ADDED : மார் 24, 2017 10:21 AM

சிதம்பரம் தில்லை திருப்பெருந்துறை ஆத்மநாதசுவாமி கோவிலில், அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் லிங்கவடிவில் காட்சி தருகின்றனர்.
தல வரலாறு: மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சர் மாணிக்கவாசகர். பாண்டிய நாட்டு படைக்கு, அரசர் தந்த பணத்தில் குதிரை வாங்கச் சென்றார். வழியில் திருப்பெருந்துறை (புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில்) என்ற தலத்தில் தங்கினார். அங்கு சிவன் அவருக்கு காட்சியளித்து 'சின்முத்திரை' காட்டி உபதேசம் செய்தார். சிவபக்தராக மாறிய மாணிக்கவாசகர், அரசன் கொடுத்த பணத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார். மூலஸ்தானத்தில் சிவனுக்கு லிங்கமோ, சிலையோ வைக்கவில்லை. அம்மன் சன்னிதியில் பாதம் மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சுவாமிக்கு ஆத்மநாதர், அம்பாளுக்கு யோகாம்பாள் என பெயர் வைத்தார். மக்களின் வரிப்பணத்தை மாற்று வழியில் செலவிட்ட மாணிக்கவாசகரை அரசன் சிறையில் அடைத்தான். சிவன் மண் சுமக்கும் தொழிலாளியாக வந்து, மாணிக்கவாசகரின் பக்தியை மன்னனுக்கு உணர்த்தினார். இதன்பின், மதுரையில் இருந்து சிதம்பரம் சென்ற மாணிக்கவாசகர், சிதம்பரத்திலும் ஆத்மநாதருக்கு ஒரு கோவில் கட்டினார். இத்தலம் தில்லை திருப்பெருந்துறை எனப்பட்டது. இங்குள்ள மூலஸ்தானத்திலுள்ள சிவலிங்கம் முழுமை பெறாமல் இருக்கிறது. தெய்வங்களை உருவமே இல்லாமல் மனதில் நிறுத்தி ஆத்மார்த்தமாக வணங்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தக் கோவில்கள் எழுந்தன.
துறவியாக வந்த சிவன்: மாணிக்கவாசகர் முன்பு துறவியைப் போல தோன்றிய சிவன், அவரது பாடல்களைக் கேட்க விரும்பினார். மாணிக்கவாசகர் பாட சிவன் அவற்றைத் தொகுத்து 'இப்பாடல்கள் மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய வண்ணம் எழுதப்பட்டது' என எழுதி 'திருச்சிற்றம்பலம் உடையார்' எனக் கையெழுத்திட்டார். மறுநாள் அதை சிதம்பரம் நடராஜர் சன்னிதியில் வைத்து மறைந்தார். வேத பண்டிதர்கள் மாணிக்கவாசகரிடம் அந்தப்பாடல்களுக்கு விளக்கம் கேட்டனர்.
அப்போது துறவி வடிவ சிவன் வந்தார். பண்டிதர்களிடம் அவரைக் காட்டிய மாணிக்கவாசகர், 'இவரே இதற்கான பொருள்' என்று சொல்லி, சிவனுடன் இரண்டறக் கலந்தார்.
குரு மாணிக்கவாசகர்: திருப்பெருந்துறையைப் போல், இங்கும் சிவலிங்கம் தெற்கு நோக்கி உள்ளது. புழுங்கல் அரிசியில் வடித்த சாதத்தின் ஆவியை சுவாமி முன் காட்டி, பாகற்காய் கறியும் படைப்பர். மாணிக்கவாசகர், தட்சிணாமூர்த்தியைப் போல, சின்முத்திரை காட்டி காட்சியளிக்கிறார். இவரை வியாழக்கிழமைகளில் வழிபட்டால் கல்வியில் முன்னிலை பெறலாம். மாணிக்கவாசகர் குருபூஜையன்று, அவர் சிவனுடன் இரண்டறக் கலக்கும் வைபவம் நடக்கும்.
லிங்க வடிவில் நால்வர்: நடராஜரின் நடனத்தை தரிசிக்க வந்த வியாக்ரபாத முனிவர் சிதம்பரத்தில் தங்கியிருந்தார். அவரது குழந்தை உபமன்யு, பசியால் அழுதான். சிவன் அவனுக்காக பாற்கடலை வரச் செய்து பால் கொடுத்தார். அந்தக் கடல் தீர்த்த வடிவில் உள்ளது. முன்மண்டபத்தில் யோக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் லிங்க வடிவில் உள்ளனர். யோக விநாயகர், அகோர வீரபத்திரர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன.
இருப்பிடம்: சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கி.மீ., தூரம். 'திருப்பாற்கடல் கோவில்' என்று சொன்னால் தான் தெரியும்.
நேரம்: காலை 8:00 - இரவு 8:00 மணி
அலைபேசி: 94431 12098

