sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

சிவாலயத்தில் சொர்க்கவாசல்

/

சிவாலயத்தில் சொர்க்கவாசல்

சிவாலயத்தில் சொர்க்கவாசல்

சிவாலயத்தில் சொர்க்கவாசல்


ADDED : ஜூன் 03, 2011 09:54 AM

Google News

ADDED : ஜூன் 03, 2011 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வைகுண்டஏகாதசியில் பெருமாள் சொர்க்கவாசல் கடப்பதைப் போல, கர்நாடக மாநிலம் தலக்காடு வைத்தியநாதர் பொங்கலன்று சொர்க்கவாசல் கடக்கிறார். தீராத நோயுள்ளவர்கள் இவரை வணங்கி வரலாம்.

தல வரலாறு: சோமதத்த மகரிஷி முக்தி பெற வேண்டி காசி விஸ்வநாதரை வழிபட்டு வந்தார். சிவன் அவரது கனவில் தோன்றி,''சோமா! தட்சிணதேசத்தில் கஜாரண்யம் என்னும் காடு இருக்கிறது. அங்கே சென்று என்னை வழிபட்டு வா! உன் எண்ணம் நிறைவேறும்,'' என்று வரமளித்தார். காட்டில் இருந்த யானைகள்செய்த இடையூ றால், அந்த மகரிஷியால் இறைவனைப் பூஜிக்க முடியவில்லை. எனவே, அவரும் யானையாக மாறி பூஜை செய்து வந்தார்.

ஒருநாள் தலா, காடன் என்னும் வேடர்கள் யானை வேட்டைக்கு காட்டுக்கு வந்தனர். யானை வடிவில் இருந்தசோமதத்த மகரிஷியைக் குறிவைத்தனர். அந்த அம்பு குறிதவறி ஒரு புற்றில் விழுந்தது. அங்கிருந்து ரத்தம் பீறிட்டது. வேடர்கள் புற்றை நோக்கி விரைந்து வந்தனர். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ''வேடர்களே! இந்த புற்றினுள் சிவனாகிய நான் சுயம்புலிங்கமாக இருக்கிறேன். என் மீது அம்புபட்டு ரத்தம் கொட்டுகிறது. இந்தக் காயத்தைக் குணமாக்கும் மூலிகைச் செடி இன்ன இடத்தில் இருக்கிறது. அதைப்பறித்து எனக்கு மருந்திடுங்கள்,'' என்றது. தலாவும், காடனும் அதன்படியே மருந்திட்டனர். பிறகு சிவன் அங்கு தோன்றினார். யானையாக இருந்த சோமதத்தமகரிஷிக்கும்,வேடர்களுக்கும் முக்தியளித்து மறைந்தார். காயத்திற்கு மருந்து சொன்ன காரணத்தால் இறைவனுக்கு 'வைத்தியநாதர்' என்ற பெயர் உண்டானது. காவிரிநதியின் கரையில் அமைந்திருக்கும் இத்தலம் வேடர்களின் பெயரால் 'தலக்காடு' என பெயர் பெற்றது.

ஐந்து சிவாலயங்கள்: சுயம்புமூர்த்தியான வைத்தியநாதர் வீற்றிருக்கும் இவ்வூரைச் சுற்றி காவிரி நதி நான்கு திசைகளிலும் வளைந்து திரும்புகிறது. அந்த இடங்களில் சிவனுக்கு கோயில்கள் உள்ளன. தலக்காட்டின் கிழக்குப்பகுதியில் சூரியன் வழிபட்ட அர்க்கேஸ்வரர் கோயில் உள்ளது. சூரியன் இவரை வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றார். தெற்குத்திசையில் உள்ள பாதளேஸ்வரர், சர்ப்பங்களில் புகழ்பெற்ற வாசுகியால் வழிபடபட்டதாகும். பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட சைகதேஸ்வரர் கோயில் ஊரின் வடக்கில் இருக்கிறது. மேற்குப்பகுதியில் அர்ஜுனனால் வணங்கப்பட்ட மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் கொண்டிருக்கிறார். நடுநாயகமாக தலக்காடு வைத்தியநாதர் கோயில் உள்ளது.

புற்றில் சுயம்புமூர்த்தி: வைத்தியநாதர் புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. கவசம் மட்டுமே சாத்தப்படுகிறது. ஐந்துதலை நாகத்தை தலையில் ஆபரணமாகச் சூடியிருக்கிறார். லிங்க பாணத்தில் சிவனின் முகம் உள்ளது. இவரை தரிசித்து தீர்த்தம் அருந்தினால் நோய்கள் தீரும். இங்குள்ள புற்றில் இருந்து 'மிருத்திகா' என்னும் புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கட்டி, கொப்பளத்திற்கு மருந்தாக பக்தர்கள் இட்டுக் கொள்கின்றனர். நெற்றியில் பூசிக் கொள்வதும் உண்டு.

சொர்க்கவாசல் திறப்பு : மூலவருக்கு நேராக உள்ள கோபுர வாசல் தவிர மற்றொரு வாசலும் உள்ளது. இவ்வாசலைச் 'சொர்க்கவாசல்' என்று அழைக்கின்றனர். பொங்கல் அன்று இவ்வாசல் திறக்கப்படும்.இவ்விழாவை 'சொர்க்க பாதல் தையலு' என்று அழைக்கின்றனர். பொங்கலன்று இரவு சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக கிளம்புவர். மீண்டும் கோயிலுக்கு திரும்பும்போது சொர்க்கவாசல் வழியாக நுழைவர். மார்கழியில் பெருமாள் கோயில்களில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழாவைப் போலவே இது அமைந்துள்ளது. இவ்வாசல் வழியாக வந்து வைத்தியநாதரைத் தரிசித்தவர்கள் கைலாயத்தில் வாழும் பாக்கியத்தை அடைவர்.

இருவித துவாரபாலகர்: மூலவர் சந்நிதி நுழைவாயிலின் இருபுறமும் நந்தி, மகாகாளர் என்னும் துவாரபாலகர் சிலைகள் உள்ளன. நந்தி ஆண் கல்லினாலும், மகாகாளர் பெண் கல்லினாலும் வடிக்கப்பட்டுள்ளனர். நந்தியைத் தட்டினால் 'கண்டநாதம்' என்னும் மணியோசையும், மகாகாளரைத் தட்டினால் 'தாளநாதம்' என்னும் இனிய ஓசையும் ஒலிக்கிறது. இது சிற்பத்திறனைக் காட்டுகிறது.

குதிரை மீது விஜயகணபதி: மகாகாளர் அருகில் குதிரை வாகனத்தின் மீது விஜயகணபதி ஒரு போர்வீரனைப் போல வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் செயல்களில் வெற்றி உண்டாகும். பள்ளிக் குழந்தைகள் கல்விமுன்னேற்றத்துக்காக செம்பருத்திப்பூ இட்டு வணங்குகின்றனர். இவரின் குதிரை வாகனத்தின் கால்களை மறைத்து விட்டு பார்த்தால் மூஞ்சுறு போல காட்சி தருவது அதிசயமாக உள்ளது.

சிறப்பம்சம்: அம்பிகை மனோன்மணி, இருகைகளில் தாமரை மலரைத் தாங்கி நிற்கிறாள். மற்ற கைகள் வரத, அபயஹஸ்தமாக உள்ளன. ஆடியில் அம்பாளுக்கு முளைக்கொட்டு விழா நடக்கிறது. சக்தி கணபதி, பத்ரகாளி, கமடேஸ்வரர், அபயவெங்கட்ரமணர், மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர் சந்நிதிகளும் உள்ளன. பஞ்சபூதங்களைக் குறிக்கும் பஞ்சலிங்கங்கள் வெளிப்பிரகாரத்தில் உள்ளன. சொர்க்கவாசலுக்கு எதிரே சுதையால் ஆன நந்தி உள்ளது. கோயிலில் ஸ்தபதியாகப் பணியாற்றிய நாககுண்டலாச்சாரி தன் பெயரைக் குறிப்பிடும் விதத்தில் பாம்பலான கல் சங்கிலியை உருவாக்கி வைத்துள்ளார். கோயில் அருகில் கல்யாணி தீர்த்தம் உள்ளது.

திருவிழா: வைகாசி மாதம் பவுர்ணமி நாளில் பிரத்யட்ச உற்சவம் என்னும் வைத்தியநாதர் ஜெயந்தி நடைபெறும். இவ்வாண்டு மே 17ல் இந்த விழா நடக்கிறது. பங்குனியில் பிரம்மோற்ஸவம், மகாசிவராத்திரி, மகரசங்கராந்தி, திருக்கார்த்திகை, கார்த்திகை சோமவாரம்

திறக்கும்நேரம்: காலை6.30- பகல்1.30 மணி, மாலை4.30- இரவு8.30மணி

இருப்பிடம்: மைசூருவில் இருந்து 40கி.மீ., . பஸ் உண்டு.

போன்: 98861- 24419,08227- 273413.

சப்தாஹ உற்ஸவம்

ஐந்து சிவலாயங்களுக்கும் ஒரேநாளில் சென்று வழிபடுவது சிறப்பாகும். கார்த்திகை மாத சோமவாரங்களில் இங்கு சென்று வரலாம். ஐந்து சோமவாரங்கள் வரும் ஆண்டுகளில், கடைசி சோமவாரத்தன்று விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இணைந்து வருமானால், அந்த ஆண்டில் 'சப்தாஹ உற்ஸவம்' என்னும் ஏழுநாள் விழா நடக்கும். 1979, 86,93, 2006,2009ம் ஆண்டுகளில் சப்தாஹவிழா நடந்தது. இந்த அபூர்வ விழா மீண்டும் வரும் ஆண்டுகளில், காவிரியில் நீராடி விரதமிருந்து ஐந்து கோயில்களுக்கும் சென்று வணங்கினால், எல்லா நலன்களும் இப்பிறவியிலேயே உண்டாகும்.






      Dinamalar
      Follow us