ADDED : ஜூலை 13, 2018 10:06 AM

சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டும் என கோமதியம்மன் தவமாய் தவமிருந்த தலம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில். இங்கு 'ஆடித்தபசு' விழா 12 நாட்கள் சிறப்பாக நடக்கும்.
தல வரலாறு: நாக அரசரில் சங்கன் சிவபக்தனாகவும், பதுமன் விஷ்ணுபக்தனாகவும் இருந்தனர். இதில் சிவன் பெரியவரா? விஷ்ணு பெரியவரா? என்ற வாதம் எழவே, தீர்ப்பு வேண்டி பார்வதியிடம் முறையிட்டனர். இருவரும் சம சக்தி கொண்டவர்களே என்பதை உலகிற்கு உணர்த்த விரும்பிய பார்வதி தவமிருக்க முடிவு செய்தாள். இதற்காக பூலோகம் வந்த போது, தேவலோக பெண்களும் பசுக்களாக உடன் வந்தனர். அக்னி வளர்த்து, அதன் நடுவே ஒற்றை விரலை ஊன்றி நின்று கொடிய தவமிருந்தாள் பார்வதி. இதையடுத்து சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சியளித்தனர். பின் சிவன் இத்தலத்தில் சங்கரலிங்கமாக எழுந்தருளினார்.
நாக அரசர்கள் இருவரும் பாம்பு வடிவில் சங்கரலிங்கத்தை வழிபட்டு வந்தனர். காலப்போக்கில் லிங்கத்தை புற்று மூடவே, நாகங்கள் அதனுள் இருந்தன. பக்தர் ஒருவர் அறியாமல் புற்றை இடித்த போது, உள்ளிருந்த நாகத்தின் வால் வெட்டுப்பட, ரத்தம் பீறிட்டது. மேலும் புற்றுக்குள் சிவலிங்கம் இருப்பது கண்டு அதிர்ந்தார். விஷயம் பாண்டிய மன்னனை எட்டியதும், கோயில் கட்டப்பட்டது. சங்கரநயினார், சங்கர நாராயணர் என அழைக்கப்பட்ட இக்கோயில் சங்கரன்கோவில் எனப்படுகிறது.
சங்கர நாராயணர்: சங்கரலிங்கம், கோமதியம்மன் சன்னதிகளுக்கு நடுவில் சங்கர நாராயணர் சன்னதி உள்ளது. சிவனுக்குரிய வலப்பாகத்தில் தலையில் கங்கை, பிறைசந்திரன், அக்னி, ஜடாமுடி உள்ளன. காதில் தாடங்கம், கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் ஆடை இருக்கிறது. திருமாலுக்குரிய இடப்பாகத்தில் நவமணி கிரீடம், காதில் மாணிக்க குண்டலம், மார்பில் துளசிமாலை, கையில் சங்கு, இடுப்பில் பீதாம்பரம் உள்ளது. காலை பூஜையின் போது துளசிதீர்த்தம் தரப்படுகிறது. மற்ற நேரத்தில் விபூதி தரப்படும். பூஜையின் போது சிவனுக்குரிய வில்வம், பெருமாளுக்குரிய துளசி மாலைகள் அணிவிக்கப்படுகிறது. அலங்காரத்துடன் காட்சி தரும் சங்கர நாராயணருக்கு அபிஷேகம் கிடையாது.
கோமதியம்மன்: சந்திரன் (மதி) போல அழகு முகத்துடன் இருப்பதாலும், பசுக்களுடன் தவமிருக்க வந்ததாலும் அம்மன், 'கோமதி' எனப் பெயர் பெற்றாள். 'கோ' மற்றும் 'ஆ' என்பதற்கு 'பசு' என்பது பொருள். பசுக்களை உடையவள் என்பதால் இவளை கோமதி என்கின்றனர். இவளுக்கு திங்கள்கிழமையில் பூப்பாவாடை, வெள்ளிக்கிழமையில் தங்கப்பாவாடை அணிவிக்கின்றனர். திருமண, புத்திரதோஷம் உள்ளவர்கள் மாவிளக்கு ஏற்றுகின்றனர். ஆடித்தபசு மண்டபத்தில் ஜூலை 27 அன்று காலையில் கோமதியம்மன் தவக்கோலமும், மாலையில் சங்கரநாராயணராக சுவாமி காட்சியளிக்கும் வைபவமும் நடக்கும். சன்னதியின் முன்மண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்து வழிபட்டால் மனக்குழப்பம் தீரும்.
சர்ப்ப விநாயகர்: 'சர்ப்ப விநாயகர்' கையில் நாகத்துடன் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இவருக்கு ஞாயிறு ராகு காலத்தில், பாலபிஷேகம் செய்து, பால் பாயாசம் படைக்கின்றனர். குழந்தைகள், விஷப்பூச்சிகளால் பாதிக்கப்படாமல் இருக்க இவருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கின்றனர்.
எப்படி செல்வது: மதுரையில் இருந்து விருதுநகர் வழியாக 120 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆடித்தபசு 12 நாள் விழா, மகாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி
நேரம் : அதிகாலை 5:00 - 12:30 மணி ; மாலை 4:00 -0 9:00 மணி
தொடர்புக்கு: 04636 - 222 265
அருகிலுள்ள தலம்: 22 கி.மீ., துாரத்தில் கழுகுமலை முருகன்கோயில்