/
ஆன்மிகம்
/
இந்து
/
கட்டுரைகள்
/
திருமணத்தை பார்த்தால் திருமணம் நடக்கும்
/
திருமணத்தை பார்த்தால் திருமணம் நடக்கும்
ADDED : செப் 19, 2023 12:27 PM

தமிழகத்தில் விநாயகர் என்றால் பிரம்மச்சாரி. ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் உள்ள வெயிலுகந்த விநாயகர் தனது மனைவிகளான சித்தி, புத்தியுடன் காட்சி தருகிறார். இவரது திருமணக்கோலத்தை தரிசித்தால் உங்களுக்கும் திருமணம் கைகூடும். எப்போது இந்த நிகழ்ச்சி நடக்கும்?
ராமநாதபுரத்தில் சேதுகடற்கரை சாலை எனப்படும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது உப்பூர். இந்த கிராமம் முன்பு 'லவணபுரம்' என வழங்கப்பட்டது. 'லவனம்' என்பதற்கு தமிழில் உப்பு என்று பொருள். இதிலிருந்து உப்பூர் என பெயர் வந்தது. சூரியபகவானல் வணங்கப்பட்டதால் சூரியபுரி, தவசித்திபுரி, பாவவிமோசனபுரம் ஆகிய பெயர்களும் வந்தன. வன்னி, மந்தாரம் ஆகிய மரங்கள் இங்கு இருந்ததால் வன்னிமந்தாரவனம் எனவும் அழைக்கப்பட்டது.
தட்சனின் மகளான தாட்சாயிணியை சிவபெருமான் திருமணம் செய்திருந்தார். ஆணவம் கொண்ட தட்சன் ஒருமுறை தேவர்களை அழைத்து யாகம் நடத்தினான். அதற்கு மருமகனான சிவபெருமானை மட்டும் அழைக்கவில்லை. இதில் சூரியபகவானும் கலந்து கொண்டு சிவபெருமானின் கோபத்திற்கு ஆளானார். இதற்கு பரிகாரமாக பாண்டிய நாட்டில் கீழக்கடற்கரை ஓரமாக தேவிபுரம், காளிபுரம், திருப்புனவாசல் ஆகிய தலங்களுக்கு அருகே உள்ள வன்னிமந்தாரவனம் என்ற பகுதிக்கு வந்தார். இங்குள்ள விநாயகரை துதித்து தவத்தில் ஈடுபட்டார். இதனால் மகிழ்ந்த விநாயகர் அவர்முன் காட்சியளித்து, பாவத்தை போக்கினார்.
தனக்கு அருள்புரிந்ததுபோல் பக்தர்களுக்கும் அருள் வழங்குமாறு சூரியபகவான் வேண்டினார். அதோடு விநாயகரின் திருமேனி மீது தனது ஒளிக்கதிர்கள் விழுந்து வணங்க வழிகாட்டுமாறும் வரம் பெற்றார். இதனால் இவர், 'வெயிலுகந்த விநாயகர்' என்ற பெயர் பெற்றார். இவர் மீது தட்சிணாயன காலத்தில் தெற்கு பகுதியிலும், உத்தராயண காலத்தில் வடக்கு பகுதியிலும் சூரியக்கதிர்கள் படுகிறது.
தமிழகத்தில் முதன்முதலாக விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருமணம் இங்கேதான் நடக்கிறது. சதுர்த்திக்கு முதல் நாள் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விநாயகரை தரிசித்தால் திருமணத்தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இது மட்டும் அல்ல. ஸ்ரீராமபிரானுக்கு ஆசி வழங்கியவரும் இவர்தான். அனுமன் மூலம் சீதையின் இருப்பிடத்தை அறிந்தார் ஸ்ரீராமபிரான். பின் வானர சேனைகளுடன் பிரச்சிரவன மலையிலிருந்து வந்து விநாயகரை வணங்கினார். அவரது நல்லாசியை பெற்று சேதுக்கரை நோக்கி பயணம் செய்து வெற்றியும் பெற்றார்.
எப்படி செல்வது: ராமநாதபுரத்தில் இருந்து 31 கி.மீ.,
விசேஷ நாள்: விநாயகர் சதுர்த்தி
நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
அருகிலுள்ள தலம்: தேவிபட்டினம் உலகநாயகி அம்மன் கோயில் 17 கி.மீ., (எதிரி தொல்லை தீரும்)
நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி
தொடர்புக்கு: 94444 57971, 04567 - 221 213