ADDED : ஆக 25, 2023 11:22 AM

வாழ்வில் குறுக்கிடும் தடைகளை தகர்க்கும் தைரியம் மனதில் பிறக்க வேண்டுமா... கோலவிழிகளுடன் அருள்புரியும் கோலாப்பூர் மகாலட்சுமியை ஒருமுறை தரிசிக்க வாருங்கள்.
இவளது சிலை அரிதாக கிடைக்கும் கருமை நிற ரத்தினக்கல்லால் ஆனது.
பிரளயகால வெள்ளத்தில் கடல் பொங்கி பூமி அழியத் தொடங்கியது. ஆனால், பூமியில் ஒரே ஒரு பகுதியை மட்டும் அன்னை மகாலட்சுமி தன் வலது கையால் உயர்த்தி அழிவில் இருந்து காப்பாற்றினாள். அந்த இடம் 'கரவீர்' எனப்பட்டது. 'கர' என்பதற்கு 'கை' என்றும், 'வீர்' என்றால் 'வீரம்' என்றும் பொருள். லட்சுமி வீரச்செயல் புரிந்ததால் 'வீரலட்சுமி அல்லது தைரிய லட்சுமி' என அழைக்கப்படுகிறாள். அஷ்ட லட்சுமிகளில் ஒருத்தியான இவளை வழிபட்டால் போதும்... மற்ற ஏழு லட்சுமிகளின் அருளும் நமக்கு கிடைக்கும். இத்தலத்தின் மகிமை அறிந்த அகத்தியர், காசிக்கு நிகரான புண்ணிய தலமாக விளங்க வேண்டும் என சிவனிடம் விண்ணப்பிக்க அவரும் அருள்புரிந்தார்.
முற்காலத்தில் 'குளபுரா' எனப்பட்ட இத்தலம் கோலாசுரன் என்ற அரக்கனை சிங்க வாகனத்தில் தோன்றிய லட்சுமி கொன்றதால் 'கோலாப்பூர்' என மாறியது.
சக்தி பீடங்களில் இத்தலம் 'கரவீர பீடம்' எனப்படுகிறது. மராட்டிய மன்னர்களின் பாணியில் கட்டப்பட்ட இக்கோயிலில் மகாதுவாரம் எனப்படும் பிரதான மேற்கு வாசலில் உள்ள தீப ஸ்தம்பங்கள் காண்போரை கவரும் விதத்தில் உள்ளன. கருவறையில் மகாலட்சுமி சதுர பீடத்தில் நின்றகோலத்தில் அமுதசுரபியை ஏந்தியபடி இருக்கிறாள். ஆதிசேஷன் குடைபிடித்த நிலையில் உள்ளது. 1300 ஆண்டுகள் பழமை மிக்க அன்னையின் சிற்பம் மிக அரிதான கரிய ரத்தினக் கல்லால் ஆனது.
சூரியன் இங்கு வழிபடும் விதத்தில் ஆண்டின் ஆறு நாட்கள் மாலை நேரத்தில் கருவறையில் உள்ள ஜன்னல் வழியாக ஒளிக்கதிர்களை பரப்புகிறார்.
ஜன.31, நவ. 9 ல் மகாலட்சுமியின் திருவடியிலும், பிப். 1, நவ. 10ல் மார்பிலும், பிப்.2, நவ.11ல் திருமேனி முழுவதும் சூரியக்கதிர் படர்கிறது. இந்த சமயத்தில் தரிசிப்போருக்கு உடல்நலம், செல்வம் பெருகும். காளி, சரஸ்வதி, நவக்கிரகம், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதர், சீதை, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சன்னதிகளும் உள்ளன.
எப்படி செல்வது:
* சென்னையில் இருந்து 960 கி.மீ.,
* மும்பையில் இருந்து 370 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி ஸ்ரீராமநவமி, அனுமன் ஜெயந்தி
நேரம்: காலை 6:00 -- 10:00 மணி; மாலை 4:00 -- 8:00 மணி
தொடர்புக்கு: 0231 - 254 1779
அருகிலுள்ள தலம்: ஜோதிபா மும்மூர்த்தி கோயில் 21 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 மணி - இரவு 10:00 மணி
தொடர்புக்கு: 02328 -- 239 041

