
மகாவிஷ்ணு, பிரகலாதனைக் காப்பதற்காக நரசிம்ம அவதாரம் எடுத்து வந்தார். அவர் லட்சுமியை மடியில் தாங்கிய நிலையில் லட்சுமிநரசிம்மராகவும், தியானத்தில் யோகநரசிம்மராகவும் பல கோயில்களில் காட்சி அளிக்கிறார். மைசூரு விஜய்நகரில், நரசிம்மர் யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: 'விஷ்ணு' என்றால் 'சர்வ வியாபி' அல்லது 'எங்கும் நிறைந்தவர். விஷ்ணுவை தியானித்து 'ஓம் நமோ நாராயணாய' மந்திரத்தை ஜெபித்து வந்தான் இரண்யனின் மகனான பிரகலாதன். அசுர குலத்தில் பிறந்த அவனை, தன் குலகுரு சுக்ராச்சாரியாரிடம் பாடம் கற்க அனுப்பினான் இரண்யன். குருகுலத்தில் படித்த பிள்ளைகள் அனைவரும் பிரகலாதனால் விஷ்ணு பக்தர்களாக மாறினர்.
அசுரனான தனக்கு இப்படி ஒரு குழந்தையா என்று பிரகலாதனின் மீது இரண்யனுக்கு கோபம் வந்தது. அவனைக் கொல்லத் துணிந்தான். விஷம் கொடுத்தான். மலையில் இருந்து உருட்டினான். யானையைக் கொண்டு மிதிக்கச் செய்தான். எதுவும் பலனளிக்கவில்லை. கடைசியாக, பிரகலாதனிடம், ''எங்கே உன் ஹரி?'' என்று ஆவேசமாகக் கத்தினான்.
''அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்,'' என்று பதிலளித்தான் பிரகலாதன்.
பிரகலாதனின் வாக்கை காப்பதற்காக விஷ்ணு, தூணைப் பிளந்து கொண்டு சிங்கமுகத்துடன் காட்சி அளித்தார். 'ஹரி' என்றால் 'சிங்கம்' என்றும் பொருளுண்டு. அவர் இரண்யனைச் சம்ஹாரம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.
சிறப்பம்சம்: மைசூருவிஜய நகரில் மூலவர் நரசிம்மர், குறுக்காக குத்துக் காலிட்டு,அதில் கைகளைத் தொங்கவிட்டபடி யோகநிலையில் காட்சி தருகிறார். மேல் இரண்டு கைகள் சங்கு சக்கரம் தாங்கியுள்ளன. கால்களில் யோகப்பட்டை குறுக்காக செல்கிறது. லட்சுமித்தாயார் மார்பில் வீற்றிருக்கிறாள். இச்சிலை 'சாளக்ராமம்' என்னும் கல்லினால் ஆனது. கால்கட்டை விரலில் அதர்வன வேதம் அடங்கி இருப்பதால் இவரைத் தரிசிப்பவருக்கு எவ்வித தீயசக்தியும் அணுகாது என்பது ஐதீகம். தசாவதார சிற்பங்கள் கருவறை நுழைவாயிலி லும், அஷ்டலட்சுமி சிற்பங்கள் கதவிலும் இடம்பெற்றுள்ளன.
அமாவாசை அபிஷேகம்: 1998, மே25ல் யோக நரசிம்மர் சிலை இக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மே 25ல் லட்சார்ச்சனையும், 26ல் சகஸ்ர கலசாபிஷேகமும், 27ல் சுதர்சன ஹோமமும் நடக்கிறது. அமாவாசை நாட்களில் இரவு 12மணிவரை விசேஷ பூஜை உண்டு. 300லிட்டர் பால், 300லிட்டர் தயிர் யோகநரசிம்மருக்கு அபிஷேகம் செய்யப்படும். அமாவாசை வழிபாட்டில் எதிரிகளின் தொல்லை நீங்கவும், வழக்கில் வெற்றி உண்டாகவும் பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
ஒன்பது அலங்காரம்: புரட்டாசி நவராத்திரியின் ஒன்பது நாளும் ஒன்பது விதமாக யோகநரசிம்மர் அலங்கரிக்கப்படுகிறார். வெண்ணெய், செந்தூரம், துளசி, எலுமிச்சை, நவபுஷ்பம் அலங்காரங்கள் பார்ப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். விஜயதசமியன்று யோகநரசிம்மரைத் தரிசித்தால் கல்வி கலைகளில் முன்னேற்றம் உண்டாகும். உற்சவர் சீனிவாசப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கல்யாணக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
வித்தியாசமான சுதர்சனர்: சுதர்சனர் என்னும் சக்கரத்தாழ்வார் சந்நிதி இங்கு விசேஷமானது. இவர் பதினாறு கைகளோடு காட்சி தருவது வழக்கம். ஆனால், இங்கு அஷ்டபுஜ சுதர்சனராக எட்டுக்கைகளுடன் காட்சி தருகிறார். சக்கரத்தாழ்வாருக்குப் பின்புறம் நரசிம்மர் யோகநிலையில் வீற்றிருப்பார். இங்கு நரசிம்மரும் இடம்பெறவில்லை. இவருக்கு, சனிக்கிழமையில் துளசி அணிவித்து நெய்தீபம் ஏற்றிவழிபட சனிதோஷம் விலகி நன்மை உண்டாகும்.
இருப்பிடம்: மைசூரு- மங்களூரு மெயின்ரோட்டில் 4கி.மீ., தொலைவில் விஜய்நகர் உள்ளது. பஸ்,ஆட்டோ உண்டு.
திறக்கும் நேரம்: காலை6- 1.30 மணி, மாலை5.30- இரவு 10மணி.
போன்:081-256 3646.

