
காக்கை குருவி எங்கள் ஜாதி...
சனாதனம் என்னும் ஹிந்து சமயம் வாழும் நெறிமுறையை விளக்குகிறது. உலகத்தோடு ஒத்து வாழ்தல் என்பது இதன் ஒரு பகுதியே. இந்த காலம் போல ஒட்டு மொத்த உலகையே குத்தகைக்கு எடுக்கும் சுயநலப் போக்கை கைவிட்டு எல்லா உயிர்களுக்கும் உரிய இடத்தை அளித்து அவற்றை நேசிக்க அது வழிகாட்டுகிறது.
சீதையைப் பிரிந்த பின் ராமர் காட்டில் சந்தித்த முதல் ஜீவன் ஜடாயு என்னும் பறவை. மனைவியைப் பிரிந்த சோகம் இருந்தாலும், சாகக் கிடந்த ஜடாயுவை மடியில் கிடத்திய ராமர் ஆறுதல் சொன்னதோடு, தந்தைக்கு நண்பர் என்னும் முறையில் அதற்கு இறுதிக் கடனும் செய்தார். இந்த பறவைநேயம் மனித சமுதாயத்திற்கு ஒரு பாடம்.
மகாகவி பாரதியார் வறுமையில் வாடியதை உலகமே அறியும். அவரது மனைவி செல்லம்மா அண்டை வீட்டாரிடம் இரவலாக அரிசி கேட்டார். திரும்பத் தர முடியாது எனத் தெரிந்தும் அவர்கள் கொடுத்தனர். அதை முற்றத்தில் வைத்து விட்டு அடுப்படிக்குள் சென்றார் அந்த புண்ணியவதி. புயல் போல வீட்டுக்குள் நுழைந்த பாரதியார், சில சிட்டுக்குருவிகள் பறந்ததைக் கண்டார். முறத்தில் இருந்த அரிசியை முற்றம் எங்கும் இறைத்தார். 'காக்கை குருவி எங்கள் ஜாதி... நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' எனப் பாடினார். வெளியே வந்த செல்லம்மா திகைத்து நின்றார். மனைவியைக் கட்டிக் கொண்டு ஆடினார்; பாடினார்; ஆனந்தக் கூத்தாடினார். அரிசி போயிற்று. ஆனால் அவரது பரிவு உள்ளம் இன்று வரை பேசப்படுகிறது.
ஆனால் தற்காலத்தில் அலைபேசி டவர்களால் சிட்டுக்குருவி இனமே காணாமல் போனது. கறிக்காகக் கொண்டு செல்லும் கோழிகளை டூவீலரின் இருபுறமும் கட்டி தொங்க விட்டு, அதன் அலகுகள் ரோட்டில் தேயச் செல்வதும், கால்களைக் கட்டிய நிலையில் கோழிகளை பஸ்சின் மேற்பகுதிக்கு துாக்கி வீசுவதும் இன்று அன்றாடக் காட்சிகளாகி விட்டன.
உயிர்களை நேசிக்கும் பண்பை விளக்கும் அக்கால வரலாறுகளை மீண்டும் படிக்க வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம்.
சோழ மன்னர் சிபிச் சக்கரவர்த்தி அறநெறி தவறாதவர். மக்களைக் காப்பதுடன் மற்ற உயிர்களையும் நேசிக்கும் மனம் கொண்டவர். ஒருநாள் பருந்து ஒன்று இரைக்காக விரட்டும் நிலையில் பரிதவித்த புறா ஒன்று மன்னரின் மடியில் விழுந்தது. அதற்கு அடைக்கலம் அளித்த மன்னர், ' ஏ... பருந்தே! அடைக்கலமாக வந்த புறாவை காப்பது என் கடமை. வேறு உணவை தேடிக்கொள்' என்றார். 'எனக்கும் பசிக்கிறது. நானும் உங்களின் பிரஜை தான். எனக்கும் வழி சொல்லுங்கள்' என்றது பருந்து.
மன்னரும் வாளால் தன் தொடையை அறுத்தார். தராசின் ஒருபுறம் புறாவையும், மறுபுறம் தசையையும் வைத்தார். பிளாஸ்டிக் சர்ஜரிக்குத் தொடையில் இருந்தே சதை எடுப்பது என்ற மருத்துவ முறை அன்றே தொடங்கி விட்டது போலும். முதலில் வலது, இடது தொடைகள், உடம்பின் மற்ற பாகங்களில் இருந்து சதை எடுத்து வைத்தும் தராசு நேராகவில்லை. கடைசியில் தராசில் தானே அமர்ந்து பருந்திற்கு உணவாக்கிட முன்வந்தார். பருந்தும், புறாவும் உருமாறி இந்திரனும், அக்னி தேவனுமாக காட்சியளித்தனர். மன்னரின் அருள் உள்ளத்தை எடுத்துக் காட்ட நடத்திய நாடகம் என அவரது உடற்குறையை போக்கி மறைந்தனர். நல்லாட்சியை தொடர்ந்தார் மன்னர் என்பது வரலாறு.
மனிதநேயம் என எங்கும் இப்போது முழங்கக் கேட்கிறோம். ஆனால் சனாதனம் என்பது மனித நேயத்தையும் தாண்டியது. பூமி மட்டுமல்ல பிரபஞ்சமே நலமுடன் வாழ வேண்டும் என்பதே அதன் அடிப்படை. முன்னோர்கள் வழியில் உயிர்களை நேசிப்போம். மனிதர்களும் அதில் அடக்கம் தானே!.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870