/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
தந்தையுடன் வாங்க தடை நீங்கி செல்லுங்க!
/
தந்தையுடன் வாங்க தடை நீங்கி செல்லுங்க!
ADDED : பிப் 25, 2014 04:53 PM

திருமணத்தடையால் பெண்ணுக்கு திருமணம் தடைபட்டால், தங்கள் தந்தையுடன் வந்து வழிபட வேண்டிய அகோர வீரபத்திரர் கோயில், திருவாரூர் மாவட்டம் வீராவாடியில் உள்ளது.
தல வரலாறு: அம்பன், அம்பாசுரன் என்னும் இரு அசுர சகோதரர்களின் தொந்தரவிற்கு ஆளான தேவர்கள், தங்களைக் காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன் அசுரர்களை அழிக்க, பார்வதி, மகாவிஷ்ணு இருவரையும் அனுப்பினார். மகாவிஷ்ணு வயோதிகர் வடிவம் எடுத்தும், பார்வதி அவரது மகள் போலவும் அசுரர்களின் இருப்பிடம் வந்தனர். அம்பன் பார்வதியின் அழகில் மயங்கி, முதியவரிடம் பெண் கேட்டான். அம்பாசுரனும் அவளை மணக்க விரும்பினான். இதைப் பயன்படுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, ''உங்களில் யார் சக்தி மிக்கவரோ அவரே என் பெண்ணை மணந்து கொள்ளட்டும்,'' என்றார். இதனால் சகோதரர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. அம்பாசுரனை அம்பன் கொன்று விட்டான்.அப்போது பார்வதி காளியாக உருவெடுத்து அம்பனையும் வதம் செய்தாள். இதனால் அவளுக்கு பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) ஏற்பட்டது. சிவன் தன் அம்சமான வீரபத்திரரை அனுப்பி, பிரம்மஹத்தியை விரட்டியடித்தார். அவர் 'அகோர வீரபத்திரர்' என்று பெயர் பெற்றார். இந்த நிகழ்வின் அடிப்படையில், இத்தலத்தில் வீரபத்திரருக்கு கோயில் எழுப்பப்பட்டது. சிவபெருமானும் மகாகாளர் என்ற பெயரில் இங்கு தங்கியுள்ளார்.
தீராத பாவமும் தீரும்: கொலைப்பழி உள்ளிட்ட தீராத பாவங்களைக் கூட இத்தலத்து வீரபத்திரரை மனமுருகி வழிபட்டால் தீரும். வீரபத்திரரின் கைகளில் வில், அம்பு, கத்தி, தண்டம் உள்ளது. கிரீடத்தில் சிவலிங்கம் இருக்கிறது. ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்த கோயில் இது. அசுரனை அழித்த காளி எட்டு கைகளுடன் உக்கிரமாக காட்சியளிக்கிறாள்.
தந்தை மகள் பிரார்த்தனை: சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கும், முன்மண்டபத்திலுள்ள மகாகாளருக்கும் நான்கு கால பூஜை நடக்கிறது. அசுர வதத்திற்காக இங்கு வந்த பெருமாள், கையில் பிரயோக சக்கரத்துடன் காட்சி தருகிறார். பார்வதி மற்றும் லட்சுமியுடன் சீனிவாசர் சந்நிதியும் உள்ளது. வீரபத்திரர் தங்கிய தலம் என்பதால் இவ்வூர், 'வீராவடி' (வீரபத்திரர் அடி பதித்த இடம்) என்று அழைக்கப்பட்டு 'வீராவாடி' என மருவியது. கோயில் அருகில் ஓடும் அரசலாறு வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடுவது விசேஷம். திருமணத்தடை, செவ்வாய் தோஷத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தையுடன் வந்து, செவ்வாய்க் கிழமைகளில் வீரபத்திரருக்கு வெற்றிலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க் கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்தால் திருமணத்தடை நீங்கும்.
திருமணம் முடிந்ததும், பெண்கள் தந்தையுடன் செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து, வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை, வில்வ இலை மாலை அணிவித்து, தயிர் சாதம் படைக்கிறார்கள். அஷ்டமியுடன் சேர்ந்து வரும் செவ்வாய்க்கிழமைகளில் சுவாமிக்கு எட்டு வகை மலர் அடங்கிய மாலை அணிவித்து பூஜை செய்கின்றனர்.
இருப்பிடம்: திருவாரூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் பூந்தோட்டம். இங்கிருந்து பிரியும் ரோட்டில் 2 கி.மீ.,
திறக்கும் நேரம்: காலை 9.00- 11.00. (சிவராத்திரியன்று முழுமையாக திறந்திருக்கும்)
போன்: 04366 - 239 105.

