ADDED : பிப் 25, 2014 05:05 PM

ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் கோயில், சென்னை எழும்பூர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இது தேவார வைப்புத்தலம். திருநாவுக்கரசரின் ஆறாம் திருமுறையில் உள்ள பாடலில் 'எழுமூர்' என இத்தலம் குறிக்கப்பட்டுள்ளது. மூலவர் சிவனின் ஆவுடையார், மூன்றரை அடி விட்டம் கொண்டது. கருவறைச் சுவரில் அர்த்தநாரீஸ்வரரின் உருவச்சிலை உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க இங்கு, உத்தரவாகினி ஆறு வடக்கு நோக்கி ஓடியதால், புனிதமாக விளங்கியது.
அந்நியர் ஆட்சிக் காலத்தில் பராமரிப்பின்றி சிதிலமடைந்தது. 18ம் நூற்றாண்டில், இப்பகுதியைச் சேர்ந்த ஆராவமுத நாயுடு, தன் தோட்டத்தில் தூர் வாரிய போது, இங்குள்ள சிவலிங்கத்தையும், விநாயகர் சிலையையும் கண்டெடுத்தார். அவை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நூறு ஆண்டுக்கு முன்,வெங்கடகிரி மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், உடல்நலக்குறைவால் அவதிப்பட்டபோது, இந்த சிவனிடம் வேண்டிக் கொள்ள குணமடைந்தார். அதற்கு நன்றிக்கடனாக, கோயிலுக்கு உற்ஸவ மூர்த்தி விக்ரஹங்களை வழங்கினார். இங்கு சிவராத்திரியன்று (பிப்.27) அபிஷேக ஆராதனை நடக்கிறது.
திறக்கும் நேரம்: காலை7.00- 11.00, மாலை 5.00- இரவு 8.30.

