/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
பரிக்கல் வந்தால்... பலன் கை மேல்!
/
பரிக்கல் வந்தால்... பலன் கை மேல்!
ADDED : மே 04, 2017 03:36 PM

மே 9 நரசிம்ம ஜெயந்தி
விழுப்புரம் மாவட்டம் பரிக்கல் என்னும் தலத்தில் லட்சுமிநரசிம்மர் கோவில் உள்ளது. பதவி உயர்வு பெறவும், இழந்த பதவியை மீண்டும் பெறவும் நரசிம்ம ஜெயந்தியன்று இங்கு வழிபட கை மேல் பலன் கிடைக்கும்.
தல வரலாறு : மன்னர் வசந்த ராஜன் நரசிம்ம பக்தனாக விளங்கினான். குருநாதர் வாமதேவ ரிஷிமூலம் யாகம் நடத்த ஏற்பாடு செய்தான். அண்டை நாட்டு மன்னர்களுக்கு அழைப்பு விடுத்தான்.
ஆனால், பரிகலாசுரன் என்னும் அசுரன், யாகத்தை தடுக்க படையுடன் வந்தான். அப்போது குருநாதர் மன்னனைக் காப்பாற்ற எண்ணி, 'அமிர்தாக்ஷ்ர' என்ற மந்திரம் உபதேசித்து, அருகிலுள்ள புதரில் மறைந்து கொள்ளச் செய்தார்.
ஆனாலும் அசுரன் மன்னனைக் கோடாரியால் தாக்கினான். இதைக் கண்ட நரசிம்மர் ஆவேசமுடன் அங்கு தோன்றி, அசுரனைக் கொன்றார். பரிகலாசுர வதம் நிகழ்ந்த இத்தலம் 'பரிக்கல்' என பெயர் பெற்றது. மன்னன் சுவாமியிடம், “பக்தர்களின் குறை தீர்க்க இங்கு சாந்த நரசிம்மராக எழுந்தருள வேண்டும்,”என வேண்டினான். இதனடிப்படையில் இங்கு கோவில் உருவாக்கப்பட்டது.
கனவில் உத்தரவு காலப்போக்கில் இக்கோவிலில் பூஜையின்றி போனதால், மூலவர் சிலை புற்றில் மறைந்தது. பேசும் திறன் இல்லாத பக்தர் ஒருவரின் கனவில் நரசிம்மர், தான் புற்றில் இருப்பதாகவும், மீண்டும் பிரதிஷ்டை செய்யும்படி உத்தரவிட்டார். ஊர் மக்களின் உதவியுடன் நரசிம்மர் சிலை தோண்டி எடுக்கப்பட்டு புதிய கோவில் கட்டப்பட்டது.
எழுதும் வழிபாடு: மூலஸ்தானத்தில் லட்சுமி நரசிம்மரும், தனி சன்னதியில் கனகவல்லி தாயாரும் வீற்றிருக்கின்றனர். பிரகாரத்தில் வீர ஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயருக்கு சன்னதி உள்ளது.
இவருக்கு முன் நெல்லை கொட்டி அதில் கோரிக்கைகளை எழுதி வழிபட்டால் விருப்பம் நிறைவேறும் என்பது ஐதீகம். பிரகாரத்தில் வடக்கே வரதராஜர், தென்கிழக்கே விநாயகர், கோவில் எதிரே கருடன் வீற்றிருக்கின்றனர். ஊருக்கு வடமேற்கில் சக்கர தீர்த்தம் உள்ளது.
மாறுபட்ட கோலம்: லட்சுமியை தழுவிய நிலையில் நரசிம்மர் காட்சியளிப்பது வழக்கம். ஆனால், இங்கு நரசிம்மரை லட்சுமியும், லட்சுமியை நரசிம்மரும் ஒருவருக்கொருவர் தழுவியபடி இருப்பது மாறுபட்ட அமைப்பாகும்.
எப்படி வழி : விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை சாலையில் 21 கி.மீ.,யில் கெடிலம். இங்கிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ.,யில் பரிக்கல்.
நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 6:00 - 8:00 மணி
அலைபேசி: 99442 38917, 99438 76272

