
சுவாமியை காணும் பக்தர்கள் மகிழ்வது இயல்பு. பக்தர்களை கண்டு சுவாமி மகிழ்வதை பார்க்க... திருவாரூர் மாவட்டம் பாடகச்சேரி, 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' கோயிலுக்கு செல்லுங்கள். 'ஹேப்பி பெருமாள்' என இவரை அழைக்கின்றனர்.
தல வரலாறு
ராவணன் துாக்கி சென்ற போது, தன் ஆபரணங்களை, சீதை ஒவ்வொன்றாக கழற்றி, வழியில் போட்டுக்கொண்டே சென்றாள். மனைவியை தேடி ராமர் பாடகச்சேரி என்னும் இத்தலத்திற்கு லட்சுமணனுடன் வந்த போது, சீதையின் கொலுசு கிடக்க கண்டனர். 'பாடகம்' என்பதற்கு 'கொலுசு' என்பது பொருள்.
'இது பிராட்டியின் கொலுசு தான்' என்றார் லட்சுமணர். 'அது எப்படி அவ்வளவு உறுதியாக சொல்கிறாய்?' என ராமர் கேட்டார். 'நான் அண்ணியின் திருப்பாதம் தவிர வேறு எதையும் பார்த்ததில்லை' என்றார். உள்ளம் சிலிர்த்த ராமர், 'பாடகம் கண்டு உள்ளம் மகிழ்ந்தேன்' என்றார். அதனால் இங்கு சுவாமிக்கு 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்று பெயர். பாடகம் கிடைத்த இடம் என்பதால் 'பாடகச்சேரி' எனப்பட்டது.
திருவோண திருமஞ்சனம்
இந்தக் கோயில் விரிவுபடுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு அடித்தளம் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் பாதியில் நின்றது. 2011ல்தான் கும்பாபிஷேகம் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். திருவோண நட்சத்திரத்தன்று திருமஞ்சனம் சிறப்பாக நடக்கிறது. இதில் பங்கேற்றால் திருமணயோகம், குழந்தைபாக்கியம் உண்டாகும். இவரை வேண்டிக் கொள்ள தொலைந்த பொருள் கைவந்து சேரும்.
இத்தலத்தில் சவுந்தரநாயகி, பசுபதீஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள பாடகச்சேரி மகான் ராமலிங்க சுவாமிகளின் மடத்தில் ஆடிபூரத்தன்று குருபூஜையும், பவுர்ணமியன்று அன்னதானமும் நடக்கிறது. பல கோயில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம்நடத்திய இவர், நாடி வரும் பக்தர்களின் நோய்களை குணப்படுத்தினார். இவருடைய ஜீவசமாதி சென்னை திருவொற்றியூர் பட்டினத்தார் சமாதி அருகில் உள்ளது.
எப்படி செல்வது
* கும்பகோணம் - ஆலங்குடி வழியில் 14 கி.மீ.,
* கும்பகோணம் - மன்னார்குடி வழியில் வலங்கைமான் சென்று அங்கிருந்து 5 கி.மீ.,
விசேஷ நாட்கள்
திருவோணம், வைகுண்ட ஏகாதசி
நேரம்
காலை 6:00 - 10:00 மணி
மாலை 5:00 - 8:00 மணி.
தொடர்புக்கு: 97517 34868
அருகிலுள்ள தலம்
32 கி.மீ.,யில் வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோயில்