
திருக்கோவிலுார் வீரட்டேஸ்வரர் - சரக்கொன்றை
ஒருமுறை பார்வதி விளையாட்டாக சிவனின் கண்களை கைகளால் மூடினாள். அவரது கண்களான சூரியனும், சந்திரனும் மறைந்து உலகமே அஞ்ஞானம் என்னும் இருள் சூழ்ந்தது. அந்த இருளில் தோன்றிய அசுரனான அந்தகாசுரன் சிவனுடன் போர் புரிய வந்தான். அவனை கதாயுதத்தால் சிவன் தாக்க, அசுரன் தலையிலிருந்து ரத்தம் பீறிட்டது. அதில் இருந்து அசுரர் கூட்டம் உருவாக போர் நீண்டு கொண்டே போனது. இதை கண்ட பார்வதி உக்கிர வடிவில் காளியாக தோன்றினாள். அசுரனின் தலையிலிருந்து வரும் ரத்தத்தை கபாலத்தில் பிடித்து கொன்றை வனத்தில் குறுக்கும் நெடுக்குமாக எட்டு கோடுகளாக விழச் செய்தாள். குறுக்கு நெடுக்காக விழுந்த எட்டு கோடுகளும் 64 சதுரங்களாக மாறின. அதில் இருந்து 64 பைரவர்கள் புறப்பட்டனர். அவர்களின் மூலம் அசுரனை வதம் செய்தார் சிவன். இறுதியில் இங்குள்ள கொன்றை மரத்தின் அடியில் வீரட்டேஸ்வரர் என்னும் பெயரில் சுயம்பு மூர்த்தியாக அமர்ந்தார்.
சுந்தரர், சேரமான் நாயன்மார் இருவரும் ஆகாய மார்க்கமாக கயிலை மலையை நோக்கி சென்றனர். வழியில் இத்தலத்தில் அவ்வையார் வழிபாடு செய்யக் கண்டனர். தங்களுடன் கயிலைமலைக்கு வருமாறு அழைத்தனர். அவ்வையாரும் அவசரமாக பூஜையில் ஈடுபட்டார். அப்போது விநாயகர், ' பாட்டி... வழிபாட்டில் அவசரம் கூடாது' என அறிவுறுத்தினார். அதை ஏற்று, 'சீதக்களப' எனத் தொடங்கும் விநாயகர் அகவல் பாடலைப் பொறுமையாக பாடினார் அவ்வையார். மகிழ்ந்த விநாயகர் விஸ்வரூப வடிவில் காட்சியளித்தார். துதிக்கையால் அவ்வையாரை துாக்கி ஆகாய மார்க்கமாக புறப்பட்டார். நாயன்மார் இருவரும் கயிலாய மலையை அடையும் முன்பே அவ்வையாரை அங்கு சேர்த்தார். இக்கோயிலில் விஸ்வரூப விநாயகரை தரிசிக்கலாம்.
சிவபெருமானே பைரவர் வடிவில் இங்கிருப்பதால் தேய்பிறை அஷ்டமியன்று வணங்கினால் கிரகதோஷம் விலகும். மஞ்சள், கதம்பப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய திருமண யோகம் உண்டாகும். குழந்தைவரம் வேண்டுவோர் அம்மனுக்கு புடவை சாத்துகின்றனர்.
அந்தகாசுரனை வதம் செய்தது, அவ்வையார், கபிலர் பூஜித்தது, ராஜராஜ சோழன் பிறந்தது என இத்தலத்தின் பெருமைகள் பல. இங்கு தலவிருட்சம் சரக்கொன்றை மரம். கேஷியா பிஸ்டுலா (Cassia fistula) என்னும் தாவரவியல் பெயரும், பேபேசியே குடும்பத்தை சேர்ந்ததுமான இந்த மரங்கள் மஞ்சள் நிற பூக்களையும் நீண்ட காய்களையும் கொண்டவை.
சித்தர் போகர் பாடிய பாடல்
கொண்ணையிட பேர்தனையே கூறக்கேளு
கொடிதான கன்னிகை ராசவிருட்சம்
அண்ணைசிரு தமாலிகை ஆரோக்யசிம்பி
ஆர்க்குவதந் தீர்க்கவே பலமுமாகும்
தண்ணைசது ரங்குளம் தீர்க்கமூலி
சம்புவக்கு பொற்காமங் கடுக்கையாகும்
பண்ணநட முடியீசன் கொடிமுடிசமாகும்
பாடியதோர் பேரெல்லாங் கொண்ணையாமே
கன்னிகை, ராச விருட்சம், சிறு தமாலிகை, ஆரோக்கிய சிந்தி, பலம், தண்ணை, சதுரங்க மூலம், தீர்க்க மூலி, காமங்கடுக்கை, முடியீசன், கொடிமுடிசம் என்னும் பெயர்களால் சரக்கொன்றை அழைக்கப்படுவதாக போகர் குறிப்பிடுகிறார்.
சித்தர் அகத்தியர் பாடிய பாடல்
மலக்கிருமி போகும் மதிநீர்க் குடலாந்
தலத்துநோ யுங்குலைந்து சாயும்-நிலத்திற்குள்
என்றைக்கும் வாடாத வின்ப மலர்க்கொம்பே
கொன்றைப் பசுமலரைக் கொள்.
கொன்றை மரத்தின் கொழுந்து இலைகளில் சாறு பிழிந்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட, வயிற்றிலுள்ள பூச்சிகள் மலத்துடன் வெளியேறும். கொன்றை பூவை அரைத்து பாலில் கலக்கி சாப்பிட ரத்த சோகை, மஞ்சள் காமாலை கட்டுப்படும். எலுமிச்சை சாறு விட்டு கொன்றை பூவை அரைத்து தேமல் மீது தடவ பிரச்னை தீரும். இந்த பூவை நிழலில் உலர்த்தி, தேனில் கலந்து ஊற வைத்து அல்லது இலையை துவையல் செய்து இரவு படுக்கும் போது சாப்பிட்டால் மலச்சிக்கல் தீரும். இலையை அரைத்து படர்தாமரைக்கு பூச தொடை அரிப்பு குறையும்.
வன்னனில மேகமலக் கட்டு குடல்வலி
துன்மலி னம்வெப்புத் தோன்றுங்காண் - இன்பம்
தருதமா லப்பரிம ளத்தனத்தாய் இந்தக்
கிருதமா லப்புளியைக் கேள்.
குழந்தை பெற்ற பெண்கள், உடல் மெலிந்தவர்கள் சரக்கொன்றையில் இருந்து எடுக்கப்படும் புளியை உணவில் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும்.
குட்டங் கிருமி கொடுஞ்சூலை வாதமையம்
துட்ட மலமருசி தூரப்போம் - தட்டிச்
சுரக்கின்ற பேதியுண்டாம் துய்க்கத் துவர்க்கும்
சரக்கொன்றைக் காரணங்கே சாற்று.
வயிற்றுபோக்கு, வயிறு வீக்கத்திற்கு சரக்கொன்றை புளி மருந்தாக பயன்படுகிறது. 5 கிராம் புளியை 60 முதல் 70 மி.லி., நீரில் கரைத்து குடிக்க கழிச்சல் உண்டாகி வயிறு வீக்கம் மறையும்.
தேரையர் பாடிய பாடல்
பாண்டரங்கர் பூணாய்ப் பறக்கடித்து மேகத்தை
யாண்டாங்கக் கைக்குள்வச மாக்குமே -காண்டற்
குதவிசில செய்துடலை யோம்புமிது நீபார்
இதழியெனுங் கொன்றைபுவி யில்.
சரக்கொன்றை மேக நோய்களை குணப்படுத்தும். உடம்பை பாதுகாக்கும்.
மலசலத்தைத்தான் கழற்றும் வரும்கிருமி
மேகம் போம்
குலம் கெடும் பெரும் நோய்சூலை போம் -
குடல்நோயும்
அரோசிய மாமதில் துவர்ப்பும்
அதிக முண்டென்றே - அறி
சரக்கொன்றையிலிருந்து எடுக்கப்படும் உப்பை கொடுக்க சிறுநீர் நன்கு பிரியும். மலம் நன்கு கழியும்.
சித்தர் தன்வந்திரி பாடிய பாடல்
சரக்கொன்றை வளத்தைச் சாற்றின் சார்குணம்
குருவே திக்தம்
உரைக்குநற் கடுவே யுஷ்ண முறுகபங் கிருமி
சூலை
சுரக்குநல் லுதர ரோகஞ் சூழ்பிர மேகம் க்ருச்ரம்
பெருக்குகுன் மந்த்ரி தோஷம் பேர்த்திடு
மென்பர் மேலோர்.
கசப்பு சுவையுடைய சரக்கொன்றை
தொழு நோய், அரிப்பு, மூலம், சுவையின்மை போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
குஷ்டந் தினவு கொடுமூலந் தோஷமுடன்
துஷ்ட சுரமருசி தூரப்போந் - தட்டிச்
சுரக்கின்ற பேதியுண்டாஞ் சற்றே துவர்க்குஞ்
சரக்கொன்றைக் காரணங்கே சாற்று.
சரக்கொன்றை தொழு நோய், அரிப்பு, மூலம், சுவையின்மையை போக்கும். ஆனால் அதிக அளவில் சாப்பிட பேதி உண்டாகும். சரக்கொன்றை மரப்பட்டையை நல்லெண்ணெய் விட்டு அரைத்து பூச அழுகும் நிலையில் உள்ள புண்கள் ஆறும்.
எப்படி செல்வது: திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 11:00 மணி;மாலை 5:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 98426 08874
-தொடரும்
ஜெ.ஜெயவெங்கடேஷ்
98421 67567