/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
ஓணம் வந்நல்லோ... திருக்காக்கரை செல்வோமா
/
ஓணம் வந்நல்லோ... திருக்காக்கரை செல்வோமா
ADDED : செப் 05, 2016 10:35 AM

ஓணம் பண்டிகையை ஒட்டி எர்ணாகுளம் அருகிலுள்ள திருக்காக்கரை அப்பன் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வரலாம்.
தல வரலாறு : மகாபலிசக்ரவர்த்தி கேட்டவர்க்கு கேட்டதை எல்லாம் கொடுப்பவர். அசுர குலத்தில் பிறந்தாலும் மிகவும் நல்லவர். ஆனால் தர்மம் செய்வதில் தன்னை விட தலை சிறந்தவர் யாருமில்லை என்ற அகந்தை அவரிடம் இருந்தது. இதையறிந்த மகாவிஷ்ணு அவரது அகந்தையை அடக்க குள்ள வடிவெடுத்து வாமனர் என்ற பெயரில் வந்தார்.
மகாபலியிடம் மூன்றடி நிலம் கேட்டார். “தாங்கள் குள்ளமானவர். உங்கள் காலுக்கு மூன்றடி நிலம் கேட்கிறீர்களே. அது எதற்கும் பயன்படாதே, அதிகமாக கேட்கலாமே!” என்றார் மகாபலி. அவரது குல குரு சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்து, தானம் கொடுப்பதைத் தடுத்தார். கேட்டவர்க்கு இல்லை என்று சொன்னால், இதுவரை செய்த தானம் பலனில்லாமல் போய்விடும் என நினைத்த மகாபலி, குருவை மீறி தானம் அளிக்க
சம்மதித்தார்.
விஷ்ணு விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் பூமியையும், இன்னொரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், “மூன்றாவது அடிக்கு நிலம் எங்கே?” என கேட்டார். மகாபலி அகந்தை அடங்கி தலை வணங்கி நின்றான்.
“பகவானே! இதோ என் தலை இதைத்தவிர என்னிடம் வேறெதுவும் இல்லை,” என்றார். பெருமாள் அவனை அப்படியே பூமியில் அழுத்தி ஆட்கொண்டார். மகாபலி அவருடன் கலந்து விட்டார். இந்த சம்பவம் நடந்த இடம் எர்ணாகுளம் அருகிலுள்ள காட்கரை. இங்கே பெருமாள் காட்கரையப்பன் (வாமனர்) என்ற பெயரில் கோவில் கொண்டுள்ளார். வாமனரின் மார்பில் தங்கி அவருடன் வந்த தாயாருக்கு பெருஞ்செல்வநாயகி என்றும், வாத்ஸல்யவல்லி என்றும் பெயர் சூட்டப்பட்டது.
சிறப்பம்சம்: திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. கேரளத்தின் பழமை வாய்ந்த கோவில். தமிழ் கல்வெட்டுக்கள் இங்கு உள்ளது. கோவிலுக்கு வெளியே தேவி பகவதி, சாஸ்தா, சுந்தர யக்க்ஷி, கோபால கிருஷ்ணன், நாகர் ஆகியோர் உள்ளனர். இக்கோவிலை பரசுராமர் நிறுவியுள்ளார். கோவிலின் நுழைவு வாயிலில் மகாபலியின் ஆஸ்தானம் இருந்துள்ளது. இந்த இடத்தில் தற்போது ஒரு சிம்மாசனம் அமைக்கப்பட்டுள்ளது. முகப்பில் உள்ள மண்டபத்தில் பெருமாள் வாமனராக, குள்ள வடிவம் எடுத்து வரும் காட்சி மரத்தில் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
திருவிழா: ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் துவங்கி திருவோண உற்சவம் பத்து நாட்கள் நடக்கும். ஒரு காலத்தில் 28 நாள் திருவிழா நடந்துள்ளது.
நேரம் : காலை 5:00 - 11:00, மாலை 5:00 - இரவு 8:00 மணி.
இருப்பிடம்: எர்ணாகுளத்திலிருந்து 20 கி.மீ.

