ADDED : அக் 20, 2023 05:19 PM

பராசக்தியின் மூன்று அம்சங்களாக இருப்பவர்கள் சரஸ்வதி, பார்வதி, மகாலட்சுமி. இவர்களை ஒரே இடத்தில் தரிசிக்க விரும்பினால் செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூரில் உள்ள திரிசக்தி அம்மன் கோயிலுக்கு வாருங்கள்.
மூகாம்பிகை, ஜ்வாலாம்பிகை, கன்னியாகுமரி அம்மன் ஆகியோருக்கு கொட்டிவாக்கத்தில் கோயில் கட்ட வேண்டும் என பக்தர்கள் சிலர் நினைத்தனர். ஆனால் அது முடியவில்லை. காலம் கடந்தது. ஒருநாள் அவர்களில் ஒருவருக்கு கனவில் பட்டாடை உடுத்திய மூன்று சிறுமிகள், மூன்று நாகங்கள், சிம்மமும் தோன்றின. இந்தக் கனவு அடிக்கடி அவருக்கு வர ஆரம்பித்தது. பயந்துபோன அவர் தனது குருசாமியிடம் இதுகுறித்து கேட்டார். அதற்கு அவர், 'உனது கனவில் வருபவர்கள் வேறுயாருமல்ல. அந்த மூன்று குழந்தைகளும் சரஸ்வதி, மகாலட்சுமி, பார்வதி ஆகிய மூன்று சக்திகள். இதற்கு ஏதேனும் காரணம் இருக்கும். ஏதேனும் பிரார்த்தனை செய்ததை நிறைவேற்றாமல் இருக்கிறாயா' எனக் கேட்டார். 'பிரார்த்தனை என ஏதுமில்லை.
ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு மூன்று தேவியருக்கும் கோயில் கட்டும் திட்டம் இருந்தது' என்றார் பக்தர். 'அதை உடனே நிறைவேற்றுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்' என சொன்னார் குருசாமி. அதன்படி அவரும் ஞான சரஸ்வதி, மூகாம்பிகை, லட்சுமி ஆகியோரை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார்.
ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்தால் பிரகாரத்தில் கற்பக விநாயகரை பார்க்கலாம். மண்டபத்தைத் தாண்டியதும் மூன்று கருவறைகள் உள்ளன. முதலில் ஞான சரஸ்வதி நான்கு கரங்களுடன் அமர்ந்துள்ளாள். மேலிரு கரங்களில் ஜபமாலையும், கமண்டலமும் ஏந்தியிருக்கிறாள். இடது கீழ் கரத்தில் ஓலைச்சுவடியும், வலது கீழ் கரத்தில் சின்முத்திரை காட்டி தரிசனம் தருகிறாள். இவளை பணிந்தால் கல்வியில் சிறந்து விளங்கலாம். அடுத்து பத்மாசனத்தில் மூகாம்பிகை அமர்ந்துள்ளாள். மேல் இரு கரங்களில் சங்கு சக்கரமும், கீழ் இரு கரங்கள் சின்முத்திரையும் வரதஹஸ்தமும் உள்ளது. இவளது அருள் பார்வை மனவலிமையைத் தரும். பயத்தை போக்கும்.
அடுத்து லட்சுமி தேவி மேலிரு கரங்களில் தாமரை மொட்டுகளைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய, வரத ஹஸ்தம் காட்டி புன்னகை தவழ காட்சி அளிக்கிறாள். பாற்கடலில் பிறந்த இவளை வணங்கினால், கடலைப் போன்றே வற்றாத வளத்தை தருவாள்.
இப்படி மூன்று அன்னையரையும் தரிசிப்போர் கல்வி, வீரம், செல்வம் என சகல மங்களங்களையும் பெறுவது நிச்சயம்.
எப்படி செல்வது: சென்னையில் இருந்து 32 கி.மீ.,
விசேஷ நாள்: நவராத்திரி சரஸ்வதி பூஜை, விஜயதசமி
நேரம்: காலை 6:00 - 10:00 மணி; மாலை 5:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் 68 கி.மீ., (விருப்பம் நிறைவேற...)
நேரம்: அதிகாலை 5:00 - 12:30 மணி; மாலை 4:00 - 9:00 மணி
தொடர்புக்கு: 044 - 2722 2609