sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கண்ணாடி அணிந்த கடவுள்

/

கண்ணாடி அணிந்த கடவுள்

கண்ணாடி அணிந்த கடவுள்

கண்ணாடி அணிந்த கடவுள்


ADDED : மே 25, 2017 11:21 AM

Google News

ADDED : மே 25, 2017 11:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண் நோயால் சிரமப்படுபவர்கள், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள வாகைக்குளம் கிராமத்திலுள்ள அய்யா வைகுண்டசுவாமிக்கு கண்ணாடி அணிவித்து வழிபடுகின்றனர்.

தல வரலாறு: 1809ல், கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் கிராமத்தில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதி மகனாக பிறந்தார் அய்யா வைகுண்டர். ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தையை 'முத்துக்குட்டி' என அழைத்தனர்.

விஷ்ணு பக்தனாக விளங்கிய முத்துக்குட்டி, 22 வயதில் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வருட காலமாக அவதிப்பட்டார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயார் வெயிலாள் கண்ட கனவில் நாராயணர் தோன்றி, முத்துக்குட்டியை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் விழாவுக்கு அழைத்து வரும்படியும், அவ்வாறு வந்தால் கிடைத்தற்கரிய பேறு கிடைக்கும் என்றும் சொன்னார். வெயிலாளும் உறவினர்களுடன் முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து சென்றார். செந்தூர் கடலருகே சென்றதும், முத்துக்குட்டி தொட்டிலில் இருந்து இறங்கி, கடலுக்குள் சென்று விட்டார். ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினர். ஆனால் தாய்

வெயிலாள் மட்டும் கடற்கரையில் அழுதபடியே அமர்ந்திருந்தார்.

அவர் கடலுக்குள் சென்ற மூன்றாம் நாளான மாசி 20ல், கடலிலிருந்து வெளிப்பட்டார். வெயிலாள் ஓடிச்சென்று தனது மகனை கட்டி அணைக்க முயன்றார். ஆனால் அவர் அவளை தடுத்து, ''நான் உன் மகன் இல்லை. கலியை அழிக்க நாராயணனான நான், வைகுண்டராக உலகில் அவதரித்துள்ளேன்,'' என்றார். இதன்பின் சுவாமிதோப்பு என்ற இடத்துக்கு வந்த வைகுண்டர் தவத்தில் ஆழ்ந்தார். அற்புதங்கள் செய்தார்.

வாகைக்குளத்திலுள்ள அய்யா கோவில் 300 ஆண்டுகளாக உள்ளது. மற்ற கோவில்களைப் போல் அல்லாமல், இது வித்தியாசமானது. இங்கே ஏற்கனவே பெருமாள் கோவில் இருந்தது. அங்கே அய்யா வழிபாடு தொடர்ந்தது.

சிறப்பம்சம்: கருவறையில் அய்யாவுடன், ஆதிநாராயணப் பெருமாள், சிவன், சக்தி ஆகியோர் உள்ளனர். கலியுகத்தில் நடக்கும் அநியாயங்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள, 'சிவசிவ ஹரஹர' என்ற மந்திரத்தை 'உகப்பாட்டு' (யுகப்பாட்டு) என்ற பெயரில் தினமும் ெஜபிக்கின்றனர். ஞாயிறுதோறும் உச்சிப்படிப்பு என்ற சிறப்பு பூஜை நடக்கும். அன்னதானம் செய்வது முக்கிய நேர்த்திக்கடன்.

அற்புதங்கள்: இவ்வூரைச் சேர்ந்த பெண்ணுக்கு பார்வைக்குறைபாடு ஏற்பட்டது. மருத்துவம் செய்தும் பலனில்லை. அய்யாவிடம் கோரிக்கை வைத்து தனக்கு பார்வை கிடைக்க வேண்டினார். பார்வை திரும்பியது. இதனால் மகிழ்ந்த அவர் அய்யாவுக்கு தங்கத்தில் செய்த கண்ணாடியை அணிவித்தார். இந்தக் கண்ணாடியுடன் அய்யா காட்சி தருகிறார்.

குட்டி மகாமகக்குளம்: இங்கு 256 அடி நீள, அகலம் கொண்டதும், கும்பகோணம் மகாமகக் குளம் போன்றதுமான தசாவதார குளம் அமைக்கப்படுகிறது. ௧௧வது அவதாரமாக அய்யாவை கருதுவதால் ௧௧ தீர்த்தக் கட்டங்கள் அமைக்கின்றனர்.

எப்படி செல்வது: மதுரையில் இருந்து தென்காசி 155 கி.,மீ., இங்கிருந்து அம்பாசமுத்திரம் சாலையில் 33 கி.மீ., சென்றால் வாகைக்குளம் விலக்கு வரும். விலக்கில் இருந்து 4 கி.மீ., சென்றால் கோவிலை அடையலாம்.

நேரம்: அதிகாலை 5:00- 9:00 மணி, மாலை 5:00 - 8:00 மணி; வெள்ளி, ஞாயிறு: அதிகாலை 5:00- இரவு 2:00 மணி

தொடர்புக்கு: 99446 97548, 95784 80717.






      Dinamalar
      Follow us