/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
/
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்!
ADDED : ஏப் 08, 2011 09:36 AM

சிவானந்தரின் தமிழ் புத்தாண்டு முழக்கம்
* நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் முன்னேறுவதற்காகவே பிறந்திருக்கிறீர்கள். நம் வாழ்நாள் ஒவ்வொன்றும் மகத்தானது. அதை நன்கு பயன்படுத்திக் கொள்வதில் தான் வெற்றி அடங்கி இருக்கிறது. இந்த வெற்றி நமது செயல்களின் சரித்திரத்தை என்றென்றும் பறைசாற்றும். செய்யும் பணி எதுவாக இருந்தாலும் அதில் மனதை ஒருமுகப்படுத்தி செயல்படுங்கள்.
* சிறு குழந்தையைப் போல அடிப்படைத்தேவைக்குக் கூட அடுத்தவரை நம்பி இருப்பதால் பயனில்லை. உற்சாகத்தோடு ஆர்வமாகப் பணியாற்றுங்கள். நம் தேவைகளை எல்லாம் நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அனைத்தும் நம்மிடம் முழுமையாகவே இருக்கிறது.
* செய்யும் கடமையை மனப்பூர்வமாக அணுகினால் உங்கள் காலிலேயே நிற்கும் வலிமையும், செயல்திறமையும் பெறுவீர்கள். சிறுபணி தானே என்று எதையும் புறக்கணித்துவிடாதீர்கள். குளிப்பது, துணி துவைப்பது, உணவு சமைப்பது போன்ற அன்றாடப்பணிகளையும் அக்கறையோடு செய்யுங்கள்.
* பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓட நினைக்காதீர்கள். மகிழ்ச்சியுடன் பொறுப்புகளை ஏற்று வெற்றி நடைபோடுங்கள். நீங்கள் உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முயலும்போது, உங்களுக்கான நல்ல சூழ்நிலையும் ஒத்தவளர்ச்சி பெற்று துணைநிற்கும்.
* தியானம் அன்றாடப்பணிகளில் மிகவும் அடிப்படையானது. இதனால் நம் மனம் அமைதியில் நிலைத்திருக்கும். கடமைகளைக் குறைந்தநேரத்தில் திறம்படச் செய்வதற்கான ஆற்றலைத் தரும். சோம்பலைப் போக்கி புத்துணர்ச்சி உண்டாக்கும்.
* உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் சுறுசுறுப்பாய் ஈடுபடுங்கள். அப்போது மன அமைதி காண்பீர்கள். ஆனால், நமக்குப் பிடித்தமான வேலை நமக்கும் பிறருக்கும் நன்மை தருவதாய் இருப்பது மிகவும் அவசியம்.
* அன்புணர்வு, தன்னம்பிக்கை, பக்தி, தன்னலமின்மை, தர்மசிந்தனை இவை போன்ற நல்ல எண்ணங்கள் எல்லாம் ஒருநாளில் ஒருமனிதனிடம் உண்டாவதில்லை. நம் இயற்கையான சுபாவமாகத்தான் இருக்கவேண்டும் என்று சொல்வதாலும் பயனில்லை. விடாமுயற்சி உங்களிடம் இருக்குமானால் நிச்சயம் ஒருநாள் நல்ல குணங்கள் அனைத்தும் உங்களின் அங்கமாகிவிடும்.
* மனம் எப்போதும் ஒருநிலையில் இருப்பதில்லை. அவ்வப்போது தளர்ச்சி அடையக்கூடும். அப்போது நல்ல உயர்ந்த மனப்பான்மையை உருவாக்கும் நல்ல நூல்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். இதனால் மனம் சீர்பட்டு புத்துணர்ச்சியும், மகிழ்ச்சியும் மனதில் மீண்டும் தழைக்கும்.
* மேலான ஒரு லட்சியத்தை உங்கள் மனக்கண் முன் நிறுத்துங்கள். அதன்பின் அதைநோக்கிய பயணத்தை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு நீங்களே உண்மையானவராக மாறிவிடுவீர்கள். உங்கள் சிந்தனை, சொல், செயல் மூன்றும் உயர்ந்த லட்சியத்தை வட்டமிட்டுக் கொண்டே இருக்கட்டும். இம்மூன்றும் ஒன்றுபடும்போது மனிதனால் சாதிக்கமுடியாதது எதுவுமில்லை என்பதை உணர்வீர்கள்.
***