
திருக்கருகாவூர் முல்லைவனநாதர் - முல்லை
முல்லை காட்டில் ஒரு குடிசையில் மித்ருத முனிவர், வேதிகை தம்பதி வாழ்ந்தனர். குழந்தைப்பேறு இல்லாததால் முல்லைவனநாதர் என்னும் பெயரில் அருள்புரியும் சிவனையும், அம்பிகையையும் வேண்டிக் கொள்ள வேதிகை கர்ப்பமுற்றாள்.
ஒருநாள் ஊர்த்துவபாத முனிவர் பிச்சை கேட்டு வந்தார். கர்ப்பிணியான வேதிகை உடனே எழுந்து வரமுடியவில்லை. தாமதமாக அவள் வந்ததைக் கண்ட ஊர்த்துவபாதர் சாபமிட கரு கலைந்தது. வேதிகை தன் வேதனை தீர அம்பிகையைச் சரணடைந்தாள். கலைந்த கருவை நெய்யிட்ட குடத்துள் வைத்து குழந்தையாக்கி ஒப்படைத்தாள் அம்பிகை. கருவை காத்ததால் அம்பிகைக்கு 'கருகாத்த நாயகி' எனப் பெயர் வந்தது.
குழந்தைபேறு வேண்டி இங்கு வழிபடுவோர் சன்னதியை நெய்யால் மெழுகி, கோலமிட்டு அர்ச்சனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையின் எடைக்கு ஏற்ப 'துலாபாரமாக' தானியங்களை செலுத்துகின்றனர்.
அம்மனின் பாதத்தில் வைத்து தரப்படும் நெய்யை தம்பதியாக 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட குழந்தைப்பேறு கிடைக்கும். சுகப்பிரசவம் நடக்க விரும்புவோர் அம்மனின் பாதத்தில் வைத்த விளக்கெண்ணெய்யை வாங்கி வயிற்றில் தினமும் தடவுகின்றனர்.
கருவறையில் புற்று மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் உள்ளது. சுவாமியைச் சுற்றி முல்லைக்கொடி படர்ந்திருந்த வடுவை இப்போதும் தரிசிக்கலாம். தலவிருட்சம் முல்லை என்பதால் சுவாமிக்கு முல்லைவனநாதர் என்பது திருநாமம்.
பெண்களை பெருமைப்படுத்தும் இலக்கியத் தாவரம் முல்லை. திருமணத்தில் மணமகளின் கூந்தலில் முல்லைப்பூ சூட்டுவது சங்ககால வழக்கம். கற்பின் அடையாளம் என்பதால் 'கற்பு முல்லை' என்று சொல்வர். பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் முல்லைக்கொடியை விருப்பமுடன் வளர்ப்பர். முல்லை அரும்புகள் பார்ப்பதற்கு குழந்தையின் பற்கள் போல் இருப்பதால் 'முல்லைப் பற்கள்' எனக் குறிப்பிடுவர்.
சிறுபாணாற்றுப்படை
“குல்லையம் புறவிற் குவிமுகை யவிழ்ந்த
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்”
முல்லைப்பூவின் வெள்ளை நிறத்தை கற்பின் அடையாளமாகச் சொல்கிறது சிறுபாணாற்றுப்படை.
முல்லைக்கொடியை பற்றி குறுந்தொகையின் பல பாடல்கள் சிறப்பிக்கின்றன. முல்லை மென்கொடி, பைங்கொடி முல்லை, பாசிலை, சிறுவெண் முகை, சிறுவீ முல்லை, பசுவீமுல்லை என்னும் பெயர்கள் அதில் இடம் பெற்றுள்ளன.
சிலப்பதிகாரம்
“கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த
மாயவன்எல்லைகம் ஆனுள் வருமேல்
அவன்வாயில்
முல்லையங் தீங்குழல் கேளாமோ தோழி”
முல்லைக்கொடியை குழலாக்கி அதில் எழும் இனிய ஓசையைக் கேட்பாய் தோழி என்கிறது சிலப்பதிகாரம்.
இதன் தாவரவியல் பெயர் ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம் (Jasminium auriculatum). ஓலியேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. முல்லைச் செடியில் கஷாயம் வைத்து குடித்தால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கிருமி தொற்று கட்டுப்படும். முல்லை வேரை அரைத்து தடவினால் தோலில் ஏற்படும் கருப்புநிற படைகள் மறையும். இலைகளை உலர்த்தி பொடித்து தேனில் குழைத்து சாப்பிட வயிற்றுவலி, பேதி மறையும்.
சித்தர் போகர் பாடிய பாடல்
முல்லையுடப் பேர்தனையே மொழியக்கேளு
முகிழான யூதிகாபால புஷ்பா
புல்லையுடப் புண்ணியந் தாருனொச்சுலமாம்
புகழான சுவர்னயூ திகமுமாகுந்
தல்லையுடத் தாருமே தாகமாகுந்
தளுக்கான கேணிகா வாஞ்சிசுண்டி
தல்லையுட சநீகதவ ளர்ச்சங்கமூதி
சாற்றியதோர் முல்லையுடப் பேருமாமே.
யூதிகா, பால புஷ்பா, முல்லை, புண்ணியம், தாருநொச்சுலாம், ஸ்வர்ண பூதிகம், தாருமேதாகம், கேணி, தாவஞ்சி, கண்டி, வளர்சங்கமூதி என முல்லையின் பிற பெயர்களை பட்டியலிடுகிறார் போகர்.
சித்தர் தேரையர் பாடிய பாடல்
முல்லையெனும் ஊசிமல்லி மொய்த்தமலர்
எவர்க்கும்
ஓல்லைமன நோயை ஒழிக்குங்காண் - மெல்ல
அழலைத் தணிக்கும் அராசகத்தைப் போக்கும்
மழலைமொழி யாயறிந்து வை.
முல்லைப்பூ மனநோயைப் போக்கும். பித்தம், ருசியின்மையை தீர்க்கும். குழந்தைப்பேற்றை உண்டாக்கும்.
எப்படி செல்வது: தஞ்சாவூர் - கும்பகோணம் சாலையில் 25 கி,மீ., துாரத்தில் பாபநாசம். அங்கிருந்து 6 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி; மதியம் 3:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 97891 60819, 04374 - 273 502
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567