ADDED : பிப் 01, 2021 07:02 PM

கும்பகோணம் அருகிலுள்ள வெள்ளியங்குடி பெருமாள் கோயிலில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி கருடாழ்வார் இருக்கிறார். இவரை வழிபட்டால் கிரக தோஷம், விஷபயம் நீங்கும்.
வாமனர் வடிவில் தோன்றிய மகாவிஷ்ணு மூன்றடி மண்ணை தானம் கேட்டு மகாபலி சக்கரவர்த்தியிடம் வந்தார். வந்திருப்பவர் கடவுள் என்பதை அறியாமல் அவனும் சம்மதித்தான். தானம் கொடுப்பதை தடுக்க விரும்பிய அசுரகுருவான சுக்கிராச்சாரியார் வண்டாக மாறி, வாமனரின் தாரா பாத்திரத்தின் (கெண்டி) துவாரத்தில் தீர்த்தம் வராமல் தடுத்தார். வாமனர் தர்ப்பை புல்லால் துவாரத்தைக் குத்தவே, வண்டான சுக்கிராச்சாரியாரின் பார்வை போனது. இங்கு வழிபட்ட சுக்கிராச்சாரியார் மீண்டும் பார்வை பெற்றார். இதன் காரணமாக இத்தலம் வெள்ளியங்குடி என பெயர் பெற்றது. 'வெள்ளி' என்பது சுக்கிராச்சாரியாரின் பெயர்களில் ஒன்று. கருவறையில் அணையா தீபமாக இவர் இருக்கிறார். வெள்ளிக்கிழமையில் இங்கு வழிபட்டால் பார்வை குறைபாடு, சுக்கிர தோஷம் நீங்கும். மூலவரின் பெயர் கோலவில்லி ராமர். உற்ஸவர் சிருங்கார சுந்தரர். தாயாரின் திருநாமம் மரகதவல்லி. கிழக்கு நோக்கி பள்ளி கொண்ட நிலையில் மூலவர் இருக்கிறார். திருமேனியில் வர்ணம் பூசியபடி இருக்கும் இவருக்கு பாற்கடல்நாதர் என்றும் பெயருண்டு.
ஒருமுறை அசுரர் குல சிற்பியான மயன் இங்கு தவம் புரிந்தான். அவனுக்கு அருள்புரிய வந்த மகாவிஷ்ணு சங்கு சக்கரத்துடன் கருட வாகனத்தில் காட்சியளித்தார். அப்போது மயன் வில்லேந்திய ராமர் கோலத்தில் தரிசிக்க விரும்புவதாக தெரிவித்தான். தன் கையிலிருந்த சங்கு, சக்கரத்தை கருடனிடம் கொடுத்து விட்டு, ராமனாக தரிசனம் கொடுத்தார். சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கருடன் இங்கு தங்கினார். திவ்ய தேசங்களில் இங்கு மட்டுமே கருடன் நான்கு கைகளுடன் இருக்கிறார். இவருக்கு துளசிமாலை அணிவித்து தீபமேற்றி வழிபட கிரகதோஷம், விஷபயம் நீங்கும். சுக்கிர, பிரம்ம, பரசுராம, இந்திர தீர்த்தங்கள் இங்குள்ளன.
எப்படி செல்வது: கும்பகோணம் - அணைக்கரை சாலையில் சோழபுரம் 8 கி.மீ. இங்கிருந்து பிரியும் சாலையில் 6 கி.மீ.,
விசேஷ நாள்: கருடஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி
நேரம்: காலை 8:00 - மதியம் 12:00 மணி; மாலை 5:00 - மாலை 6:30 மணி
தொடர்புக்கு : 94433 96212, 98410 16079
அருகிலுள்ள தலம்: கும்பகோணம் சாரங்கபாணி கோயில் 14 கி.மீ.,
நேரம்: காலை 7:00 - மதியம் 12:00 மணி மாலை 5:00 - இரவு 9:00 மணி
தொடர்புக்கு: 94435 24529