
உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
''எல்லா உயிரினங்களும் என்னை நண்பராக கருதட்டும். அதே போல எல்லா உயிரினங்களையும் நான் நண்பராக கருதுவேனாக'' என்கிறது யஜுர் வேதம். ஓரறிவுள்ள தாவரம் முதல் ஆறறிவு உள்ள மனிதர் வரை எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துவோம். காலை எழுந்ததும் பூமியைத் தொட்டு வணங்கி அந்நாளை தொடங்குவதே அன்றாடக் கடமை என பெரியவர்கள் சொன்னார்கள்.
ஆறு, மலைகளை நாம் வழிபடுகிறோம். இதன் அடிப்படை நன்றி செலுத்துவதே. பூமி தரும் அத்தனை வளங்களும் நமக்கு உதவுகின்றன. அவற்றிற்கு நன்றி செலுத்துவதே வழிபாடு. 'நான் மட்டும் நகர்ந்து கொண்டே போகிறேன். எல்லாம் எப்படியோ எனக்கு கிடைத்து விடுகின்றன' என்ற எண்ணம் தற்போது மேலோங்கி விட்டது. ஆனால் அதிகாலை எழுந்தது முதல் இரவு துாங்குவது வரை பயன்படும் ஒவ்வொரு பொருளும் பூமி தந்த பரிசே.
ஓட்டல் நடத்தும் ஒருவர் எப்படியாவது துறவி ஒருவரிடம் உபதேசம் பெற வேண்டும் என விரும்பினார். ஆர்வம் பிறந்து விட்டால் தேடல் தொடங்கி விடும். அப்படித்தான் ஒருநாள் தன் கடையில் டீ குடிக்கும் ஒருவரைக் கண்டார். துறவுக்கான அடையாளமின்றி அவர் சாதாரணமாக இருந்தார். ஆனால் டீயைக் குடித்த விதம் ஆச்சரியப்படுத்தியது. அதை அனுபவித்துக் குடித்தார். ஓட்டல் நடத்தும் நபர் அவரிடம் ஆசி பெற விழுந்த போது தாங்கிப் பிடித்து, 'துறவி என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள்' எனக் கேட்டார். 'நீங்கள் டீ குடித்த விதம் ஆச்சரியப்படுத்தியது' என்றார். புன்னகைத்த துறவி, 'தேயிலைச் செடி கடவுள் அளித்த பரிசு. அதைப் பறித்த, பக்குவப்படுத்திய தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது நம் கடமை. ஒவ்வொரு துளி டீயையும் நன்றியுடன் குடிப்பதால் நம் வாழ்வும், டீயும் இனிமையாகும்'' என்றார். ஞானம் என்பது என்ன என்பதை துறவி உணர்த்தினார். இந்திய பாரம்பரியமும், பண்பாடும் இதையே ஆயுதபூஜை, மாட்டுப்பொங்கல் வழிபாடாக கொண்டாடுகிறது. நமக்கு உதவும் ஒவ்வொரு கருவிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்கிறது ஆயுதபூஜை.
இது ஒருபுறம் என்றால் விவசாயம் செய்பவர்கள் வயலை உழுவதில் தொடங்கி நாற்று நட்டு நீர் பாய்ச்சி கதிரறுக்கும் வரை அந்த சிந்தனையிலேயே இருப்பர். அதுவே அவர்களுக்கு தியானம். வயலின் ஓரக்காலுக்கு (கடை மடைபகுதி) தண்ணீர் வந்து விட்டதா என அக்கறையுடன் கவனிப்பர். அங்கு நீர் பாயாவிட்டால் பயிர் வாடும் முன் அவர்களின் மனம் வாடி விடும். இப்படிப்பட்டவர் வரப்பில் நடக்கும் போது பயிர்கள் அன்போடு அவர்களை வரவேற்கும். படிப்பதற்கு வேடிக்கையாக தோன்றலாம்.
ஆனால் விவசாயம் செய்பவர்களை கேட்டால் உண்மை புரியும். மகாகவி பாரதியாரின், 'உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்' என்ற வரியைப் அவர்கள் யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை.
தாவரவியல் பேராசிரியர் ஒருவர் ஆய்வுக்கூடத்தில் தாவரங்களின் உயிர்த்துடிப்பு பற்றி அறியும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஏதோ ஒரு விஷயமாக அவரை சந்திக்க வந்தார் ஒரு நபர். அவர் ஆய்வுக்கூடத்தில் நுழைந்ததும் தாவரங்கள் படபடக்கும் காட்சி மானிட்டரில் புலப்பட்டது.
உடனே பேராசிரியர், ' நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்' எனக் கேட்டார். அவர் 'அடுப்புக்கரி வியாபாரம் செய்கிறேன்' என்றார். தாவர இனத்தை அழிக்கும் ஒருவர் நெருங்கும் போதே தாவரங்கள் துடிக்கத் தொடங்குவது புரிந்தது. ஆம்... தாவரத்திற்கு உணர்வு உண்டு என அறிவியலுக்கு முன்பே ஆன்மிகம் சொல்லி விட்டது.
வீட்டில் துளசி வழிபாடும், கோயில்களில் தலவிருட்ச வழிபாடும் அன்பின் வெளிப்பாடு தான். 'தாவரங்களின் அருகில் நின்று வாழ்த்தினால் அவை செழித்து வளரும்' என்கிறார் தத்துவஞானி ஜெ.கிருஷ்ணமூர்த்தி. இதுவே ஹிந்து சமயம் காட்டும் அன்பின் தத்துவம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870