ADDED : ஜூன் 12, 2020 01:19 PM

ஆரோக்கிய வாழ்வு தரும் தன்வந்திரி பகவானுக்கு கோயம்புத்துார் ராமநாதபுரத்தில் கோயில் உள்ளது. இங்கு சுவாமிக்கு படைக்கும் பால்பாயாசத்தை சாப்பிட்டால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது பாற்கடலில் இருந்து தோன்றியவர் தன்வந்திரி. கையில் அமிர்த கலசத்துடன் வந்த அவர், மகாவிஷ்ணுவை வணங்கினார். தேவர்கள் அவரை 'அப்சா' என அழைத்தனர். தேவர்களுக்கு இணையாக தனக்கும் அமிர்தத்தில் பங்கு அளிக்கும்படி கேட்டார் அப்சா. ''நீ தேவர்கள் அவதரித்த வெகு காலத்திற்குப் பிறகே பிறந்தாய். உன்னை அவர்களுக்கு இணையாக கருத முடியாது. நீ என்னுடைய அவதாரமாக பூமியில் பிறக்கும் போது தேவர்களில் ஒருவர் என்னும் அந்தஸ்தை அடைவாய். ஆயுர்வேத சிகிச்சையில் சிறந்து விளங்குவாய். உலகம் ஆயுர்வேத அதிபதியாக போற்றுவர்'' என்று சொல்லி மறைந்தார் மகாவிஷ்ணு.
அதன்படி காசி மன்னரின் மகனாகப் பிறந்தார். ஆயுர்வேத மருத்துவக் கலையில் கைதேர்ந்து விளங்கினார். இவருக்கு கோவை ராமநாதபுரம் பகுதியில் தன்வந்திரி கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
மலர்ந்த முகத்துடன் கைகளில் பின்னிரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும் முன்னிரு கைகளில் அட்டைப்பூச்சி, அமிர்த கலசத்தை தாங்கியும் நின்ற கோலத்தில் மேற்குத் திசை நோக்கி காட்சியளிக்கிறார்.
கோயில் வளாகத்தில் நுழைந்ததும் மலைப்பிரதேசம் போன்ற உணர்வு ஏற்படுகிறது. பசுமையான மரங்கள் சூரிய ஒளி கூட ஊடுருவ முடியாத அளவு அடர்த்தியாக உள்ளன. நெய் தீபங்களின் வாசனை, ஹோம குண்டங்களிலிருந்து வரும் நறுமண புகை பரவசப்படுத்துகிறது. உலக அமைதிக்காக சுடர்விடும் ஆளுயர விளக்கு வளாகத்தில் பிரகாசிக்கிறது. விநாயகர், துர்கை, உமா மகேஸ்வரர், சுப்ரமணியர், அனுமன், ஐயப்பன், பகவதியம்மன், நவக்கிரகம் ஆகியோருக்கும் சன்னதிகள் இங்குள்ளன.
கேரள பாரம்பரிய முறையில் கோயிலில் பூஜைகள் நடக்கின்றன. யோக முத்திரைகளுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து நம்பூதிரிகள் பூஜை செய்கின்றனர். உடல்நலத்துடன் வாழ ஆயுள் ஹோமம் தினமும் நடக்கிறது. பக்தர்கள் தங்களின் பிறந்த நட்சத்திரத்தன்று இதில் பங்கேற்று பலனடைகின்றனர். யாகம் நடத்த விரும்புபவர்கள் முன்பதிவு செய்வது அவசியம்.
யாகத்தில் தன்வந்திரி பகவானுக்கு பிடித்த பால்பாயசம் படைக்கப்படுகிறது.
எப்படி செல்வது: கோவை - திருச்சி சாலையில் 6 கி.மீ.,
விசேஷ நாட்கள்: ஆனி அஸ்தம் பிரதிஷ்டை விழா, தன்வந்திரி ஜெயந்தி, பவுர்ணமியன்று சத்ய நாராயண பூஜை
நேரம்: காலை 5:00 - 12:00 மணி; மாலை 5:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 0422 - 4322 888
அருகிலுள்ள தலம்: கோவை கோனியம்மன் கோவில்