ADDED : ஜூலை 02, 2023 10:45 AM

காட்டு யானைகள் வழிபட்ட ஐயப்பன் கேரள மாநிலம் மூணாறு அருகிலுள்ள ஆனைச்சால் என்னும் இடத்தில் இருக்கிறார். உத்திர நட்சத்திரத்தன்று இவரை தரிசித்தால் நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.
காடுகள் நிறைந்த இப்பகுதியில் வனதெய்மான சாஸ்தாவை பழங்குடியினர் வழிபட்டனர். திருவனந்தபுரம் சித்திரை திருநாள் மகாராஜா காலத்தில் இங்கு சிறிய கோயில் கட்டப்பட்டது. பிரிட்டிஷ் ஆதிக்கம் ஏற்பட்ட பிறகு காடுகள் அழிக்கப்பட்டு தேயிலை தோட்டமாகியது. பழங்குடியினர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயரவே வழிபாடு மறைந்தது. பிற்காலத்தில் அரசு சார்பாக பவுர்ஹவுஸ் உருவானது. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டனர். இதிலிருந்து விடுபட்டு நலமுடன் வாழ ஐயப்ப பஜனை செய்ய ஆரம்பித்தனர். யானை நடமாட்டம் இருந்ததால் இப்பகுதி ஆனைச்சால் எனப்பட்டது. ஆனைச்சால் என்பதற்கு 'யானை செல்லும் பாதை' என்பது பொருள். பஜனை மடம் நாளடைவில் மீண்டும் கோயிலாக உருவானது.
மூலவர் ஐயப்பன் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கியபடி இருக்கிறார். பிரகாரத்தில் கன்னிமூல விநாயகர், முருகன், மகாவிஷ்ணு, நாகராஜா, குகையட்சி, மாளிகைப்புறத்தம்மன் சன்னதிகள் உள்ளன. கார்த்திகை மாத மண்டல கால பூஜையில் 41 நாட்கள் ஆனைச்சாலை சுற்றியுள்ள ஊர்களில் நெல் உள்ளிட்ட விவசாயப் பொருட்களை பக்தர்கள் காணிக்கையளிப்பர். இதற்கு 'நெல்பறை' என்று பெயர். இதன் மூலம் மண்டல பூஜையின் கடைசி ஏழு நாட்கள் ஸ்ரீவேலி பவனியும், அன்னதானமும் நடக்கும்.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் கீழ் கோயில் செயல்படுகிறது.
ஐயப்பன் அவதரித்த பங்குனி உத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். பேட்டை துள்ளலின் போது கோயிலுக்கு அருகிலுள்ள ஆல்தலாவில் இருந்து பக்தர்கள் நடனமாடி வருவர். அவர்களை வரவேற்க கருடன் மூன்று முறை கோயிலைச் சுற்றுவது சிறப்பு.
கன்னிமூல விநாயகருக்கு தேங்காய் உடைத்தால் தடைகள் விலகும். விருப்பம் நிறைவேற வியாழன் தோறும் சகஸ்ர நாம பூஜையும், திருமணத்தடை விலகவும் குழந்தைப்பேறு கிடைக்கவும் ஆயில்ய நட்சத்திரத்தன்று நாகர்பூஜையும் நடக்கிறது.
எப்படி செல்வது
* கொச்சி - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ.,
அங்கிருந்து இடுக்கி சாலையில் 4 கி.மீ.,
* மூணாறில் இருந்து 14 கி.மீ.,
* அடிமாலியில் இருந்து 13 கி.மீ.,
விசேஷ நாள்: சித்திரை விஷு விநாயகர் சதுர்த்தி, மண்டலகால பூஜை, பங்குனி உத்திரம்
நேரம்: அதிகாலை 5:00-11:00 மணி; மாலை 5:30 - 7:00 மணி
தொடர்புக்கு: 82819 49268, 94473 96200
அருகிலுள்ள தலம்: மூணாறு முருகன் கோயில் 15 கி.மீ.,
நேரம்: காலை 6:30- 12:00 மணி; மாலை 4:30 - 7:30 மணி
தொடர்புக்கு: 94474 70935

