ADDED : ஜூலை 20, 2018 03:07 PM

'பாரத தேசம் காக்க போருக்கு எப்போதும் தயாராக இருக்கிறேன்' என்று சொல்வது போல் 21 அடி உயரத்தில் தேரின் மீது நின்று அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார், திருவண்ணாமலை போத்துராஜமங்கலம் போர்மன்னலிங்கேஸ்வரர்.
மங்கலம் என்ற போத்துராஜமங்கலத்தில் வீற்றிருக்கும் இவர், ஊரைப் போலவே மங்கலத்துடனும், பெயரைப் போலவே போர் உக்கிரத்துடனும் காட்சி தருகிறார். அவரது பிரம்மாண்டத்தைப் பார்த்தவுடனே நமது இமைகள் அதன் வேலையை மறந்து விடுகின்றன. அவர் தான் இவ்வளவு பிரம்மாண்டம் என்றால் அவரது வரலாறு அதை விட பிரம்மாண்டம்!
மகாபாரதப் போர் நிகழவிருக்கிற காலம்... பாண்டவப் படைக்கு அதிகமான ஆயுதங்கள் தேவை. அதை சேகரிப்பதற்காக கிருஷ்ணன், அர்ஜூனன், பீமன் மூவரும் சிவநந்தாபுரி என்ற ஊருக்கு வருகின்றனர். அந்த ஊரை ஆட்சி செய்யும் போத்துலிங்கத்திடம் நிறைய வித்தியாசமான ஆயுதங்கள் இருப்பதாலும், அவரையும் நம்மோடு போர்ப்படையில் பயன்படுத்திக்கொள்வதே திட்டம்.
ஆனால், போத்துலிங்க மன்னரை அவ்வளவு எளிதில் யாராலும் நெருங்க முடியாது. அதிலும், பெண்ணாக இருந்தால் அதற்கு துளியும் சாத்தியமில்லை. ஏனெனில், அவர் இது வரை எந்த பெண்ணையும் ஏறெடுத்துப் பார்த்ததில்லை.
நினைத்ததை முடிப்பதற்காக கிருஷ்ண லீலை தொடங்கியது...
கிருஷ்ணன் தாதிக்கிழவியாகவும், அர்ஜூனன் அழகிய பெண்ணாகவும், பீமன் விறகுவெட்டியாகவும் வேடமிட்டுக் கிளம்பினர். பீமன் விறகுக்கட்டு ஒன்றை அரண்மனை மதில் சுவற்றில் வைக்க, அதன் ஒருபகுதி இடிந்து விழுந்தது. பீமன் சிறையில் அடைக்கப்பட்டான். அவனை விடுவிக்க வேண்டி மன்னரைச் சந்திக்க காவலாளியிடம் அனுமதி கேட்டனர் கிருஷ்ணனும், அர்ஜூனனும்.
மன்னரின் அனுமதி கிடைக்கவே, அரசவைக்குள் அழைத்து வரப்பட்டனர். அர்ஜூனனைக் கண்டதும் மன்னருக்கு சிலிர்ப்பு. முதல் முறையாக பெண்ணை பார்ப்பதாலா, இல்லை அர்ஜூனனின் வேஷத்தினாலா... ஒன்றும் புரியவில்லை. ஆனால் மன்னர் அர்ஜூனனிடம் மயங்கி விட்டார் என்பது மட்டும் தெளிவாய்த் தெரிந்தது. ஒருவாறாக சமாளித்துக் கொண்டு கேட்டார், ''ம்... சொல்லுங்கள். நீங்கள் யார்? உங்களுக்கு என்ன பிரச்னை...?''
''மன்னா நாங்கள் ஊருக்கு புதிதாய் வந்திருக்கிறோம். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். என் மகனைத்தான் காவலாளிகள் சிறையில் அடைத்துள்ளனர். அவன் மிகவும் அப்பாவி. தெரியாமல் தவறு செய்து விட்டான். அவனை மன்னித்து விடுவியுங்கள்'' என்றான் கிருஷ்ணன்.
''சரி... அவனை விடுவிக்கிறேன். அதற்கு பலனாக உன் மகளை எனக்கு மணமுடித்து தரவேண்டும்''
''அப்படியே செய்கிறேன் மன்னா. ஆனால், எனக்கும் தங்களிடம் ஒரு உதவி வேண்டும்.''
''என்ன?''
''உங்களிடமுள்ள ஆயுதங்கள் வேண்டும்''
அர்ஜூனன் மீதுள்ள மோகத்தால் யோசிக்காமல் ஒத்துக்கொண்டு ஆயுதங்களை அளித்தார்.
''திருமண ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன், நாங்கள் வெளியில் உள்ள குளத்தில் குளித்து விட்டு வருகிறோம்'' என்று சொல்லிவிட்டு மூவரும் வெளியே வந்து ஓட்டம் பிடித்தனர்.
விஷயம் மன்னருக்கு தெரிந்து, கடும் கோபம் கொண்டார். அவர்களைப் பிடித்துக் கொல்ல உத்தரவிட்டார். மன்னரின் கோபத்தை கேள்விப்பட்ட கிருஷ்ணன், புதிதாக ஒரு அழகிய பெண்ணை படைத்து ஒப்படைத்தார். அப்போதும் கோபம் குறையாத மன்னர், மலையளவு சாதம், மாவிளக்கு கேட்டார். அதையும் கொடுத்தபின்னரே கோபம் தணிந்தார். கடைசியாக உண்மையை விளக்கி பாரதப்போரிலும் அவரை பங்கேற்க வைத்தான் கிருஷ்ணன். மகாபாரதப்போர் வெற்றியில் பங்கேற்ற பெருமையுடன் வந்த போத்துலிங்க மன்னருக்கு கோயில் எழுப்பப்பட்ட இடமே போத்துராஜா மங்கலம். இந்த ஊரில் இருந்து 2 கி.மீ.,யில் உள்ள பசுமலையில் மன்னரின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.
மூலவராகவும், உற்சவராகவும் இருக்கும் சுவாமிக்கு மாசி மகம் முடிந்த மூன்றாவது நாள் தேரோட்டமும், 21வது நாள் இரவு மகா கும்ப வைபவமும் நடைபெறுகிறது. இந்த விழாவின் போது, அவருக்கு மலையளவு சாதமும், மாவிளக்கும் படைக்கப்படுகிறது. இந்தப் படையலில் குழந்தைப் பேறு இல்லாத, திருமணத்தடை உள்ள பெண்கள் சுவாமிக்கு படைத்த உணவை உண்கின்றனர்.
எப்படி செல்வது:திருவண்ணாமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 கி.மீ.,
விசேஷ நாட்கள்: மாசி மகத்திலிருந்து மூன்றாவது நாள் தேரோட்டம், 21ம் நாள் இரவில் மகாகும்பவிழா.
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மாலை 3:00 - 08:00 மணி
தொடர்புக்கு: 94448 59281
அருகிலுள்ள தலம்: 17 கி.மீ., துாரத்தில் திருவண்ணாமலை பவழகிரீஸ்வரர் கோயில்