/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
விருப்பம் நிறைவேற்றும் 'பூவிழுங்கி'
/
விருப்பம் நிறைவேற்றும் 'பூவிழுங்கி'
ADDED : செப் 13, 2019 10:33 AM

பட்டுக்கோட்டையில் அருள்புரியும் 'பூவிழுங்கி' விநாயகரை வழிபட்டால் உங்களது விருப்பம் நிறைவேறும்.
இளமையில் பிரம்மச்சாரியாக இருப்பவன் பின் திருமணம் செய்து குடும்பஸ்தனாக வாழ்கிறான். பின் முதுமையில் பிள்ளைகளிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தவத்தில் ஈடுபட காட்டுக்குச் செல்ல வேண்டும். தற்போது திருத்தல யாத்திரை செல்கின்றனர். இல்லறம் போல துறவறமும் அவசியம் என்பதை உணர்த்த சிவனும், பார்வதியும் இப்பகுதியில் தங்கியிருந்தனர். இப்பகுதி புராதனமான (பழமையான) வனம் (காடு) என்பதால் சுவாமிக்கு 'புராதனவனேஸ்வரர் எனப் பெயர் வந்தது.
சிவன் தவம் செய்த காலத்தில் அசுரர்களின் அட்டகாசம் அதிகரித்தது. தேவர், முனிவர்களை துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்கள் சிவனின் தவத்தை கலைக்க மன்மதனை வரவழைத்தனர். உலக நன்மைக்காக சிவன் மீது மலர்க்கணை தொடுத்தான் மன்மதன். இந்த இடம் 'பூவனம்' எனப்படுகிறது.
தவம் கலைந்த சிவன் நெற்றிகண்ணைத் திறக்கவே, மன்மதன் சாம்பல் ஆனான். இந்த இடம் 'மதன் பட்டவூர்' என்றானது. மன்மதனுக்கு உயிர் பிச்சை தர வேண்டும் என தேவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். சிவன் அனுமதியுடன் சாம்பல் மீது பால் தெளிக்க அவன் உயிர் பெற்றான். இந்த இடம் 'பாலத்தளி' எனப்படுகிறது. இங்குள்ள காமன் பொட்டலில் ஆண்டுதோறும் பங்குனியில் 'காமன் பண்டிகை' நடக்கிறது. இங்குள்ள அம்மன் பெரியநாயகி எனப்படுகிறாள். அவளை வழிபட்டால் மணவாழ்வு சிறக்கும். குழந்தைப்பேறு கிடைக்கும். நோய் தீரும். வயதானவர்கள் புராதன வனேஸ்வரர், பெரியநாயகியை தரிசித்தால் நிம்மதி நிலைக்கும். இங்குள்ள விநாயகரின் காதிலுள்ள துவாரங்களில் வேண்டுதல்களை நினைத்து பக்தர்கள் பூக்களை வைப்பர். அவற்றை விநாயகர் உள்ளே இழுத்துக் கொண்டால் வேண்டுதல் நிறைவேறும். இவரை 'பூவிழுங்கி விநாயகர்' என்கின்றனர்.
எப்படி செல்வது: தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை 51 கி.மீ.,
விசேஷ நாட்கள்: நவராத்திரி, மகா சிவராத்திரி, மகா பிரதோஷம்
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோயில்(16 கி.மீ.,)