ADDED : அக் 20, 2023 05:20 PM

அம்பாளின் தீவிர பக்தர் ஒருவர் வாக்கு பலிதம் வேண்டி தன் நாக்கை வெட்டி காணிக்கை ஆக்கினார். சரஸ்வதியின் அருளால் அது மீண்டும் வளர பெரும்புலவராக ஆனார். இந்த திருவிளையாடல் எங்கு நடந்தது தெரியுமா வாருங்கள் மத்திய பிரதேசம் சத்னாவிற்கு...
ஒரு சமயம் தேவலோக முனிவர்கள் வேதங்களை ஓத பிரம்மாவும் சரஸ்வதியும் கேட்டுக் கொண்டிருந்தனர். அதில் வித்தியாசமான குரல் கேட்க சரஸ்வதி சிரித்து விட்டாள். அந்த கூட்டத்தில் இருந்த துர்வாச முனிவரின் குரல் தான் அது. கோபக்காரரான அவர் தன்னை ஏளனமாக நினைத்த சரஸ்வதியை ''மனிடராக பிறப்பாய்'' என சாபம் இட்டார். சாபத்திற்கு பரிகாரம் கேட்க, சிவபெருமான் தரிசனம் பெற்று மீண்டும் பிரம்மலோகம் அடைவாய் என சொன்னார். சரஸ்வதி தேவி வாழ்ந்த இடமே மைகார் நகர். தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட அம்பிகையின் உடல் பல துண்டுகளாக பாரத தேசத்தில் விழுந்தது. அம்பிகையின் இதயப்பகுதி விழுந்த இடம் என்பதால் இதனை மைகர் என்பர்.
இங்குள்ள 1063 படிகள் ஏறி மலை மீது இருக்கும் அம்பிகையை தரிசனம் செய்யலாம். சாரதாதேவி, வாக்தேவி என்ற பெயர்களுடன் அருளும் இவள் கருவறையில் வெள்ளைதாமரையில் அமர்ந்து நான்கு கரங்களுடன் அக்கமாலை, அங்குசம், வீணை, ஓலை சுவடிகளுடன் அருள் பாலிக்கிறாள். இந்த சாரதா தேவியை இரவில் தேவலோகர்கள் வந்து வழிபடுகின்றனர். அதனால் அம்பிகைக்கு பூஜித்த மலர்கள் வாடாமல் இருக்கிறது. முகத்தில் பூசிய சந்தனம் நறுமணத்தோடு காணப்படுகிறது. இவளை வழிபட கல்வி, புகழ், ஞானம், நல்வாழ்வு எல்லாம் கிடைக்கும். இங்கு வியாழன், விஜயதசமி நாட்களில் பக்தர்கள் அதிகமாக வருகிறார்கள்.
இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் பலரும் இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளனர். ஆண்டு தோறும் வரும் நான்கு நவராத்திரிகளும் இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.
இதனை மத்தியபிரதேச வைஷ்ணவி கோயில் என்றே அழைக்கின்றனர். கோயில் பிரகாரத்தில் அனுமன், காளி, துர்கா ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன. கோயிலுடன் கோசாலை மற்றும் முதியோர் இல்லமும் பராமரிக்கப்படுகிறது.
எப்படி செல்வது
* ஜபல்பூரிலிருந்து 150 கி.மீ.,
* சத்னாவிலிருந்து 40 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி, சிவராத்திரி
நேரம்: அதிகாலை 5:30 - இரவு 7:30 மணி
அருகிலுள்ள தலம்: சீட்ல மாதா கோயில் 2 கி.மீ., (நிம்மதி கிடைக்கும்)
நேரம்: காலை 7:00 - இரவு 7:30 மணி