ADDED : பிப் 24, 2017 10:17 AM

சிவனுக்குரிய வாகனமான காளை, பூஜையின் போது கருவறையில் வழிபட்டு பக்தர்களுக்கு ஆசீர்வதிக்கும் அதிசயம் கர்நாடக மாநிலம், மங்களூரு பாண்டேஸ்வரர் கோவிலில் நடக்கிறது. மகாசிவராத்திரியை ஒட்டி இத்தலத்தை தரிசிப்போம்.
தல வரலாறு: பாண்டவர்களில் மூத்தவரான தர்மர் சகுனியுடன் சூதாட்டத்தில் தோற்றுப்போனார். அவர்களது மனைவி திரவுபதியை, பலர் முன்னிலையில் துரியோதனன் அவமானப்படுத்தினான். அவமானம் தாங்காத அவள், குருக்ஷேத்திர யுத்தத்தில் துரியோதனனின் தலை உருண்டால் தான், தன் கூந்தலை முடிவேன் என சபதம் செய்தாள். இதன் பிறகு பாண்டவர்கள் காட்டிற்குப் புறப்பட்டனர். ஓரிடத்தில் அவர்கள் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த லிங்கம் இருந்த இடத்தில் ஒரு கோவில் எழுந்தது. பாண்டவர்கள் வழிபட்டதால் சுவாமிக்கு 'பாண்டேஸ்வரர்' என்று பெயர் உண்டானது. மகாலிங்கேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
சிறப்பம்சம்: கோவில் முகப்பில் பிரம்மாண்டமான சிவன் சிலையும், எதிரில் பெரிய நந்தியும் உள்ளது. பஞ்சுளி, முண்டித்தாயா, வைத்தியநாகர் என்னும் காவல் தெய்வங்கள் உள்ளன. காஷ்மீர் வைஷ்ணவிதேவி, லட்சுமிநாராயணர், ஆகியோருக்கு சன்னிதி உள்ளது. 22 அடி உயர ஆஞ்சநேயர் சிலை இருக்கிறது. நவக்கிரக மேடையில் அரசமரம் இருப்பது வித்தியாசமானது.
பயம் போக்கும் பூஜை: இங்கு சிவனின் ஜடாமுடி கருவறையைச் சுற்றிப் பரந்து கிடப்பதாக கருதப்படுகிறது. சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் புனித நீரும் சுவாமியின் பின் பக்கம் வரும். இதைத் தாண்டக்கூடாது என்பதால் இங்கு சன்னிதியைச் சுற்றும் வழக்கம் இல்லை. கார்த்திகை சோமவார நாட்களில் ருத்ரயாகம், ருத்ரபூஜை நடத்தப்படுகிறது. அப்போது ருத்ராட்சம், லட்ச வில்வ இலைகள் மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இந்த பூஜையின் போது, சிவனைத் தரிசித்தால் பயம் நீங்கி தைரியம் உண்டாகும்.
சன்னிதியில் காளை: இங்குள்ள பசுமடத்தில் காளை மாடு வளர்க்கப்படுகிறது. இது மதியம் 1:00 மணிக்கு நடக்கும் உச்சிக்கால பூஜையிலும், இரவு 8:00 மணிக்கு நடக்கும் அர்த்தஜாமபூஜை நேரத்திலும் சன்னிதிக்கு வந்து பூஜையில் பங்கேற்கிறது. கருவறையில் படிக்கட்டில் காளை ஏறியதும், சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பிக்கப்படும். அப்போது வெளிப்படும் காளையின் வாய்நுரை வாசனை, தங்கள் மீது பட்டால் உடல்நலமும், நீண்ட ஆயுளும் உண்டாகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
நந்தா தீபம்: ஒன்பது கண்களுடன் உள்ள பெரிய விளக்கில் தீபம் ஏற்றப்படுகிறது. இதற்கு நந்தாதீபம் என்று பெயர். இது ஆண்டு முழுவதும் தொடர்ந்து எரிந்து கொண்டேயிருக்கும். இந்த விளக்கில் எண்ணெய் விட்டால் கிரகதோஷம் அகலும். இரவில் 8:00 மணிக்கு நடக்கும் ரங்கா பூஜையில் பக்தர்கள் கோவில் முழுவதும் வரிசையாக தீபமேற்றி வழிபாடு செய்கின்றனர். நாகதோஷம் நீங்க வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் பாம்பு புற்றில் பால் ஊற்றி வழிபடுகின்றனர்.
108 துளை பாத்திரம்: பாண்டேஸ்வரருக்கு ஜலதாரை வழிபாடு செய்யப்படுகிறது. 108 துளைகள் இடப்பட்ட சிறிய கலசத்தில் புனிதநீரும், நெய்யும் நிரப்பப்பட்டு கருவறையில் சிவலிங்கத்தின் மீது கட்டப்படுகிறது. இதன் துளை வழியாக சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். இதற்கு 'தாராபிஷேகம்' என்றும் பெயர். திருமணத்தடை விலகவும், புத்திரப்பேறு பெறவும் இந்த வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அஸ்வத்த பூஜை: தலவிருட்சமான அஸ்வத்தம் (அரசமரம்) கோவிலுக்கு எதிரில் உள்ளது. இதில் பிரம்மா, விஷ்ணு, சிவன் வீற்றிருப்பதாக ஐதீகம். பிறரால் ஏமாற்றப்பட்டவர்கள், அநியாயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இதற்கு நியாயம் வேண்டி இதற்கு பூஜை செய்கின்றனர்.
பவுர்ணமி நாளில் சத்தியநாராயண பூஜையும், மாதப்பிறப்பான சங்கரமணா நாளில் (சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் நாள்) 11 புரோகிதர்கள் பங்கேற்கும் சதுர்தாபிஷேகம் விசேஷம்.
இருப்பிடம்: மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து 1.5 கி.மீ,
நேரம்: காலை 5:30 - மதியம் 1:00, மாலை 4:30 - இரவு 8:00 மணி
தொலைபேசி: 0824 - 244 1210

