
தண்ணீர்... தண்ணீர்...
புல், பூண்டு முதலான உயிர்கள், பறவைகள், விலங்குகளோடு மனிதன் சேர்ந்து வாழ்ந்தால் மட்டும் போதாது. பஞ்சபூதங்களான நீர், நெருப்பு, மண், காற்று, ஆகாயத்தையும் பாதுகாக்க வேண்டும். அவற்றை எப்படி போற்றுவது, வாழ்த்துவது, பராமரிப்பது என வழிகாட்டுகிறது சனாதன தர்மம்.
நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். மனிதன் துாய்மைப்படுத்திக் கொள்ள அடிப்படையானது நீர். தினமும் குளித்து கடவுளை வணங்கிய பிறகே அன்றாடக் கடமைகளைத் தொடங்குவது நம் வழக்கம். குளித்தல் என்பது வெறும் உடல் அழுக்கு போக்குவது அல்ல; இரவில் துாங்கி விழித்த பின்னர், உடலின் வெப்பம் வெளியேறி உடல்நிலையை சீர்படுத்தும் செயலே குளித்தல் என்கிறது அறிவியல்.
கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சிந்து, காவிரி, வைகை, தாமிரபரணி ஆகிய ஆறுகளைத் தாயாகவும், தெய்வமாகவும் கருதி வழிபடுகிறோம். கங்கை, யமுனை, சரஸ்வதி கூடும் பிரயாகையில் பால், பூக்களால் வழிபாடு செய்வது ஹிந்துக்களின் கடமை. மறைந்த முன்னோர்களின் எலும்பும், சாம்பலும் இங்கு கரைக்கப்படும் போது அவர்களின் ஆன்மா முக்தி அடைகின்றன என்பது நம் அசைக்க முடியாத நம்பிக்கை.
மக்கள் குடியேறுவதற்கு நதிக்கரையைத் தேர்ந்தெடுத்ததன் நோக்கமே வழிபாட்டிற்கு முன் உடலை துாய்மைப்படுத்த வேண்டும் என்பது தான். இதனடிப்படையில் உருவானதே நதிக்கரை நாகரிகம். ஏனோ தானோ என இஷ்டம் போல திரிவதல்ல நாகரிகம். செயல்களை நாம் ஒழுங்கு, நேர்த்தியுடன் செய்வதும், வாழ்வதும் தான். கடவுள் மறுப்பாளர்களின் முதல் அடிப்படையே இந்த கலாசாரத்தை சீரழிப்பது தான்.
உலக நன்மைக்காக தண்ணீரே கடவுளால் முதலில் படைக்கப்பட்டது. 'குளிப்பதற்கும், குடிப்பதற்கும், பயிர் செய்து உயிர் வாழ்வதற்கும் அடிப்படையான நீர் என்னும் தேவதையை வணங்குகிறேன்' என்கிறது வேதம். ' அயோத்தியில் ஓடும் சரயுநதி தாயின் முலைப்பால் போன்றது' என்கிறார் கம்பர். தாயின் முலைப்பால் நம்மைக் காக்கும். தண்ணீரே நமக்குத் தாய்.
சுவேதாஸ்வர உபநிடதம் ஒரு அரிய செய்தியை முனிவரான உத்தாலகர் தன் மகன் சுவேத கேதுவிடம்,'' பதினைந்து நாட்களுக்கு உணவாக நீரை மட்டும் குடி'' எனக் கூறினார். அவனும் நீரை மட்டும் குடித்தான். 16ம் நாள் காலையில் அவனிடம், 'நீ கற்ற பாடங்களை திரும்பச் சொல்லு' என்றார். அவனால் கூற முடியவில்லை. 'சரி... சிறிது உணவு சாப்பிட்டு வா'' என்றார். சாப்பிட்டு வந்த பின்னர் படித்த மந்திரங்கள் நினைவுக்கு வந்தன. சரிவரக் கூறினான். முனிவரான தந்தை, ''நீர் என்பது உயிர். உணவு என்பது மனம். நீர் உயிர்ச்சத்தாகவும், உணவு மனமாகவும் மாறுவதை கண்டாய் அல்லவா'' எனத் தெரிவித்தார். இது உலக மக்களுக்கான உபதேசம்.
வழிபாட்டுப் பொருளாக தண்ணீர் இருந்த வரை ஆறுகள், ஏரிகள், குளங்கள் பாதுகாக்கப்பட்டு வந்தன. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றும் வழிபாட்டில் முக்கியமானவை. ஒவ்வொரு கோயிலில் இருக்கும் புனித தீர்த்தங்கள் எல்லாம் உயர்ந்தவர்களால் உருவாக்கப்பட்டவை. அதிலுள்ள நீருக்கு அற்புத சக்தி இருக்கிறது. இன்று அத்தனை தீர்த்தங்களும் புறக்கணிக்கப்பட்டன என்பது கசப்பான உண்மை.
குடத்தில் நீர் நிரப்பி அதன் மீது மாவிலை, தேங்காய் வைத்து சந்தனம், குங்குமம் இட்டு பூக்களால் பூஜித்து மந்திரங்கள் உச்சரிப்பது வழிபாட்டுச் சடங்குகளில் ஒன்று. இதன் மூலம் நீரின் மூலக்கூறுகள் ஒவ்வொன்றும் ஒழுங்கும், அழகும் மிக்கதாக மாறி நமக்கு நன்மை தருகின்றன என்கிறார் ஜப்பானைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் மாசுரே எமட்டோ. இதை நேர்மறை, எதிர்மறையாகவும் அவர் நிரூபித்தும் காட்டினார்.
''நீர் என்ற அதிதேவதை இந்த நிலத்தை துாயதாக்கட்டும். இந்த மண் என்னைத் துாயதாக்கட்டும். வேதங்களின் தலைவனாக கடவுள்(அறிவின் ஒளி) எனக்குத் துாய்மை அருளட்டும். எனது எல்லாப் பாவங்களையும் நீரில் வாழும் தெய்வம் போக்கட்டும்'' என பிரார்த்தனை மந்திரம் மூலம் வேண்டுகோள் விடுகிறது வேதம்.
தண்ணீரைப் போற்றுவோம். நீர்நிலைகளைப் பாதுகாப்போம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870