வாய் கிழமையன்று பூமி பூஜை செய்வது மிகவும் நல்லது என மனையடி சாஸ்திரம் சொல்கிறது. உழவர்கள் ஆதி காலத்தில் செவ்வாயில்தான் உழவுப்பணியையே தொடங்குவார்கள்.
திருமண நாளில் மாங்கல்யம் அணிவித்ததும், மாங்கல்யத்தின் இருபக்கமும் செவ்வாய் எனப்படும் பவழம் சேர்ப்பார்கள். இது பெண்ணுக்கு மாங்கல்ய பலனையும், பலமும் தரும் என்ற நம்பிக்கையினால்தான் இதனை அணிவிக்கிறார்கள். ஆகவே, செவ்வாய், சனி என்பவை இனிய நாட்களே! எட்டு, பதிமூன்று ஆகிய எண்களும் உகந்த எண்களே.
அஷ்டமியும்,நவமியும் நல்லதே செய்யும்.மக்களுக்கு அறியாமை இருக்கலாம். ஆனால், அந்த அறியாமையை போக்கிக் கொள்ளமாட்டேன் என்ற பிடிவாதம்தான் இருக்கக்கூடாது. இனியாவது மங்களகரமான செவ்வாயன்று எல்லாப் பொருட்களையும் வாங்குவோம். இந்த கிழமையையும் மங்களகரமாக கொண்டாடி அறியாமையை போக்குவோம். அனைவருக்கும் செவ்வாயின் அருளால் மங்களமே உண்டாகும்.
சொல்கிறார் ஜோதிடம் காழியூர் நாராயணன்