/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
மலைக்கோவில் செல்லுங்க! கிரகதோஷம்
/
மலைக்கோவில் செல்லுங்க! கிரகதோஷம்
ADDED : மே 01, 2016 11:21 AM

ராமானுஜர் திருப்பணி செய்த தலம் மைசூரு அருகிலுள்ள திருநாராயணபுரம் திருநாராயணர் கோவில். அடிவாரத்தில் திருநாராயணரும், மலை மீது யோகநரசிம்மரும் அருள்பாலிக்கின்றனர். இங்கு வருவோருக்கு கிரகதோஷம் நீங்கும்.
தல வரலாறு: பிரம்மா விஷ்ணுவிடம் இருந்து ஒரு விஷ்ணு சிலையைப் பெற்றார். அதை தன் மகன் சனத்குமாரருக்கு கொடுத்தார். பூலோகம் வந்த சனத்குமாரர், அதை திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவரே இங்கு நாராயணப் பெருமாளாக அருள்பாலிக்கிறார். மூலவர் மேற்கு நோக்கி நிற்கிறார். உற்சவர் செல்வ நாராயணர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் இருக்கிறார். யதுகிரித் தாயார் தனி சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். உற்ஸவருக்கு 'செல்வ நாயகி' என்பது பெயர்.
பேசும் ராமானுஜர்: ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ பெரும்புதூர், திருக்கோஷ்டியூர் போலவே, இங்கும் ராமானுஜருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உபதேச முத்திரையுடன் காட்சி தரும் இவர் நாடி வரும் பக்தர்களின் குறை கேட்டு நிவர்த்தி செய்யும் பாவனையில் இருப்பதால் 'பேசும் யதிராஜர் (ராமானுஜர்) எனப்படுகிறார். ராமானுஜரின் 1000ம் ஆண்டு திருநட்சத்திரம் (அவதார நாள்) மே10ல் நடக்கும் நிலையில் இந்தக்
கோவிலுக்கு செல்வது விசேஷமானது.
மலைக்கோட்டை நரசிம்மர்: இங்குள்ள மலைக்கோட்டையில் யோக நரசிம்மர் கோவில் உள்ளது. அடிவாரத்திலுள்ள கல்யாணி தீர்த்தக்கரையில் பிந்துமாதவன், நாராயணன், லட்சுமிநரசிம்மர், மாருதி சன்னிதிகள் உள்ளன. 400 படிகள் ஏறினால் மலைக்கோட்டைக் கோவிலை அடையலாம். நரசிம்மர் சன்னிதியின் முன் நவக்கிரகங்கள் ஒன்பதும் படிக்கட்டுகளாக உள்ளன. இதில் ஏறி யோக நரசிம்மரைத் தரிசித்தால் கிரக தோஷம் நீங்கும்.
இருப்பிடம்: மைசூருவில் இருந்து 70 கி.மீ.,
திறக்கும்நேரம்: அடிவாரக் கோவில்: காலை 8.30 மதியம் 1.30 மணி, மாலை 4.00 - 6.00 மணி, இரவு 7.00 - 9.00 மணி. மலைக்கோவில்: காலை 9.30 - மதியம் 2.00 மணி, மாலை5.00 - இரவு 8.00 மணி
தொலைபேசி: 08236299 839

