ராவண வதம் ¬முடிந்து, ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன தலம் அயோத்தி. உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள இந்தக் கோயிலில் ராமனின் குடும்பத்தினரை தரிசிக்கலாம். அதே போல தமிழகத்தில் அமைக்க வேண்டுமென்ற ஆவலின் விளைவே, சேலம் அயோத்தியாபட்டணம் ராமர் கோயில். ஒரே வித்தியாசம். சேலத்தில் தமிழக சிற்பக்கலை அமைப்பில் ராஜகோபுரத்துடன் இந்தக் கோயில் அமைந்துள்ளது. ராமநவமியன்று சென்று வர சிறந்த கோயில்.
தல வரலாறு: சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர், இலங்கையில் இருந்து தனுஷ்கோடி திரும்பினார். அயோத்திக்கு செல்ல சைல மலை குன்றைக் கடக்க வேண்டியிருந்தது. ராமன், சீதை, லட்சுமணன், அனுமான், சுக்ரீவன், விபீஷணன் ஆகியோர் இந்த மலை குன்று பகுதியை வந்தடைந்த போது இருட்ட தொடங்கியது.
மறுநாள் செல்லலாம் என்று அங்கிருந்த கோயில் ஒன்றில் தங்கினர். இதன் அடிப்படையில் இந்தக் கோயில் பிரபலமான ராமர் கோயிலாகி விட்டது. ராம குடும்பத்தினரை அயோத்தி செல்லாமல் இங்கேயே தரிசிக்கலாம் என்ற நிலை ஏற்பட்டது. கருவறையில் ராம குடும்பத்தினர், படைத்தலைவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இதை தென்னக அயோத்தியாக கருதி, 'அயோத்தியாபட்டணம்' என்ற பெயர் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்: சிற்ப வேலைப்பாடு மிக்க கோயில் இது. தூண்களை தட்டினால் இசை ஒலி எழுந்து மனதை மயக்கும். தாரமங்கலம் கைலாசநாதர் கோயில், திருச்செங்கோடு ¬முருகன் கோயில், மதுரை திருமலை நாயக்கர் மஹால் ஆகியவற்றுடன் இந்த கோயிலும் ஒரே காலத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்டதாக தலவரலாறு சொல்கிறது. இங்குள்ள பிரமாண்டமான சிற்பங்களே அதற்கு சாட்சி. அசுரனை வதை செய்யும் வீரர்கள் குதிரை, யானை, யாழி, சிங்கம் ஆகியவற்றின் மீது அமர்ந்துள்ள சிலைகள் கண்ணைக் கவரும். ராமர் பட்டாபிஷேக காட்சி, பரதன், சத்ருக்னன், லட்சுமணன் கற்சிற்பங்களை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஒரு தூணில் திருமலை நாயக்கர் தன் தேவியுடன் காட்சி தருகிறார்.
சிற்பக்கலைக்கு மட்டுமல்ல. ஓவியக் கலைக்கும் பெயர் பெற்றது இக்கோயில். இவ்வளவு ஆண்டுகளாகியும் காலத்தால் அழியாத அன்றைய அற்புத ஓவியங்கள் கோயிலின் உத்தரத்தில் பார்ப்போரை சிலிர்ப்படைய வைக்கிறது. கோயில் முகப்பில் பெருமாளின் தசாவதார சுதை சிற்பங்கள் உள்ளன. ராஜகோபுரத்துடன் அமைந்த ராமர் கோயில்கள் தமிழகத்தில் குறைவு. இக்கோயிலில் ராஜகோபுரமும் இருப்பதால், ராம தரிசனத்தால் கிடைக்கும் வெற்றியுடன், கோடி நன்மையும் பெற்று வரலாம். உற்சவர் சிலைகள் தனி சந்நிதியில் உள்ளன.
கருவறை அமைப்பு: துவார பாலகர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றதும், இடமிருந்து வலமாக ஆஞ்சநேயர், சத்ருக்கனன், பரதன், ராமர், சீதை, லட்சுமணன், சுக்ரீவன், விபீஷணர் வீற்றிருக்கின்றனர்.
இருப்பிடம்: சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் அயோத்தியா பட்டணம் உள்ளது.
போன்: கோயிலில் போன் இல்லை. சேலத்திலுள்ள கோயில் நிர்வாக அதிகாரி அலுவலக எண்: 0427- 241 9188.

