/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
சொர்க்க வாசல் திறக்கும் தலக்காடு சிவன் கோவில்
/
சொர்க்க வாசல் திறக்கும் தலக்காடு சிவன் கோவில்
ADDED : மே 01, 2016 11:19 AM

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பது போல, மைசூரு அருகிலுள்ள தலக்காடு வைத்தியநாதர் (சிவன்) கோவிலில் பொங்கலன்று கைலாய வாசல் திறக்கப்படுகிறது.
தல வரலாறு: சோமதத்த முனிவர் கைலாய பதவி பெற விரும்பி சிவனை வழிபட்டார். கனவில் தோன்றிய சிவன், “சோமா! கஜாரண்யம் என்னும் காட்டிற்கு சென்று என்னை பூஜித்து வா! எண்ணம் நிறைவேறும்,” என்றார். யானைகளின் இடையூறால், முனிவரால் தவம் செய்ய முடியவில்லை. எனவே தானும் ஒரு யானையாக மாறி தவம் செய்து வந்தார். ஒருநாள் தலா, காடன் என்னும் வேடர்கள் யானை வேட்டைக்கு வந்தனர். யானை வடிவில் இருந்த முனிவருக்கு குறி வைத்தனர். ஆனால், அம்பு குறி தவறி ஒரு புற்றில் விழுந்தது. அதிலிருந்து ரத்தம் பீறிட்டது. அப்போது அசரீரியாக சிவன், “வேடர்களே! இந்த புற்றில் லிங்க வடிவில் நான் இருக்கிறேன். அம்புபட்ட என் மேனியில் ஏற்பட்ட காயம் தீர மூலிகை மருந்திடுங்கள்,” என்றார். தலாவும், காடனும் அப்படியே செய்ய, சிவனும் நேரில் தோன்றி வேடர்களுக்கும், யானையாக இருந்த முனிவருக்கும் கைலாய பதவி அளித்தார். இந்த சிவனுக்கு வைத்தியநாதர் என்றும் பெயர் ஏற்பட்டது.
சுயம்பு மூர்த்தி: வைத்தியநாதர் புற்றில் இருந்து சுயம்பு மூர்த்தியாகத் தோன்றியவர் என்பதால் அபிஷேகம் கிடையாது. ஐந்து தலை நாகாபரணம் சூடியுள்ளார். லிங்கத்தின் பாணத்தில் சிவனின் முகம் கவசமாக உள்ளது. இவரை தரிசித்து தீர்த்தம் குடித்தால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகம். 'மிருத்திகா' என்னும் புற்றுமண்ணும் பிரசாதமாக தரப்படுகிறது.
சொர்க்க வாசல்: கோபுர வாசல் தவிர 'கைலாய வாயில்' எனப்படும் சொர்க்கவாசலும் இங்கு உள்ளது. பொங்கலன்று சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ராஜகோபுரத்தின் வழியாக விதியுலா புறப்படுவர். கோவிலுக்கு திரும்பும் போது சொர்க்க வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைவர். இந்த விழாவிற்கு 'சொர்க்க பாதல் தையலு' என்று பெயர்.
சிறப்பம்சம்: அம்பிகை மனோன்மணி கைகளில் தாமரை மலர் தாங்கி நிற்கிறாள். பஞ்ச லிங்கங்கள் பிரகாரத்தில் உள்ளன. சொர்க்கவாசலுக்கு எதிரே சுதையால் ஆன நந்தி உள்ளது. கல்யாணி தீர்த்தம் இங்குள்ளது.
திறக்கும்நேரம்: காலை 6.30 - பகல் 1.30 மணி, மாலை 4.30 - இரவு 8.30 மணி
இருப்பிடம்: மைசூருவில் இருந்து 40கி.மீ.,
தொலைபேசி: 098861 24419, 08227 273 413

