
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரத்தில் கதிர் நரசிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. சூரிய தோஷ நிவர்த்தி தலமான இங்கு ஞாயிறன்று வழிபடுவது சிறப்பு.
தல வரலாறு: இப்பகுதியை ஆண்ட மன்னர் சிவன், பெருமாளுக்கு ஒரே இடத்தில் கோவில் கட்ட நினைத்தார். ஆனால், எங்கு கோவில் கட்டுவது என்ற குழப்பம் இருந்தது. சிவனும்,பெருமாளும் மன்னரின் கனவில் தோன்றி, குறிப்பிட்ட இடத்தில் கோவில் எழுப்ப உத்தரவிட்டனர். அங்கு அஸ்திவாரத்துக்காக தோண்டிய போது, ஒரு சிவலிங்கம் கிடைத்தது. அதை பிரதிஷ்டை செய்த மன்னர், அருகில் பெருமாள் சிலையையும் வைத்தார். இவருக்கு 'கதிர் நரசிங்கப் பெருமாள்' என பெயர் சூட்டப்பட்டது. இவரது பெயரே கோவிலுக்கு நிலைத்து விட்டது.
சூரியதோஷ நிவர்த்தி: கருவறையில் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் உள்ளார். நரசிம்மராக இருந்தாலும், சிங்க முகம் இல்லாமல் மனித வடிவில் இருக்கிறார். ஜாதகத்தில் சூரியதிசை, புத்தி நடப்பில் உள்ளவர்கள் ஞாயிறன்று வழிபட்டால் நன்மை உண்டாகும். முதலில் பெருமாளுக்கும், அடுத்து சிவலிங்கத்திற்கும் பூஜை நடத்துகின்றனர்.
வீரஆஞ்சநேயர்: கமலவல்லி தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். மாணவர்கள் கல்வியில் முன்னேற, லட்சுமி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர். திருமணத்தடை நீங்க வீர ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துகின்றனர். தொழில் வளர்ச்சிக்கும், பயம், கிரக தோஷம் நீங்கவும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவரை வழிபடுகின்றனர்.
சக்கரத்தாழ்வார்: சக்கரத்தாழ்வார் பதினாறு கைகளுடன், அக்னி கிரீடம் தாங்கி அருள்பாலிக்கிறார். இவரைச் சுற்றிலும் காயத்ரி மந்திர தேவதைகள் உள்ளனர். சக்கரத்தாழ்வாரின் சிரசுக்கு மேலே இரண்யனை வதம் செய்த நரசிம்மரும், பாதத்திற்குக் கீழே லட்சுமி நரசிம்மரும் உள்ளனர். சனிக்கிழமையில் இவருக்கு துளசிமாலை சாத்தி வழிபட எண்ணியது நிறைவேறும்.
இருப்பிடம்: திண்டுக்கல் - வேடசந்தூர் சாலையில் 15 கி.மீ.,
நேரம்: காலை 7:30 - மாலை 6:30 மணி.
தொலைபேசி: 0451 - 255 4324.

