sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

அனைத்தும் பராசக்தியின் தொழிலே! (13)

/

அனைத்தும் பராசக்தியின் தொழிலே! (13)

அனைத்தும் பராசக்தியின் தொழிலே! (13)

அனைத்தும் பராசக்தியின் தொழிலே! (13)


ADDED : செப் 13, 2019 10:35 AM

Google News

ADDED : செப் 13, 2019 10:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாம் செலுத்தும் இடத்தைப் பொறுத்து அன்புக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு. கடவுள் மீது செலுத்தும் அன்பு பக்தி. நம் மீது கடவுள் காட்டும் அன்பிற்குப் பெயர் அருளாகும். 'அருள் என்னும் அன்பு ஈன் குழவி' என்பார் திருவள்ளுவர்.

அன்பு செலுத்துதல் புனிதமானது. எதிர்பார்ப்பு ஏதும் இல்லாதது. கடவுளிடம் இது வேண்டும், அது வேண்டும் என்ற கோரிக்கை இல்லாத அன்பே பக்தி. 63 நாயன்மார்களின் வரலாறைப் படித்தால் இந்த உண்மை புலப்படும். அவர்கள் அனைவரும் சிவபெருமானுக்கு தம்மால் என்ன தர முடியும் என்றே யோசித்தனர். உலக வாழ்வில் அன்பை வெளிப்படுத்தக் கூட, ஏதேனும் ஒரு பொருளைத் தருகிறோமே தவிர, பிறரிடம் இருந்து எதையும் பெற எண்ணுவதில்லை.

நாயன்மார்கள் பொருள் மட்டுமன்றி தம் உறுப்புக்களையும் சிவனுக்கு கொடுத்தனர். கண்ணப்பர் தன் கண்களையே பெயர்த்துக் கொடுத்தார். சந்தனத்திற்குப் பதிலாக தன் முழங்கையையே தேய்த்து ரத்தம் பெருகத் தொண்டு செய்தார் மூர்த்தி நாயனார்.

இன்னும் சிறிது நேரத்தில் மகளுக்குத் திருமணம் என்னும் சூழலில், மகளின் கூந்தலை அடியார் வேண்டியதற்காக அரிந்து கொடுத்தார் மானக்கஞ்சாற நாயனார்.

அர்ச்சனை செய்வது, மாவிளக்கு ஏற்றுவது, தேங்காய் உடைப்பது, தீ மிதிப்பது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பாத யாத்திரை செல்வது, அபிஷேகம் செய்வது எனப் புறச் சடங்குகளை இப்போது பக்தியாகக் கருதுகிறோம். இவை பக்திக்கான மார்க்கமே தவிர, இவை பக்தி ஆகாது.

'யார் ஒருவருக்கு கடவுளின் திருநாமத்தைச் சொன்னதும் கண்ணீர் பெருகுகிறதோ அவருக்கு அதுவே கடைசிப் பிறவி' என்பார் பகவான் ராமகிருஷ்ணர்.

திருஞான சம்பந்தர், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்” என்று பக்திக்கு இலக்கணம் சொல்கிறார். முதலில் நம் மனம் அன்பால் நிறைய வேண்டும். அன்பான மனமே கசியும். மனதில் கசிவு வந்தால் கண்ணீர் பெருகும்.

வெளிநாட்டில் இருக்கும் மகனோ, மகளோ, நீண்டநாள் கழித்து அழைக்கும் போது, காதில் குரல் கேட்டதும் கண்ணீர் பெருகுகிறது அல்லவா? அது போலவே மிகுந்த அன்போடு கடவுளின் திருநாமத்தைச் சொன்னால் கண்ணீர் பெருகும். உடல் சிலிர்க்கும். ஆனந்தம் தோன்றும். வார்த்தை தடுமாறும். இவையே அன்னை அபிராமியை வழிபட்ட போது ஏற்பட்ட அனுபவங்கள் என்கிறார் அபிராமி பட்டர். இத்தகைய பக்தி உடையவர்கள் எந்த நிலையிலும் பதற மாட்டார்கள். நிதானமாக பணியாற்றுவர். கோபப்பட மாட்டார்கள்.

மகாகவி பாரதியார், ''விதைத்த விதை எவ்வாறு அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டு, மண்ணில் முளை விடுமோ அது போலப் பொறுமையாக இருப்பர் பக்தி உடையவர்கள். காரணம் எல்லாம் திருவருளால் நடக்கிறது என்ற உறுதி, நம்பிக்கை அவர்களுக்கு உண்டு' என்கிறார்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? கோயிலில் திரையிட்டிருந்தால் அரை நொடிக்கு ஒரு முறை கடிகாரத்தைப் பார்க்கிறோம். அவ்வளவு பொறுமை நமக்கு. எதிர்பார்ப்பு இல்லாத அன்பு, மிகுந்த பொறுமை இவையே பக்தியின் இலக்கணம் என்கிறார் மகாகவி. நாமும் இதை பின்பற்ற பராசக்தியிடம் பிரார்த்தனை செய்வோம்.

எல்லாம் பராசக்தியால் தான் நடக்கிறது; உலகம் அவளால் தான் இயங்குகிறது என உறுதிபடச் சொல்வோம். லட்சியத்துடன் மேன்மையான செயல்களில் ஈடுபட அருள்வாயாக என அன்னையை வேண்டுவோம்.

பக்தியுடையார் காரியத்திற்

பதறார், மிகுந்த பொறுமையுடன்

வித்து முளைக்கும் தன்மை போல்

மெல்லச் செய்து பயனடைவார்

சக்தி தொழிலே அனைத்து மெனிற்

சார்ந்த நமக்கு சஞ்சலமேன்?

வித்தைக் கிறைவா, கணநாதா!

மேன்மைத் தொழிலில் பணியெனையே!

தொடரும்

அலைபேசி: 94869 65655

'இலக்கியமேகம்' என்.ஸ்ரீநிவாஸன்






      Dinamalar
      Follow us